இசை - Retro Music 1986 - ( I )
இசை
Retro Music 1986 - ( I )
1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரைப்படங்களில் வெளிவந்த இனிமையான பாடல்களையும், இசை அமைப்பாளர் பற்றிய விவரங்களையும் இத்தொடர் பதிவில் பார்த்து வருகிறோம்.
1985 முடிய ஐந்து ஆண்டுகள் வெளிவந்த பாடல்கள் குறித்த விவரங்களை இதுவரை பார்த்து விட்டோம்.
இனி 1986ல் வெளிவந்த இனிமையான சில பாடல்களையும், அவை இடம்பெற்ற படங்களின் விவரங்களையும், இசை அமைப்பாளர் பற்றிய செய்திகளையும் இப்பதிவில் பார்க்கலாம்.
~
1984 மற்றும் 1985 ஆகிய இரு ஆண்டுகளிலும் இளையராஜாவை தவிர்த்து பிற இசை அமைப்பாளர்களின் பாடல்கள் பெரிய அளவில் சோபிக்காதது ஒரு வருத்தமான நிகழ்வென்றால் அந்த வருத்தத்தை முற்றாக போக்கி நல்ல இனிமையான பாடல்களை, இளையராஜாவுக்கு இணையாக, ஏனைய இசை அமைப்பாளர்களும் 1986ல் வழங்கியது மகிழ்ச்சியான செய்தி.
1986ல் கிட்டத்தட்ட 108 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் இளையராஜா 34 படங்களுக்கும், சங்கர் கணேஷ் 22 படங்களுக்கும் மெல்லிசை மன்னர் 9 படங்களுக்கும், கங்கை அமரன் 7 படங்களுக்கும் இசை அமைத்திருக்கின்றனர்.
இவர்களைத் தவிர கே.வி. மகாதேவன், வி. குமார் போன்ற பழைய ஜாம்பவான்களும் ஒரு சில படங்களுக்கு இசை அமைத்திருந்தனர்.
முந்தைய சில ஆண்டுகளில் அறிமுகமாகி வேகமாக முன்னேறி வந்துகொண்டிருந்த வி.எஸ். நரசிம்மன், டி.ராஜேந்தர், சந்திரபோஸ் ஆகியோர் இந்த ஆண்டிலும் சில படங்களுக்கு இசை அமைத்திருந்தனர்.
ஆனால், 1986ன் ஆச்சரியமே புதிதாக நல்ல சில இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை உலகில் அறிமுகமானதும், பிற மொழி படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த பிரபலமான சிலர் தமிழ் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தது தான்.
~
தேவேந்திரன், சம்பத் செல்வன், தாயன்பன் போன்றோர் இந்த ஆண்டில் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்கள்.
தேவேந்திரன் தான் அறிமுகமான "மண்ணுக்குள் வைரம்" படத்தில்
1. பொங்கியதே காதல் வெள்ளம் .....
2. ஜாதி மல்லிகையே நெஞ்சிலே சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு... (SPB )
ஆகிய பாடல்கள் மூலம் வரப்போகும் ஆண்டுகளுக்கான தன்னுடைய இருப்பை வலுவாக பதிவு செய்தார்.
மற்றுமொரு அறிமுக இரட்டை இசை அமைப்பாளர் சம்பத்-செல்வன் தங்களுடைய அறிமுக படமான "ஓடங்கள்" படத்தில் இடம் பெற்ற
"காதல் பொன்மானே... உந்தன் காவல் நான் தானே" ...(KJ யேசுதாஸ்)
பாடலின் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்டு சென்றார்கள்.
"உன்னிடத்தில் நான்" படத்தின் மூலம் அறிமுகமான தாயன்பன் அதன் பிறகு சில படங்களுக்கு இசை அமைத்தார்.
1986ல் தமிழ் திரை இசை உலகில் முக்கியமான ஒரு புது வரவு யாரென்றால் மனோஜ்-கியான் இரட்டையர்கள் தான். திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற "ஊமை விழிகள்" திரைப்படத்திற்கு இந்த இசை இரட்டையர்கள் தான் இசையமைப்பாளர்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக
"தோல்வி நிலையென நினைத்தால்" பாடல் கிட்டத்தட்ட ஈழத்தமிழர்களின் Anthem ஆகவே நிலைபெற்று விட்ட பாடல். தனது திரை இசை சகாப்தம் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகு PB ஸ்ரீனிவாஸ் ரீ என்ட்ரி ஆகி, இந்த பாடலை பாடி மாபெரும் ஹிட் ஆக்கினார். இசை, பாடல் வரிகள், ஸ்ரீனிவாஸின் பேஸ் வாய்ஸ் அத்தனையும் சேர்ந்த அற்புத கலவை அந்த பாடல்.
