அமானுஷ்யம் - V (ii) - பேரச்சம்

அமானுஷ்யம் - V (ii)

பேரச்சம்

இப்பேற்பட்ட மைதீன் டாக்டர் வெறும் மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடும் டாக்டர் மட்டுமேயல்ல. அவரை அதற்கு மட்டுமே எல்லோரும் தேடி வருவதில்லை.

அவர் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அக்கூட்டத்தில் சாதாரண ஏழை ஜனங்களும் இருப்பார்கள். வசதியான வீட்டு ஆட்களும் இருப்பார்கள்.

அவர்கள் எல்லோரும் மருத்துவத்திற்காக மட்டுமே அங்கு வருவதில்லை.

மைதீன் டாக்டரும் மருத்துவம் மட்டுமே பார்ப்பவர் அல்ல.
~

மைதீன் டாக்டருடன் பின்னர் இணைவோம்.

உப்புக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்தபோது பக்கத்து வீட்டில் தபால்கார அம்மா என்று ஒருவர் இருந்தார். அவர் வீட்டுக்காரர் தபால்காரராக இருந்ததால் இவருக்கு அந்த பெயர். 

தபால்கார அம்மாவின் பேரன் ரவி. இந்த ரவிக்கும் எனக்கும் 40 நாட்கள் தான் வயசு வித்தியாசம். என்னை விட 40 நாட்கள் மூத்தவன். 

ரவி எங்களின் நெருங்கிய தோழன். ஒரே பள்ளி. ஒரே வகுப்பு. பெரும்பாலான நேரங்களில் எங்கள் வீட்டில் தான் இருப்பான். சேர்ந்தே சாப்பிடுவோம். சேர்ந்தே விளையாடுவோம். சேர்ந்தே தூங்குவோம். அவன் அப்பா,அம்மா, பாட்டி எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். 

ரவி சிறுவனாக இருந்தபோது  சற்றே மனநிலை சரியில்லாமல் இருந்த அவன் உறவினர் ஒருவர்  அவன் தூங்கிக்கொண்டிருக்கும் போது அம்மி குழவியை எடுத்து அவன் மேல் போட்டுவிட்டார். 

குப்புற படுத்திருந்த அவனின் கழுத்து பகுதியில் அம்மிக்குழவி விழுந்து  கொஞ்ச நாள் ஆஸ்பத்திரி வாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது. பிறகு ஒருவழியாக குணமாகி  மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்தான். இதனால் அவன் ஒரு ஆண்டு என்னை விட படிப்பில் பின் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

இது ஒரு பக்கம் என்றால் அவர்கள் வீட்டின் பின் பகுதியில் ஒரு நாலைந்து குடும்பங்கள் குடியிருந்து வந்தனர். . பல வருடங்களாக அவர்கள்  வாடகையும் கொடுக்காமல், இடத்தை காலி செய்தும் கொடுக்காமல் வம்படியாக பிரச்சினை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடனான வழக்கு, வியாஜ்ஜியங்கள் என்று ரவியின் அப்பா மன்றாடிக் கொண்டிருந்தார். 

இந்த மன உளைச்சல் காரணமாக  அவன் தந்தை,  ரவி படித்துக் கொண்டிருக்கும்போதே,   இறந்துவிட்டார்.  அவர் பணியாற்றிய பொதுப்பணி துறையில் ரவிக்கு கருணை அடிப்படையில் வேலை   கிடைத்தது. 

முதல் போஸ்டிங் திண்டுக்கல் அருகே மேலூர். அங்கேயே அலுவலகத்தில் தங்கி கொண்டான். மாதம் ஒரு முறை ஊருக்கு வருவான். 

தெருவிலே இப்போது இரண்டு மூன்று ரவி  வந்துவிட்டதால்  இவனை திண்டுக்கல் ரவி என்று கூப்பிட ஆரம்பித்தோம்.   இந்த பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. 

இவனை தவிர போஸ்ட்மேன் ரவி, மிக்சர் ரவி என்று மேலும் சிலரும் தெருவில் இருந்தனர். 

திண்டுக்கல் ரவி ஊருக்கு வந்தானென்றால் விடுமுறை முழுக்க எங்கள் வீட்டிலேயே இருப்பான். மேலூரில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்த ராமராஜன் பின்னாளில் தமிழ் திரை உலகில் எப்படி பிரபலமானார் என்பதை ஆச்சரியத்துடன் ஒவ்வொரு முறையும் எங்களிடம் சொல்வான். 

ஆரம்பத்தில் அந்த ஊரை மிகவும் ரசித்த ரவிக்கு சில மாதங்கள் கழித்து வேறு விதமான அனுபவங்கள் அங்கு ஏற்பட துவங்கியது. 

மேலூரில் இவன் தங்கியிருந்த அலுவலக வளாகத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக ஊருக்கு வரும்போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தான். மாதம் ஒருமுறை வந்துகொண்டிருந்தவன் இப்போது பயம் காரணமாக எல்லா வார இறுதி நாட்களிலும் ஊருக்கு வந்துபோக ஆரம்பித்தான். 

மேலூரில் இருக்கும்போது நடு இரவில் யாரோ பேசுவது போன்ற குரல்கள் கேட்பதாகவும், சிரிப்பு சத்தங்கள் கேட்பதாகவும் சொல்வான். சீக்கிரமாக அந்த ஊரை விட்டு வந்துவிட வேண்டும் என்றும் பயந்தபடி சொல்வான். 

மேல் அதிகாரிகளின்  கை கால்களில் விழுந்து  ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு திருத்துறைப்பூண்டிக்கு வந்து சேர்ந்தான். திருத்துறைப்பூண்டி மன்னார்குடியில் இருந்து 30 கிமி தூரம் தான். அலுவலகத்துக்கு தினசரி பஸ்ஸில் போய் வருவான். 

திருத்துறைப்பூண்டி வந்தபின்  ஒருவழியாக அவன் அமைதி ஆனான். பழையபடி கலகலப்பாக வலம் வர ஆரம்பித்தான். 

விதி மறுபடியும் அவன் வாழ்க்கையில் விளையாடியது.  திருத்துறைப்பூண்டியில் இருந்த அவனுடைய அலுவலகம் மூடப்பட்டு அதில் வேலை பார்த்த அலுவலர்கள் பல்வேறு ஊர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டனர். 

இவனை சென்னைக்கு மாற்றினார்கள். 

சென்னையில் சந்திக்கப்போகும் திகில் அனுபவங்கள் பற்றி ஏதும் அறியாமலேயே சந்தோஷமாக சென்னை வந்து சேர்ந்தான். 

(தொடரும்...)

Comments