அமானுஷ்யம் - V (iv) - பேரச்சம்

அமானுஷ்யம் - V (iv)

பேரச்சம்
~
வாசல் கதவை சாத்தினான். ஜன்னல்களை எல்லாம் மூடினான். மூலையில் உட்கார்ந்து கொண்டான். தன்னை கொல்ல அந்த ஆள் எப்படியும் வருவான் என்று மறுபடியும் அழுதுகொண்டே புலம்ப ஆரம்பித்தான்.

திடீரென்று "வந்துட்டான்... அவன் வந்துட்டான் ...." என்று அலறிக்கொண்டே வாசற்கதவை திறந்து வெளியே ஓட பாய்ந்தான்.
~
நல்லவேளையாக வாசலில் நின்றுகொண்டிருந்த செங்குட்டுவன் நேர் எதிரே பாய்ந்து ரவியை கட்டிப்பிடித்து வீட்டினுள்ளே  தள்ளினான். 

அவனை உட்கார வைத்து நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அவனை நெருக்கி நின்றோம். அவன் கண்களில் மருட்சி. 

"என்னடா ஆச்சு.. சொல்லு.." என்று செங்குட்டுவன் அதட்டியதும் ரவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது. அவன் மெதுவே சொல்ல தொடங்கினான். 
~
ரவி அறையை காலி செய்து  அலுவலகம் அமைந்திருந்த பூட் பங்களாவுக்கு போனது முதல் அவனுக்கு அங்கு இரவு நேரங்களில் விசித்திரமான அனுபவங்கள் ஏற்பட தொடங்கின. யாரோ இவனிடம் பேசுவது போலவும், இவனை வெளியே வருமாறு அழைப்பது போலவும் அடிக்கடி ஒரு உணர்வு தோன்ற ஆரம்பித்திருக்கிறது. 

கொஞ்ச நாட்களில் அந்த குரல் அவனுக்கு மிக பழகிய குரலில் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. ரவியின் குடும்பத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒருவரது குரல் என்று அவனுக்கு புரிய ஆரம்பித்ததும் அவனுக்கு பயம் கவ்வ தொடங்கியிருக்கிறது. தன்னை கொல்ல  மேற்படி நபர் தன்னை தொடர்வதாக அவன் பலமாக நம்ப ஆரம்பித்திருந்தான். அந்த நம்பிக்கை அவனுக்குள் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. 

அச்சத்தின் உச்சத்தில் ஆட்டோவில் ஏறி எங்கள் அறைக்கு வந்துவிட்டான். 
~
நானும் செங்குட்டுவனும் அவனை அருகில் இருந்த 24 மணி நேர கிளினிக் ஒன்றிற்கு அழைத்து சென்றோம். அங்கிருந்த மருத்துவர் அவனை சாதாரண பேஷண்ட் போல் ட்ரீட் செய்து ஒரு ஊசியும் சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்து அனுப்பி விட்டார்.

வெளியே வந்த அவனை  முதியவர் ஒருவர்  உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் அவர் எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தான். 

"ஆசுபத்திரி எல்லாம் சரிப்படாது.. பக்கத்துல இருக்கற அம்மன் கோவில் பூசாரிக்கிட்டே கூட்டிட்டு போங்க.." என்றார்.

வா கோவிலுக்கு போகலாம் என்று அவனை அழைத்துக்கொண்டு செங்குட்டுவன் கோவிலுக்கு சென்றான். அங்கு பூசாரியிடம் நடந்தவைகளை சொன்னான். அவர் திருநீறு மந்திரித்து அவன் நெற்றியில் பூசி தலையில் கொஞ்சம் தெளித்து விட்டார். பழைய பேப்பரில் நிறைய திருநீறு எடுத்து பொட்டலம் கட்டி "அப்பப்போ நெத்தியில் இதை பூசிக்கோ ..." என்று அதிகார தொனியில் கூறினார். அம்மனை கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

இரவு யாரும் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. கொட்ட கொட்ட விழித்தபடி ஒவ்வொருவரையும் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரவி. 
~
விடிந்ததும் ரவியை ஊருக்கு அழைத்து சென்று அவன் வீட்டில் விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம். அவனை அழைத்துக்கொண்டு செங்குட்டுவன் மன்னார்குடிக்கு புறப்பட்டான். 

செல்லும் வழியெல்லாம் ரவியின் அரற்றல்கள் தான். பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர்களுக்கு முதல் நாள் பூசாரி கொடுத்த திருநீறை கொடுத்து பூசிக்கொள்ள சொன்னான். 

நல்லபடியாக ரவியை அவன் வீட்டில் ஒப்படைத்து விட்டு செங்குட்டுவன் சென்னை திரும்பினான்.

ரவியின் அம்மா அவனை முதலில் லோக்கலில் உள்ள மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார். ஒன்றும் சரிவரவில்லை. யாரோ சொன்னார்கள் என்று தஞ்சாவூரில் உள்ள பிரபல நரம்பியல் நிபுணர் ஒருவரிடம் அழைத்து சென்றார். அங்கு ஏகப்பட்ட பரிசோதனைகள். ஏற்கனவே பின்னங்கழுத்தில் அடிபட்ட பாதிப்பு என்று இறுதியாக முடிவு செய்து அதற்கான மருந்து மாத்திரைகள் அளித்தனர்.

ஆனால் ஒன்றுமே அவன் பிரச்சினையை தீர்க்கவில்லை.. 

ரவியின் பயமும், அரற்றலும் கொஞ்சமும் குறையவில்லை. 

மைதீன் டாக்டரிடம் அழைத்து செல்வது என அவன் அம்மா முடிவெடுத்தார். 

அவரால் மட்டும் தான் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நம்பினார். 

(தொடரும்..)

Comments