இசை - Retro Music 1982
இசை
1982
1982ல் வெளிவந்த இனிமையான சில பாடல்களையும் அப்பாடல்களின் இனிமைக்கு காரணமான இசைஞர்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
~
1970 களின் பிற்பகுதியில் இருந்தே தமிழ் திரையிசையில் நிறைய மாற்றங்கள் ஏற்படத் துவங்கிவிட்டன. குறிப்பாக பின்னனி பாடகர்கள். நிறைய பின்னணி பாடகர்கள் அறிமுகமானார்கள். SPB, யேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜாலி ஆப்ரஹாம், SN சுரேந்தர், ஜானகி, வாணிஜெயராம், ஜென்ஸி, சைலஜா, சுஜாதா போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர்கள் 1970 கள் முதலே அறிமுகமாகத் தொடங்கியிருந்தனர். அவர்களின் ஆதிக்கம் 1980களின் ஆரம்பம் முதல் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. வெரைட்டியான நிறைய குரல்களில் இனிமையான பாடல்கள் வரத் துவங்கின.
~
1981ஐ போலவே 1982லும் மெல்லிசை மன்னர் MSV, சங்கர் கணேஷ் மற்றும் இளையராஜா ஆகியோர்களின் இசையமைப்பில் வெளிவந்த படங்களே மிகவும் அதிகமாக இருந்தன.
ஆச்சரியமாக 1982ல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்த படங்களே அதிக எண்ணிக்கையில் வெளிவந்தன.
அவருக்கு அடுத்தபடியாக மெல்லிசை மன்னரும், இளையராஜாவும் இசையமைத்த படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தன.
சங்கர் கணேஷ் நிறைய படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் பெரிய ஹிட் என்று நிறைய பாடல்களை அவர்களால் வழங்க முடியவில்லை.
மூன்றுமுகம், ரங்கா, சிவந்த கண்கள், தீர்ப்புகள் திருத்தப்படலாம் போன்ற படங்களின் பாடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஹிட் ஆகின.
ரெண்டு கண்ணும் சந்தன கிண்ணம் என்ற சிவப்பு மல்லி பட பாடலும், தீர்ப்புகள் திருத்தப்படலாம் படத்தில் வரும் ராகம், தாளம் பல்லவி பாடலும் நல்ல மெலடியாக அமைந்திருந்தன.
~
கிட்டத்தட்ட 26 படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பெரும்பாலும் சிவாஜி போன்ற மூத்த தலைமுறை நடிகர்களின் படங்களுக்கே அதிகமாக இசை அமைக்கும் வாய்ப்பு மெல்லிசை மன்னருக்கு கிடைக்கப் பெற்றது.
அப்படி கிடைத்த படங்களில் அவர் நன்றாகவே ஸ்கோர் செய்திருந்தார். உதாரணமாக பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் வரும் " ஒரு ஓசையின்றி மெளனமாக ..." பாடலை சொல்லலாம்.
MSV இசையமைப்பில் இந்த ஆண்டு உருவான அற்புதமான ஒரு பாடல் வசந்தத்தில் ஒரு நாள் படத்தில் இடம்பெற்ற "வேண்டும் வேண்டும் உந்தன் உறவு.." பாடல். இனிமையான மெலடி அது.
இந்த ஆண்டில் மெல்லிசை மன்னரின் இசையில் மிகப்பெரிய ஹிட் ஆன பாடல் சிம்லா ஸ்பெஷல் படத்தில் வரும் "உனக்கென்ன மேலே நின்றாய்.." பாடல்.
பாடல் வரிகள், இசை, பாடகரின் பாவம், காட்சியமைப்பு என்று அனைத்தும் சேர்ந்து ரசனையாய் அமைந்த பாடல் அது.
மணல் கயிறு படத்தின் "மந்திர புன்னகை..", போக்கிரி ராஜாவின் " விடிய விடிய சொல்லித் தருவேன்.." ஆகிய பாடல்களும் ஆஹா ரகம் .
~
கடந்த ஆண்டு "ஆனந்த ராகம்..." பாடல் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட ஷியாம் இந்த 1982ல் மூன்று படங்களுக்கு இசை அமைத்தும் பெரிதாக பேசும்படி எந்த பாடலும் வழங்கவில்லை என்பது சோகமே.
மதன மாளிகைக்கு பிறகு நீண்ட இடைவெளியில் "நிஜங்கள்" என்ற படத்துக்கு இசையமைத்த MB சீனிவாசனும் அந்த படத்தில் பெரிதாக சாதிக்கவில்லை.
~
மூங்கிலிலே பாட்டிசைத்து... பாடல் ராஜேந்தரின் இசையில் "ராகம் தேடும் பல்லவி" படத்தில் சூப்பர் ஹிட் ஆனது. இதே படத்தில் "ஆழ்கடலில் தத்தளித்து ..."பாடலும் அற்புதமான ஒரு பாடல். ஒரு மாதிரி சோக பாடல்களுக்கு இசை அமைப்பதில் ராஜேந்தர் கெட்டிக்காரராக இருந்தார்.
