இசை - Retro Music - 1984

இசை

1984


1984ல் வெளிவந்த இனிமையான சில பாடல்களையும் அவை இடம்பெற்ற படங்களின் விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம். ...
~
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது,  1984ம் ஆண்டில்  பாடல்களில் வெரைட்டி சற்று குறைந்தே காணப்படுகிறது. 

1983ம் ஆண்டை விட 1984ல் இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ் அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் 1983ம் ஆண்டை விட சற்று குறைந்த அளவிலான படங்களுக்கு தான் இசை அமைத்திருக்கிறார்.
~
மதன் தாமு, நேமிநாதன், வி.எஸ்.நரசிம்மன், பி. சீனிவாசன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகிய 5 புதிய இசையமைப்பாளர்கள்  1984ம் ஆண்டில் தமிழ் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

உரிமை தேடும் உறவு என்னும் படத்தில் மதன் தாமுவும், ஆத்தோர ஆத்தா என்ற படத்தில் நேமிநாதனும், அச்சமில்லை அச்சமில்லை படத்தில் வி.எஸ். நரசிம்மனும், தர்மகர்த்தா படத்தில் பி. சீனிவாசனும், பிள்ளையார் படத்தில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் இசை அமைப்பாளர்களாக அறிமுகமானார்கள். 
~
வி. எஸ். நரசிம்மனை தவிர வேறு யாரும் அடுத்தடுத்த  பட வாய்ப்பை பெறவில்லை. 

அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவே" "ஓடுகிற தண்ணியிலே.." ஆகிய பாடல்களின் மூலம் புகழடைந்த வி..எஸ். நரசிம்மன், அதன் பலனாய் "புதியவன்" படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார். 

 "வந்தது வசந்த காலம்.." "நானோ கண் பார்த்தேன்..." ஆகிய பாடல்கள் வி.எஸ். நரசிம்மன் இசையில் புதியவன் படத்தில்  சூப்பர் ஹிட் ஆயின. அவர் இசை பயணம் தொடர ஆரம்பித்தது. 
~
கிட்டத்தட்ட 30 படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் சங்கர் கணேஷ்  பிரம்மாண்டமான ஹிட் பாடல்களை குறைந்த அளவிலேயே கொடுத்திருக்கிறார். 

விதி படத்தில் "தேவதாசும் நானும்..." தான் 1984ம் ஆண்டில் அவரின் மிகப்பெரிய ஹிட் பாடல். 

ஓசை படத்தில் "ஒரு பாடல் நான் கேட்டேன்.." பாடல் ஷோர் ஹிந்தி படத்தில் வந்த "பியார் கா நக்மா ஹை..." என்ற பாடலின் அச்சு அசலான தழுவல். 

ஆனாலும் இன்று கேட்டாலும்   "ஒரு பாடல் நான் கேட்டேன் ..."  நெஞ்சை அள்ளித் தான்  போகிறது. 

இவை தவிர சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு ஹிட் பாடல்கள் சங்கர் கணேஷ் இசையில் இல்லை என்பது வருத்தமே. 
~
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி தமிழில் சில பல ஹிட் பாடல்கள் கொடுத்த ஷ்யாம் இந்த ஆண்டில் மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார். குழந்தை ஏசு படம் உட்பட ஓரிரு படங்களுக்கு மட்டுமே தமிழில் இசையமைத்த இவர் குழந்தை ஏசுவில் "செல்வமே தெய்வீக மலரே.." பாடலை ஹிட் ஆக்கியத்துடன் திருப்தி அடைந்து விட்டார். 

அழகு என்னும் ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே ஜி.கே. வெங்கடேஷ் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எதுவுமே ஹிட் இல்லை.

மெல்லிசை மன்னர் MSV யை விட்டு பிரிந்த பின்னர் சில படங்களுக்கு இசை அமைத்து பின்னர் அமைதி ஆகிவிட்ட TK ராமமூர்த்தி, 1984ம் ஆண்டில் "அந்த ஜூன் 16ம் நாள்" என்ற படத்திற்கு இசை அமைத்திருந்தார்.படம் வந்ததே பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. 

உறவை காத்த கிளி என்ற ஒரு படத்திற்கு மட்டுமே இசை அமைத்த  டி ராஜேந்தர்,  அந்த படத்தில் 

இந்த மல்லிகை மனசு போலே....
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி...
அடங்கொப்பன் மவனே... டண்டணக்கா ...

ஆகிய பாடல்களை ஹிட் ஆக்கினார். 

அந்த டண்டணக்கா.... இன்றைய ஜெனெரேஷனில் கூட பிரபலமான ஒரு வார்த்தை ஆகிற்று. இதன் மூலம் காலத்தை கடந்தவரானார் ராஜேந்தர். 
~
கன்னட விஜய் ஆனந்த் "நாணயமில்லாத நாணயம்" மற்றும் "ஊருக்கு உபதேசம்"ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

தெலுங்கின் ரமேஷ் நாயுடு "சுமங்கலி கோலம்" என்ற படத்திற்கு இசை அமைத்திருந்தார். 

இவர்கள் தவிர KV மகாதேவன் மற்றும் V குமார் ஆகியோர் கூட தலா ஒரு படத்திற்கு இசை அமைத்திருந்தனர்.
~
அடுத்து, மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன்.

1984ல் MSV 11 படங்களுக்கு இசை அமைத்திருந்தார். அவர் வரைபடத்தில் இந்த ஆண்டு இறங்கு முகம். 

திருப்பம் படத்தில் :
ராகங்கள் என் ஜீவிதங்கள்....
தங்க மகன் துள்ளி வந்தான்....

