TRANCE - Malayalam (2020)

சினிமா

TRANCE (2020) Malayalam


ற்புத சுகமளிக்கும் சுவிசேஷ கூட்டங்களையும், அதன் நற்செய்தி யாளர்களையும், அக்கூட்டங்களின் பின்னனியில் மிகப்பெரிய அளவில் பணம் குவிக்கும் கார்ப்பொரேட்களையும் உரித்தெடுக்கும் இப்படி ஒரு படம் திரைக்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம். 

தமிழ் சூழலில் முற்போக்கு முகமூடி அணிந்த எந்த ஒரு படைப்பாளியும் தொட அஞ்சும் சப்ஜெக்ட் இது.

கெத்தாக படத்தை இயக்கி திரைக்கு கொண்டு வந்த இயக்குனர் அன்வர் ரஷீதுக்கு முதலில் ஒரு சலாம். 
~

Spoilers Ahead

கன்னியாக்குமரியில் மோடிவேஷனல் ஸ்பீக்கராக இருக்கும் விஜு பிரசாத் (பகத் பாஸில்)  வாழ்வு சோகமயமானது. 

சிறு வயதில் தந்தை தற்கொலை செய்துகொள்ள அதன் தொடர்ச்சியாக தாய், சகோதரி ஆகியோரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனால் மன நிலை பாதிக்கப்பட்ட தனது தம்பி குஞ்ஞனை கண்ணைப்போல் காப்பாற்றவேண்டிய பொறுப்பு விஜுவுக்கு. ஆனாலும் மன அதீத அழுத்தத்தால் குஞ்ஞனும் ஒரு நாள் தற்கொலை செய்துகொள்கிறான்.

விஜு கன்னியாக்குமரியில் இருந்து மும்பை வருகிறான். அங்கு உணவகம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் இருக்கும் விஜுவுக்கு சாலமன் மற்றும் ஐசக் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு வருகிறது.

சாலமனும், ஐசக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத விஜுவுக்கு சுவிசேஷ கூட்டங்கள் பற்றியும் அதன் மூலம் வரும் பெரிய வருமானம் பற்றியும் ஆசை வார்த்தைகள் கூறி அவனை பாஸ்ட்டராக ஆகுமாறு வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். 

பாஸ்டர் ஆகவேண்டி அவரச்சன் என்பவரை விஜுவுக்கு ஆசானாக நியமிக்கிறார்கள். அவர் பைபிள் பற்றியும் நற்செய்தி பற்றியும் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் பாடமெடுக்கிறார்.

விஜுவின் பெயர் ஜோஷுவா கார்ல்டன் என்று அதாவது சுருக்கமாக பாஸ்டர் JC என்று மாற்றப்படுகிறது. 

ஜோஷுவாவின் திறமையான நற்செய்தி கூட்டங்களினாலும், அற்புத சுகமளிக்கும் திறனாலும் குளோரியஸ் மினிஸ்ட்ரீஸ் என்னும் JC யின் சபை குறுகிய காலத்தில் பல நாடுகளில் பிரம்மாண்டமாக வளர்கிறது. 

பண்ணை வீடுகள், சுரங்கங்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், சொந்தமாக விமானங்கள் என்று சாலமனும், ஐசக்கும் கொழிக்கிறார்கள்.

இந்நிலையில் சாலமன் மற்றும் ஐசக்கின் பேச்சை மீறி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேருக்கு நேர் பேட்டி அளிக்க ஜோஷுவா ஒப்புக்கொள்கிறான்.

பேட்டி எடுக்கும் மேத்யூ அதை நேரலையாக ஒளிபரப்பி, இப்போதே இங்கேயே ஒரு அற்புதத்தை நிகழ்த்துமாறு பேட்டியின் நடுவே ஜோஷுவாவை கோருகிறான். 

பேட்டியின் இடைவேளையில் தந்திரமாய் சில ஏற்பாடுகள் செய்து மேத்யூவை  மயங்கி விழ வைக்கிறான் ஜோஷுவா.

கொஞ்ச நாள் இது பரபரப்பாக பேசப்பட, கடைசியில் மேத்யூ பேட்டியின் இடைவேளையில் அருந்திய குளிர்பானத்தில் கலக்கப்பட்ட டிரக் தான் மேத்யூவை செயலிழக்க வைத்தது என்ற உண்மை தெரியவர ஐசக்கும் சாலமோனும் ஜோஷுவாவிடம் சண்டை போடுகின்றனர். 

