அமானுஷ்யம் - V (iii) - பேரச்சம்
அமானுஷ்யம் - V (iii)
பேரச்சம்
~
சென்னையில் சந்திக்கப்போகும் திகில் அனுபவங்கள் பற்றி ஏதும் அறியாமலேயே சந்தோஷமாக சென்னை வந்து சேர்ந்தான் ரவி.
:::
இப்போது மைதீன் டாக்டர் பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பார்த்துவிடுவோம்.
மைதீன் டாக்டர் வைத்தியம் மட்டும் பார்க்கும் டாக்டர் அல்ல. அவர் கிளினிக்கில் வரிசையாக அனைத்து மத கடவுளர்களின் படங்களும் மாட்டப்பட்டிருக்கும். ஒரு தட்டு நிறைய விபூதி கொட்டி வைக்கப்பட்டிருக்கும். வேப்பிலைக் கொத்து ஒன்று அவர் டேபிளின் ஓரத்தில் இருக்கும்.
காத்து, கருப்பை பார்த்து பயந்தவர்களுக்கு மந்திரித்து விடுவார். கைக் குழந்தைகளுக்கு பாத்தியா சொல்லி ஊதி விடுவார். தேவைப்படுபவர்களுக்கு தாயத்து மந்திரித்து கட்டிவிடுவார். பில்லி சூனியம் ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ள தகட்டில் மந்திரம் எழுதி கொடுப்பார்.
நம்பிக்கையுடன் நிறைய பேர் இவற்றிற்காக அவரை தேடி வருவார்கள். அவரை தேடி வருபவர்களின் லிஸ்டில் எல்லா தரப்பு மக்களும் இருப்பார்கள்.
~
திண்டுக்கல் ரவியிடம் வருவோம்.
ஊரிலிருந்து புறப்பட்டவன் நேராக கோடம்பாக்கத்தில் உள்ள எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான்.
அந்த அறையில் அப்போது நான்,மற்றும் பாலு, பாலுவின் தம்பி செங்குட்டுவன், சன் டிவி ஆனந்த்கீதன், இன்னொரு நண்பன் நாகராஜ் ஆகியோர் இருந்தோம். எங்களுடன் ரவியும் இணைந்து கொண்டான்.
ஆரம்பத்தில் கலகலவென்று நாட்கள் நகர்ந்தன. ஒரே அரட்டை, சிரிப்பு, சந்தோசம் தான். பின்பு இட நெருக்கடி காரணமாக ஒவ்வொருவராக அறையில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு நகர தொடங்கினர்.
முதலில் பாலுவும், செங்குட்டுவனும் வேறு இடம் பார்த்துக் கொண்டு சைதாப்பேட்டைக்கு சென்றனர். எனக்கு டிரான்ஸ்பர் கிடைத்ததால் நானும் மன்னார்குடி வந்துவிட்டேன்.
அலுவலகத்திலேயே தங்கி கொள்வதாக கூறிவிட்டு கொஞ்ச நாட்கள் கழித்து ரவியும் அறையை காலி செய்துவிட்டான்.
அவன் அலுவலகம் பல்லாவரத்துக்கும் மீனம்பாக்கத்துக்கும் நடுவில் GST ரோட்டில் இருந்து உள்ளடங்கி இருந்தது. பிரிட்டிஷ் காலத்து மிக பெரிய கட்டிடம்.
எல்லாமே நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
பதவி உயர்வில் சில மாதங்கள் கழித்து நான் மீண்டும் சென்னை வந்தேன். என் நண்பன் பாலு தங்கியிருந்த சைதாப்பேட்டை அறையில் அவனுடன் இணைந்து கொண்டேன்.
இப்போது அறையில் நான், பாலு, அவன் தம்பி செங்குட்டுவன் மற்றும் சமீபத்தில் அகால மரணமடைந்த பிரபு (பாலுவின் அக்கா மகன்) ஆகிய நான்கு பேர் இருந்தோம்.
வார இறுதி விடுமுறை நாட்களில் திண்டுக்கல் ரவி சைதாப்பேட்டை வந்து எங்களுடன் தங்கியிருப்பான். அவனுக்கும் பாலுவுக்கும் சூப்பர் பொருத்தம். ஒருவரை ஒருவர் எப்போதும் கலாய்த்துக் கொண்டேயிருப்பார்கள். கலகலப்பாக வார இறுதி நாட்கள் கழியும்.
திடீரென்று சில வாரங்களாக ரவி எங்கள் அறைக்கு வரவில்லை. ஊருக்கு சென்றிருப்பான் போலிருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. அறை வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
ஆட்டோவில் இருந்து இறங்கி அறைக்குள் பாய்ந்தான் ரவி. அவன் முகம் வெளிறியிருந்தது. ரெஸ்ட்லெஸ் ஆக இங்கும் அங்கும் அலை பாய்ந்தான். ஏதேதோ புலம்பி கொண்டேயிருந்தான். நாங்கள் குழப்பமானோம்.
ஆட்டோக்காரரிடம் விவரம் கேட்டோம். அவருக்கு விவரம் எதுவும் தெரியவில்லை. சைதாப்பேட்டைக்கு போக வேண்டும் என்று சொன்னார் சார். கரெக்ட்டாக வழி காண்பித்தார். நான் அழைத்துக் கொண்டு வந்தேன், வேறு எதுவும் எனக்கு தெரியாது சார் என்றார். ஆட்டோவை கட் பண்ணி அனுப்பினோம்.
தண்ணீர் கொடுத்தோம். குடித்தான். எங்களை எல்லாம் வெறித்து பார்த்தான். அவன் வழக்கமான ரவி ஆக இல்லை. மிகவும் பயந்திருக்கிறான்.
அவனிடம் பேச்சு கொடுத்து பார்த்தோம். வெறிக்க வெறிக்க எங்கள் அத்தனை பேரையும் மாறி மாறி பார்த்தான். ஒன்றும் பேசவேயில்லை.
கொஞ்ச நேரம் கழித்து யாரோ ஒரு நபரின் பெயரை சொல்லி அந்த ஆள் தன்னை கொல்ல வருவதாக பயந்தபடியே சொன்னான்.
வாசல் கதவை சாத்தினான். ஜன்னல்களை எல்லாம் மூடினான். மூலையில் உட்கார்ந்து கொண்டான். தன்னை கொல்ல அந்த ஆள் எப்படியும் வருவான் என்று மறுபடியும் அழுதுகொண்டே புலம்ப ஆரம்பித்தான்.
திடீரென்று "வந்துட்டான்... அவன் வந்துட்டான் ...." என்று அலறிக்கொண்டே வாசற்கதவை திறந்து வெளியே ஓட பாய்ந்தான்.
(தொடரும்...)


Comments
Post a Comment