ஆலயதீபம் படத்தில் : 
ஆகாயம் காணாத சூரியோதயம்...

சிரஞ்சீவி படத்தில் :
அன்பென்னும் ஒலியாக.. ஆலய மணியாக..

ஆகிய பாடல்களை ஹிட் ஆகியிருந்தார். பிற படங்களில் சொல்லிக்கொள்ளும் வண்ணம் பாடல்கள் அமையவில்லை என்பதும் வருத்தமான நிகழ்வு தான். 
~
1984ம் ஆண்டின் மஹாராஜா கண்டிப்பாக இளையராஜா தான். கிட்டத்தட்ட 46 படங்களுக்கு இசையமைத்த அவர் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை அளித்துள்ளார். 

சில பாடல்களை பார்க்கலாம்.

அன்புள்ள ரஜினிகாந்த் --- தேன் பூவே பூவே வா....

தாவணி கனவுகள் : 
ஒரு நாயகன் உதயமாகிறான் 
செங்கமலம் சிரிக்குது 

எனக்குள் ஒருவன் :
மேகம் கொட்டட்டும் 
தேர் கொண்டு சென்றவன் 

இங்கேயும் ஒரு கங்கை :
சோலை புஷ்பங்களே 
தெக்கு தெரு மச்சான் 

கைகொடுக்கும் கை  --- தாழம்பூவே வாசம் வீசு 
கைராசிக்காரன் --- நிலவொன்று கண்டேன் 
கொம்பேறி மூக்கன் --- ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
மகுடி --- நீலக்குயிலே உன்னோடு நான் 

முடிவல்ல ஆரம்பம் : 
பாடி வா தென்றலே...
தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்...

மை டியர் குட்டிச்சாத்தான் --- செல்லக்குழந்தைகளே 
நாளை உனது நாள் --- வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது 
நான் மகான் அல்ல --- மாலை சூடும் வேளை 

நான் பாடும் பாடல் :
பாடவா உன் பாடலை 
தேவன் கோவில் 
பாடும் வானம்பாடி வா 
சீர் கொண்டு வா 

நல்லவனுக்கு நல்லவன் : 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு 
உன்னைத்தானே 
முத்தாடுதே முத்தாடுதே 

நீங்கள் கேட்டவை :
கனவு காணும் வாழ்க்கை 
ஓ வசந்த ராஜா

(கனவு காணும் வாழ்க்கை பாடல் ஹிந்தியில் வந்த "உப்கார்" படத்து "கஸ்மே வாதா "  பாடலின் தழுவல் என்றாலும் தமிழுக்கு தகுந்தாற்போல் இசையினை கோர்த்து இன்றுவரை மிக சிறந்த தத்துவ பாடல்களில் ஒன்றாக அந்த பாடலை அமைத்து தந்திருக்கிறார் இளையராஜா.)

நிலவு சுடுவதில்லை --- பாரிஜாதம் தரையில் பூத்தது 

நூறாவது நாள் --- விழியிலே மணி விழியில் மௌன மொழி 

(இந்த பாடல் கன்னட "கீதா" படத்தில் வெளிவந்த "ஜொதையிலே" பாடலின் தழுவல் தான். கீதா படத்திற்கும் இசை இளையராஜா தான். இதே "கீதா" படத்தில் இருந்து "நன்ன ஜீவ நீனு" பாடலின் டியூனை  தமிழில் "தேவன் தந்த வீணை..." என்று உன்னை நான் சந்தித்தேன் படத்தின் பாடலுக்கு பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.)

பூவிலங்கு :
போட்டேனே பூவிலங்கு 
ஆத்தாடி பாவாடை காத்தாட 
கண்களில் ஏதோ மின்னல் அடிக்குதடி 

புதுமைப்பெண் : 
கஸ்தூரி மானே 
காதல் மயக்கம் 

தம்பிக்கு எந்த ஊரு : 
காதலின் தீபம் ஒன்றை 
என் வாழ்விலே வரும் அன்பே வா

உன்னை நான் சந்தித்தேன் : 
தேவன் தந்த வீணை 
உன்னைக் காணும் நேரம் 
தாலாட்டு மாறிப் போனதே 
ஹே ஐ லவ் யூ 

வாழ்க்கை --- காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ 

வைதேகி காத்திருந்தாள் : 
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 
காத்திருந்து காத்திருந்து 
ராசாத்தி உன்னை 

இன்னும் நிறைய பாடல்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனாலும் நாம் இந்த அளவில் நிறுத்திக் கொள்வோம். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நான் ஏன் 1984ன் மஹாராஜா இளையராஜா என்று சொன்னேன் என்பது இப்போது புரிந்திருக்கும்.
~
பதிவின் கடைசி பத்தி இப்போது. 1984ல் எனக்கு பிடித்த பாடல்கள் மூன்று. மூன்றுமே முத்துக்கள் தான் எனக்கு. மூண்டுக்குமே இசை இளையராஜா தான்.

1. காதலின் தீபம் ஒன்று --- தம்பிக்கு எந்த ஊரு 
(எந்தக்காலத்துக்கும் பொருந்தும் காதல் கீதம்)

2. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே --- வைதேகி காத்திருந்தாள்
(ஆபோகி ராகத்தில் அமைந்த இந்த பாடலில் ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராமின் ரெண்டிஷனும் ஸ்வரக்  கோர்வையும் அற்புதம் )

3. ஓ வசந்த ராஜா --- நீங்கள் கேட்டவை 
(இந்த பாடல்  35 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல் என்றால் சத்தியமாக நம்பவே முடியாது. படாலின் ஆரம்பத்தில் வரும் prelude ... ஆஹா... சான்ஸே இல்லை. ராஜா ராஜா தான்.)
~
சுபம்

Comments