மாமரத்து பூவெடுத்து...
கண்மணி நில்லு...
நிலைமாறும் உலகில்....
குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண ஆசை ...
ஆகிய அத்தனையும் அருமை என்றால் "ராத்திரி நேரத்து பூஜையில்.." பாடல் கலக்கல். பாடலில் வரும் டோலக் இசை பிரமாதம்.
~
1986ல் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு சிறப்பான விஷயம் பிற மொழி படங்களின் இசை அமைப்பாளர்கள் தமிழ் படங்களுக்கு இசை அமைத்து மறக்க முடியாத பாடல்களை தமிழ் இசை உலகிற்கு வழங்கியது.
கன்னட திரை உலகத்தின் பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் " நான் அடிமை இல்லை" என்னும் தமிழ் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
ஒரு ஜீவன் தான்.... பாடல் "நான் அடிமை இல்லை" படத்தின் சூப்பர் ஹிட் பாடல். இரண்டு மூன்று முறை வெவ்வேறு சூழ்நிலைகளில் படத்தில் இடம் பெறும் இப்பாடல் ஒவ்வொரு முறையும் வேறு வேறு உணர்வுகளை கேட்கும் போது கொடுத்தது.
பிரபல வங்க இசை அமைப்பாளர் ஆனந்த் சங்கர் "யாரோ எழுதிய கவிதை" என்னும் ஸ்ரீதர் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற
"யார் போகும் வழியில் விழியே போகிறாய்.." என்னும் யேசுதாஸ் பாடிய பாடல் என்றென்றும் இனிமையான ஒரு பாடல்.
1986ல் மற்றுமொரு முக்கியமான இசையமைப்பாளர் தமிழ் திரைக்கு இசை அமைக்க வந்திருந்தார். அவர் தான் மலையாள படங்களில் பிரபலமான இசையமைப்பாளர் ரவீந்திரன்.
இந்த ஆண்டில் மூன்று தமிழ் படங்களுக்கு ரவீந்திரன் இசை அமைத்திருந்தார்.
லட்சுமி வந்தாச்சு
தர்மதேவதை
ரசிகன் ஒரு ரசிகை
லட்சுமி வந்தாச்சு படத்தில் "காதல் வெண்ணிலா.. கண்ணில் வந்ததா.." பாடல் சுகம் என்றால்,
தர்ம தேவதையில் "தொடு தொடு .. வா மெல்ல.." பாடல் அருமை.
இந்த இரண்டு படங்களையும் விட "ரசிகன் ஒரு ரசிகை" பாடல்கள் இன்னமும் அற்புதம்.
ஏழிசை கீதமே... என்னும் யேசுதாஸ் பாடலும்
காற்றினிலே வரும் கீதம் ... என்னும் வாணி ஜெயராம் பாடலும் வேறு லெவல்.
தமிழில் அதிகம் கவனத்தை செலுத்தியிருந்தால் ரவீந்திரன் இளையராஜாவுக்கு ஒரு மாற்றாக உருவாகியிருக்கலாம். ஆனால் மலையாளம் தான் இவரின் முதன்மையான விருப்பமாக இருந்தது.
பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள் லிஸ்டில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மகா முக்கியமான இசை அமைப்பாளர்கள் "லட்சுமிகாந்த்-பியாரேலால்".
இவர்களின் "உயிரே உனக்காக" பட பாடல்களை யாராலாவது மறக்க முடியுமா ? அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.
பன்னீரில் நனைந்த பூக்கள் ...
தேனூறும் ராகம்...
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்...
I want to be a rich man ...
எல்லாமே அற்புதமான பாடல்கள். பாடல்களுக்காகவே படமும் சூப்பர் ஹிட் ஆனது.
~
மேலே சொன்னவைகள் ஒருபுறமிருக்க, இளையராஜாவும் அவர் பங்குக்கு இந்த 1986ல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியிருக்கிறார்.
1986ன் "பகுதி - II " ல் மேலும் தொடர்வோம்.
(தொடரும்...)


Comments
Post a Comment