அமானுஷ்யம் - V (v) - பேரச்சம்

அமானுஷ்யம் - V (v)

பேரச்சம்

~
ரவியின் பயமும், அரற்றலும் கொஞ்சமும் குறையவில்லை.

மைதீன் டாக்டரிடம் அழைத்து செல்வது என அவன் அம்மா முடிவெடுத்தார்.  அவரால் மட்டும் தான் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நம்பினார்.
~

ரவியை அழைத்துக்கொண்டு மைதீன் டாகடரிடம் சென்றார் அவன் அம்மா. 

நடந்த விவரங்கள் அனைத்தையும் அவரிடம் கூறினார். ஒரே தெருவை சேர்ந்தவர் என்பதால் ஓரளவு ரவியின் பிரச்சினைகளை அறிந்திருந்த மைதீன் டாகடர் , ரவியின் அம்மா ஆறுதல் அடையும் வண்ணம் விபூதி மந்திரித்து அவனுக்கு பூசினார். தாயத்து ஒன்றை அவன் கையில் கட்டினார். பின்னர் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருந்து அவன் பிரச்சினைகளுக்கு மருந்தும் கொடுத்தார். 

சில நாட்கள் தொடர்ந்து மைதீன் டாக்டரிடம்  ரவியை அழைத்து சென்று காட்டி வந்தார் அவன் அம்மா. அவரும் அவனுக்கு விபூதி மந்திரித்து பூசிவிடுவதும், மருந்துகள் வழங்குவதுமாக இருந்தார். 

ஆச்சரியப்படத்தக்க வகையில் ரவியின் உடல்நிலை முன்னேற்றமடைய தொடங்கியது. மைதீன் டாக்டரின் அணுகுமுறையும், பயம் நீக்க அவனுக்கு அவர் அளித்த கவுன்சிலிங்கும், பாரம்பரிய மருந்துகளும் எல்லாமும் கலந்து அவன் உடல் மற்றும் மனநிலையில் மாற்றத்தை  கொண்டு வந்திருந்தன. 

அவனுடைய படிப்படியான மாற்றத்திற்கு எல்லாவற்றையும் விட ரவியின்  அம்மா அவன் உடல் மற்றும் மனநலம் மீது காட்டிய அதீத அக்கறையும், மைதீன் டாகடர் மீது அவர் வைத்த நம்பிக்கையும் தான் முக்கியமான காரணம். 

ஆனாலும் தூக்கமின்மையில் இருந்து மட்டும் அவனால் விடுபடவே முடியவில்லை. இரவு நேரங்களில் கொட்ட கொட்ட விழித்திருப்பது அவனுக்கு வாடிக்கையாகி விட்டது.  அதற்கும் ரவியின் அம்மா  ஒரு முடிவு எடுத்தார். 

கான்வென்டுக்கு எதிரே அப்போது டாகடர் ரவியின் சித்ரா க்ளினிக் இருந்தது. ரவி டாகடர் அப்போது மன்னார்குடியில் மிக பிரபலம். அவரிடம் ரவியை அழைத்துச் சென்று அவனுடைய பிரச்சினைகளை கூறினார். 

இரண்டு மூன்று நாட்கள் அங்கு அட்மிஷன். தூங்குவதற்காக தொடர்ச்சியாக அவனுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு மருந்தின் உதவியால் தூங்க ஆரம்பித்தான் அவன். 

டிஸ்சார்ஜ் ஆகி வரும்போது அவனுக்கு அந்த பிரச்சினையும் தீர்ந்துவிட்டது. 

சாதாரண நிலைக்கு திரும்பிய ரவி வழக்கம் போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். 

நிலம் தொடர்பாக அவன் அப்பா காலத்தில் இருந்தே இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்கும் ரவி குடும்பத்துக்கு  சாதகமா  தீர்ப்பாகி,  ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட ரீதியாக அப்புறப்படுத்தப்பட்டனர். 

அதன் பின்னர் அவன் தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்து, தான் திருமணம் செய்துகொண்டு இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறான். 
~
அவனுக்கு ஏற்பட்ட சோதனையில் இருந்து அவன் இனி மீண்டு வரப்போவதில்லை என்றே பெரும்பாலானோர் கருத்தியிருந்தனர். ஆனால் வெற்றிகரமாக அதை அவன் கடந்து வந்தான். 

ஆங்கில மருத்துவமோ, பாரம்பரிய மருத்துவமோ அல்லது சைதாப்பேட்டை கோவில் பூசாரியோ, ரவியின் நல்ல நேரமோ ஏதோ ஒன்று அவனை காப்பாற்றிவிட்டது. 

ஆனால் அவன் அம்மா இறுதி வரை நம்பியது மைதீன் டாக்டரிடம் சென்றதால் தான் இப்பிரச்சினைகள் தீர்ந்தன என்பதாகவே  இருந்தது. 
~
இந்த நேரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தையும் பார்க்கலாம். அது Panic Attack என்பதாகும். 

மன அழுத்தம் அல்லது கவலை, அது தரும் தொடர் பதற்றம், அதனால் ஏற்படும் பயம், தனிமையை கண்டு அஞ்சும் குணம் இவைகள் அனைத்தும் கலந்து ஒரு நபருக்கு குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் Panic Attack ஏற்படுத்தும். 

இச்சூழ்நிலையில் குறிப்பிட்ட பொருளையோ அல்லது குறிப்பிட்ட நபரையோ பார்க்கும்போது பாதிக்கப்பட்ட நபர் பேரச்சம் அடைவார்.  

அந்த பொருளோ, அல்லது அந்த நபரோ அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்ட பின்னரும் கூட அந்த குறிப்பிட்ட நபர் தன்னை தொடருவதாகவோ, அல்லது குறிப்பிட்ட பொருள் அங்கேயே இருப்பது போலவோ பாதிக்கப்பட்ட நபரின் மனதில் ஒரு எண்ணம் ஆழ்ந்து பதிந்துவிடக்கூடும். 

இந்நிலையில் தான் பீதி தாக்குதல் அதாவது Panic Attack ஏற்படுகிறது. இத்தாக்குதல் ஏற்பட்ட நபர்கள் அவர்களின் இயல்பான உணர்வுகள் மற்றும் பிரதிபலிப்புகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆகிறார்கள். 

இப்பிரச்சினை தீவிர மன அழுத்தம் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று.   இது உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினை ஆகும்.  சரியான நேரத்தில் இக்குறைபாட்டை கண்டறிந்து,  பிரச்சினையால் அவதிப்படுவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால் மற்ற உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிப்படுத்துவது போலவே இப்பிரச்சினையையும் சரியாக்கலாம். 
~
சுபம்

Comments