சண்டையின்போது சாலமன் கோல்ஃப் ஸ்டிக்கால் ஜோஷுவாவின் பின் மண்டையில் அடிக்க மயங்கி விழுந்து சீரியஸ் ஆகிறான். அவன் இறந்துவிடுவான் என்று எண்ணி ஜோஷுவாவுக்கு மாற்றாக இன்னொரு ஆளை பிடித்து அவனை மேடையேற பயிற்சியளிக்கும்போது ஜோஷுவா பிழைத்து விடுகிறான். 

ஜோஷுவா இப்போது தனக்கு மொத்த வருவாயில் 80 சதவீதமும் மற்றவர்களுக்கு 20 சதவீதமும் என்று கறாராக தெரிவிக்க கொஞ்சம் கொஞ்சமாக அவனை மாத்திரைகள் மூலம் கொல்ல எஸ்தரை (நஸ்ரியா) நியமிக்கிறார்கள். எஸ்தரின் மீது ஜோஷுவாவுக்கு மெல்ல காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே ஜோஷுவாவின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களின் மூலம் விசுவாச  நம்பிக்கையாளனாக மாறிய  தாமஸ் (வினாயகன்) உடல்நலமில்லாத தனது குழந்தையை ஜோஷுவாவின் பிரார்த்தனை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் குழந்தையை டாக்டரிடம் அழைத்து செல்ல மறுக்கிறான். 

அவன் குழந்தை இறக்கிறது.

எஸ்தர் தீடீரென்று மறைந்துவிடுகிறாள்.

மாத்திரைகளின் விளைவால் மன அழுத்தத்தில் இருக்கும் ஜோஷுவாவின் செய்கைகள் அவனுக்கு பைத்தியக்கார பட்டம் பெற்று தருகிறது. 

தான் ஒரு போலியானவன் என்றும், ஐசக் மற்றும் சாலமனின் நரித் தந்திரங்கள் பற்றியும் சபையின் பின்னனியில் புழங்கும் கணக்கிலடங்கா பணம் மற்றும் சொத்துகள் பற்றியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து அதை மேத்யூ மூலம் ஊடகங்களில் ஒளிபரப்ப சொல்கிறான்.

இதை அறிந்த ஐசக்கும் சாலமனும் மேத்யூவை கொல்கின்றனர். ஆனாலும் மேத்யூ உரிய இடத்திற்கு ஜோஷுவாவின் வாக்குமூலத்தை அனுப்பி அதை ஒளிபரப்ப வைத்துவிடுகிறான். 

தாமஸை சந்தித்து தான் ஒரு போலியான பாஸ்டர் என்றும் தன்னை மன்னித்துவிடுமாறும் கதறுகிறான் ஜோஷுவா.

கோபமடையும் தாமஸ், ஐசக் மற்றும் சாலமன் ஆகியோரை தீர்த்துக்கட்டுகிறான்.

இறுதியில், மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடையும் ஜோஷுவா என்னும் விஜு, தான் விரும்பி நேசித்த எஸ்தரை தேடி போகிறான்.
~

நான் எந்த படத்துக்கும் இதுவரை அப்படத்தின் கதையை விரிவாக எழுதியதில்லை. ஆனால், ஏனோ இப்படத்தின் கதையை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியதால் எழுதிவிட்டேன்.
~

ஜோஷுவா வாக நடிக்கும் ஃபகத் ஃபாஸில் விஜுவாகவும், பாஸ்டராகவும்  வாழ்ந்திருக்கிறார்.

இவரைப்போல் திறமையான நடிகர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மலையாள பட உலகுக்கு கிடைப்பது அவர்கள் பெற்ற வரம்.

இப்படத்தின் கதை வசனம் வின்செண்ட் வடக்கன். மிக மிக துணிச்சலாக இக்கதையை உருவாக்கியிருக்கிறார். அச்சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே குறைகளை நேர்மையாக சுட்டிக்காட்ட அசாத்திய தைரியம் வேண்டும். இவருக்கு இருக்கிறது அது. 

படத்தின் இயக்குனர் அன்வர் ரஷீதை,  அவரின் துணிச்சலுக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  இப்படம் வெளியிடுவதற்கு கடுமையான எதிர்ப்பை சந்தித்திருக்கிறார். 17 நிமிட காட்சி ஒன்றை அப்படியே  சென்சார் கத்திரி போட்டிருக்கின்றனர். ரிவியூ கமிட்டி வரை போய் அதை மீட்டு வந்திருக்கிறார்.
~

படத்தின் குறை என்றால் அதன் நீளம் தான். கொஞசம் கத்திரி போட்டிருக்கலாம்.

அமேசான் பிரைமில் கிடைக்கிறது. 

பாருங்கள்.

TRANCE - துணிச்சல் 👍
~

Comments