சினிமா - TRAIN TO BUSAN (Korean) (2016)

சினிமா
 
TRAIN TO BUSAN 
(Korean) (2016)


பயங்கரமான மிருகமாய் மாறும் மனிதர்களான 'ஜோம்பி" (மிருகமனிதர்கள்) பற்றி நிறைய திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்திருந்தபோதிலும், அவை எல்லாமே கிடடத்தட்ட ஒரே மாதிரி டெம்ப்லேட்டில் அமைந்ததினால்  ஒரு கட்டத்தில் 'ஜோம்பி' திரைப்படங்கள் போரடிக்கத் துவங்கிவிட்டன.

அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட,  வேறு லெவலில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான்  "Train to Busan'. 2016ம் ஆண்டு கொரிய மொழியில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் சினிமா கலை விமர்சகர்களால் பரவலான பாராட்டை பெற்றது இப்படம். அத்துடன் நில்லாமல் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வசூலிலும் உலக சாதனை புரிந்தது. 

இனி படம்.

விவாகரத்து பெற்ற சியொக்-வூ, தன் மகளின் பிறந்தநாளுக்காக மகளை அழைத்துக் கொண்டு மனைவியை பார்க்க சியோலில் இருந்து அதிவேக ரயிலில் பூசனுக்கு கிளம்புகிறார். அதே ரயிலில் ஒரு பேஸ்பால் குழு, ஒரு பணக்காரர், வயதான இரு பெண்மணிகள், கர்ப்பிணி பெண், அவளது கணவர், ஒரு ஆதரவற்றவர் என பலர் பயணிக்கிறார்கள். ரயில் கிளம்பும் தருவாயில் ஜோம்பியால்  பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரயிலில் ஏறுகிறார். அடுத்த 100 நிமிடங்கள் ரயிலுக்குள் நடக்கும் த்ரில்லர் தான் கதை. படத்தின் பெரும்பகுதி ரயிலுக்குள் தான் நடக்கிறது.

ஜோம்பியால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கும் ரயில்வே பணிப்பெண் ஜோம்பியாக மாறுகிறார். அவர் தொடங்கி மெல்ல மெல்ல ரயிலில் பயணம் செய்யும் பயணிகளில் பலர் ஜோம்பியாக மாற தொடங்குகின்றனர். 

செல்லும் வழியெல்லாம் ஜோம்பிகளின் ஆதிக்கம். அடுத்த முக்கிய நிறுத்தமான டேஜோனில் இறங்கி தப்பிக்கலாம் என நினைக்கும் மக்களுக்கு  அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்நகரம் முழுக்க மக்கள் ஜோம்பியாக மாறி திரிகின்றனர். தப்ப நினைக்கும் பயணிகளை தாக்கி அவர்களையும் ஜோம்பியாக மாற்றுகின்றனர். எஞ்சி தப்பி பிழைக்கும் சிலர் மீண்டும் ரயிலில் ஏறுகின்றனர். ரயிலில் ஏற்கனவே பயணிகளாய் இருந்து ஜோம்பியாக மாறியவர்கள் பெரும்பாலான பெட்டிகளை ஆக்கிரமித்திருக்கின்றனர்.  அந்த ஜோம்பிகள்  தப்பி ரயிலில் ஏறியவர்களை  தாக்க வெறியோடு அலைகிறார்கள். 

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் ஜோம்பியாக மாறி திரிகின்றனர். பூசன்  நகரம் மட்டும் ஜோம்பிகளில் தாக்குதலுக்கு உள்ளாகாமல் ராணுவத்தின் துணை கொண்டு தடுத்து காப்பாற்றப்பட்டிருக்கிறது. 

யார் யார் தப்பினார்கள்? தப்பியவர்கள் பூசன் நகருக்கு சென்றார்களா? ஜோம்பிகள் என்ன ஆனார்கள்? சியோ வூக் தன் குழந்தையை தாயிடம் சேர்த்தாரா என்பதை விறுவிறுப்பாக ஆக்க்ஷன் செண்டிமெண்ட் கலந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அருமையாக அளித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் யுவான் சங் ஹோ. 
~

மற்றவர்களைக் காப்பாற்ற அவகாசம் கிடைக்கும் என்பதற்காக தன் உயிரையும் விடும் மூதாட்டி.  
தங்கள் உயிர் முக்கியம் என நினைத்து பலரை ஜோம்பிகளுக்கு  இரையாக்க நினைக்கும் மனிதர்களுக்கு உயிரை விட்ட மூதாட்டியின் சகோதரி தரும் தண்டனை; 
காதலி ஜோம்பியானதும் அந்த பேஸ்பால் ஹீரோ வெடித்து அழுவது; அவளை அணைத்துக்  கொண்டே அவனும் ஜோம்பியாக மாறுவது. 
ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைப்பவர்கள் சுயநலமாய்  சண்டைபோடும் போது மனிதத்தின் உருவாக இருக்கும் அந்த சிறுமி அழுவது....

என காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் பார்வையாளர்களின் மனங்களையும் உருக  வைத்திருக்கிறார் இயக்குனர்.

எல்லா பிரச்சினைகளுக்கும் தான் தான் காரணம் என இறுதியில் ஹீரோ எடுக்கும் அந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 

நாயகன் சியோக் வூ  அடிப்படையில் ஒரு சுயநலவாதி. குடும்பத்திலும் சரி, வேலையிலும் சரி அவன்  சுயநலமாகவே இருக்கிறான். ஒருகட்டத்தில் தனக்கு உதவி என்றால் தன்னை காக்க பலர் முயற்சி செய்வதை பார்க்கும் அவன்,  தன்னுடைய சுயநலத்தை தூர  எறிந்துவிட்டு மற்றவர்களுக்காக எதிர்த்து போராடும்போது...... 

உண்மையிலேயே நம்மை பல யோசனைகளுக்குள் தள்ளுகிறது அவர் கதாபாத்திரம்.

படத்தில் நாயகனின் குழந்தையாக வரும் சூ ஆன்  தனது நடிப்பால் பெரிதும் கவர்கிறாள். தனது அப்பா சுயநலமானவர் என்பதை அறிந்து அவரை உதாசீனப்படுத்தும் காட்சியிலும், பின்னர் அவர் மாறியதும் அவரிடம் அன்பு காட்டும் சமயத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். மிருக மனிதர்களிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளில் எல்லாம் மனதில் நமக்கும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறாள்.

அதேபோல், கணவன், மனைவியாக வருபவர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான மனைவி தனது கணவனை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் கிண்டல் பேச்சைக்கூட ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பேர்வழியான கணவன், கடைசியில் சாகும் தருவாயில் பிறக்கபோகும் தனது குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படம் முழுக்க பெரும்பாலும் ரெயிலிலேயே படமாகியிருக்கிறார் இயக்குனர் யுவான்  சாங் ஹோ. படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, ரெயிலுக்குள் சென்றதும் ரெயிலைப் போலவே வேகமெடுக்கிறது. விறுவிறுப்பான கதைக்குள்  செண்டிமெண்ட் காட்சிகளும், கலகலப்பான காட்சிகளுக்கும் இடம்பிடித்திருப்பது சிறப்பு.  

ஜோம்பிகளிடமிருந்து  தப்பிக்கும் கதைகள் நிறைய பார்த்திருந்தாலும், இந்த படம் நிச்சயம் ஒரு மாறுபட்ட வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு படம் 'Train to Busan'. 

நல்ல சினிமா பார்க்க ஆர்வமுள்ள நண்பர்களே கண்டிப்பாக பாருங்கள்.  
~

Comments