நெஞ்சில் ஒரு ராகம் படத்தில் ராஜேந்தர் இசையில் உருவான "நெஞ்சம் பாடும்..." மற்றும் "இதய வாசல் ..." ஆகிய பாடல்களும் 1982ன் சூப்பர் ஹிட் பாடல்கள்.
~
அடுத்து 1982ன் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியதில் முக்கியமான ஒரு இசையமைப்பாளர் கங்கை அமரன். இவரின் "வாழ்வே மாயம்" படப்பாடல்கள் இன்றும் கேட்க சுகமானவை.
"நீல வான ஓடையில் ..." ஒரு அற்புதமான மெலடி என்றால்
"தேவி ஸ்ரீதேவி " பாடலும் " "என் ராஜாவே " பாடலும் நல்ல குத்து பாட்டுக்கள்.
"வந்தனம் என் வந்தனம்" பாடலும் "வாழ்வே மாயம்" பாடலும் வேற லெவல். வெல்டன் அமரன்.
~
சக்கரவர்த்தி "பகடை பனிரெண்டு" படத்திற்கும், குன்னக்குடி வைத்தியநாதன் "ராகபந்தங்கள்" படத்துக்கும், சந்திரபோஸ் "வடிவங்கள்" படத்திற்கும் இசையமைத்திருந்தனர். அவ்வளவு தான். பெரிதாக பாடல்கள் எதுவும் அவைகளில் ஹிட் ஆகவில்லை.
~
அடுத்து இளையராஜா.
அன்னக்கிளி வெளிவந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இளையராஜாவின் கிராஃப் மேலே, மேலே சென்றுகொண்டேயிருக்கிறது. 1982 லும் மேல்நோக்கிய பாய்ச்சல் தான்.
தேன் அருவியில் நனைந்திடும்... --- ஆகாய கங்கை
தாயும் நானே...
பட்டுவண்ண சேலைக்காரி --- எங்கேயோ கேட்ட குரல்
என் புருஷன் தான்....
புடிச்சாலும் புடிச்சேன்... --- கோபுரங்கள் சாய்வதில்லை
நதியில் ஆடும் பூவனம்
சங்கீத ஜாதிமுல்லை
பூவில் வண்டு.... --- காதல் ஓவியம்
மாலை சூட --- கண்ணே ராதா
பூவே இளைய பூவே...
ஏதோ மோகம் ஏதோ தாகம் --- கோழி கூவுது
பூந்தென்றல் காற்றே வா --- மஞ்சள் நிலா
மெட்டி ஒலி --- மெட்டி
கண்ணே கலைமானே --- மூன்றாம்பிறை
இளைய நிலா
தோகை இளமையில்
வைகறையில் வைகை கரையில் --- பயணங்கள் முடிவதில்லை
வெள்ளை புறா ஒன்று
வா வா வசந்தம் --- புதுக்கவிதை
ஜனனி ஜனனி --- தாய் மூகாம்பிகை
இவைகள் தவிர அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் "இளமை இதோ இதோ " --- சகலகலாவல்லவன்.
சத்தியமாக 1982ன் சூப்பர் இசையமைப்பாளர் இளையராஜா தான்.
~
1982 அவ்வளவு தானா என்றால் இல்லை என்பதே பதில்.
இந்த ஆண்டின் முக்கியமான நிகழ்வு புது இசை அமைப்பாளர்களின் அறிமுகம். அவர்களில் ஒருவர் எல். வைத்தியநாதன்.
ஏழாவது மனிதன் படத்தின் "காக்கை சிறகினிலே " திரை இசை வடிவத்தில் தமிழ் ரசிகர்களை வியக்க வைத்தது. வீணையடி நீ எனக்கு, அச்சமில்லை அச்சமில்லை என படத்தில் அத்தனை பாடல்களும் மகாகவி பாரதியின் பாடல்கள். அத்தனையும் அமுத கானங்கள்.
இன்னொரு அறிமுகம் சிவாஜி ராஜா. "காற்றுக்கென்ன வேலி" படத்தில் அறிமுகமானார். ரேகா ரேகா... பாடல் அருமையான துள்ளிசை என்றால் "கடல் மீதிலே தன் இணை தேடினான்" பாடல் அற்புதமான காதல் தவிப்பு பாடல்.
~
1982ம் ஆண்டின் என்னுடைய மனதிற்கு நெருக்கமான பாடல்கள் ரெண்டு.
ஒன்று "காற்றுக்கென்ன வேலி" படத்தில் சிவாஜி ராஜா இசையில் "சின்ன சின்ன மேகம்..."
இன்னொன்று "தணியாத தாகம்" படத்தில் AA ராஜ் இசையில் "பூவே நீ யார் சொல்லி யாருக்காக...."
~
சுபம்


Comments
Post a Comment