அற்புதம் - Part-6

அற்புதம் - Part-6

MIRACLE - Part-6

நான் குறித்து வைத்திருந்த என் சித்தப்பாவின் தொலைபேசி எண்ணுக்கு பேசினால்  என்ன என்ற எண்ணம் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது.

அந்த எண்ணுக்கு கால் செயதேன்.

"ஹலோ"..... என்று எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.
~

நான் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேச்சை ஆரம்பித்தேன். 

 "யார்... காளிசுதனா பேசுவது" என்று  கேட்ட கேள்வியில்  எதிர்க்குரல்  ஷாக் ஆகியிருப்பது  புரிந்தது. 

எதிர் முனையில் கேட்ட பெண்ணின் குரல் எனது சித்தியுடயது. என் சித்தப்பாவின் மனைவி. காளிதாசன் அம்மா.  

எனது பாட்டி, அம்மா மற்றும்  எனது தம்பி ஆகியோர் எவ்வாறு இருக்கிறார்கள் என்று ஆர்வமுடன் வினவினார் அவர். 

நான் அனைவர் பற்றிய விவரங்களையும் தெரிவித்து சித்தப்பா மற்றும் மற்றவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று வினவினேன். 

சித்தப்பாவிடம் என்னை பற்றிய விவரம் தெரிவித்து தொலைபேசியை அவரிடம் கொடுத்தார் சித்தி. 

அவரால்  பேச முடியவில்லை. நா தழுதழுத்தது. ஒரே அழுகை. எனக்கும் கண்கள் கலங்கின. அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்து அவரின் நலனைப் பற்றி விசாரித்தேன். 

பேச்சின் ஊடே எனது தந்தையை பற்றி சித்தப்பாவிடம் வினவினேன். 

எனது தந்தைக்கு செய்ய வேண்டியதை தாம் முறைப்படி செய்துவிட்டதாகவும் அதை பற்றி இன்னொரு சமயம் பேசிக்கொள்ளலாம் என்றும் டிப்லமேட்டிக் ஆக பதில் சொன்னார். 

பின்னர் அவர் இளைய மகனுக்கு  வேலங்குடி காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதை தெரிவித்து நாங்கள் எல்லோரும் குடும்பமாக வந்து அந்த திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  திருமண பத்திரிகையை  கூரியரில் உடன் அனுப்புவதாகவும் தெரிவித்தார். 

நான் எனது தந்தையின் நிலையை தெரிந்துகொண்டேன்.  என் மனம் ஏனோ துணுக்குறவில்லை. ஒரு வகையில் இது நான் எதிர்பார்த்திருந்த ஒன்று தான்.  
 
இரு நாட்களில்  திருமண அழைபிதழ் வந்தது. இன்னொரு முறை தொலைபேசி வழியே சித்தப்பாவிடம் இருந்து அழைப்பும் வந்தது. 

தந்தை வழி சொந்தங்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து தொலைபேசியில் உரையாட தொடங்கினர். இவ்வளவும் எவ்வாறு ஒரே ஒரு முறை குலதெய்வத்தை தரிசனம் செய்து வந்ததில் நடந்தது என்ற பரம ஆச்சரியத்தில் நான் மூழ்கினேன்.   

திருமண நாள் அன்று அதிகாலை குடும்பத்துடன் வேலங்குடி பயணம் கிளம்பினோம். போகும் வழி முழுவதும்  அவர்கள் நம்மை எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் என்ற ஒரு தவிப்பு. நெஞ்சு படபடத்துக் கொண்டே இருந்தது. 

வேலங்குடியை அடைந்தோம். காளியம்மன் கோவில் வாசலில் கார், வேன்  என்று நிறைய வாகனங்கள். தந்தை வழி உறவினர்கள் அனைவரும் திருமணத்தை முன்னிட்டு பல இடங்களில் இருந்தும் வந்திருந்தனர். 

கோவில் வாசலில்  காரை நிறுத்தினோம். கார் கதவை திறந்து கொண்டு ஒவ்வொருவராக இறங்கினோம். எங்களை எதிர்பார்த்து எல்லோர் விழிகளும் வாசலிலேயே இருந்ததை பார்க்க முடிந்தது. சித்தப்பாவின் பெண் (எனது இளைய சகோதரி) தான் முதலில் ஓடி வந்து எங்களை வரவேற்றார். எல்லோரும் எங்களை சூழ்ந்து கொண்டனர். உங்களுக்காக தான் காத்திருக்கிறோம் என்றனர். ஆச்சரியமாக நாங்கள் வந்த உடனேயே மாங்கல்ய தாரணம் நடந்தது. 

மகிழ்ச்சியான தருணத்தில் தந்தை வழி உறவினர்கள் அனைவரும் குலதெய்வம் சன்னதியில் மீண்டும் ஒன்றானோம்.
~
 
15 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை இறந்து விட்டதை  நான் சித்தப்பா மூலம் அறிந்து கொண்டேன். வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் கடக்க முயன்றபோது கருங்கல் தடுக்கி கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு ஒரு மாதம் கோமா நிலையில் இருந்து பின்னர் இறந்தார் என்று அறிந்து கொண்டேன். 

தோழர்கள் சுமக்க செங்கொடி போர்த்தப்பட்டு செவ்வணக்கம் செலுத்தப்பட்டு  மகன்கள் இருந்தும், யாரும் இல்லா நிலையில் அடக்கம் செய்யப்பட்டார். 

அவர் அப்போது  வசித்து வந்த வில்லிவாக்கம்  அருகில் உள்ள  அயனாவரத்தில் தான் அவர் இறந்த  சமயத்தில் நான் குடும்பத்துடன் குடியிருந்தேன்,  அவரை பற்றிய விவரம் ஏதும்அறியாமலே. 
~

குடும்பத்தை விட கொள்கையை பெரிதாக கருதிய அவர் ஏன் திருமண பந்ததிற்கு உடன்பட்டார் ? குழந்தைகள் பிறந்ததும்  ஏன் அவர்களை விட்டு பிரிந்து சென்றார் ? நாடோடி வாழ்வு வாழ்ந்து மறைந்தது ஏன் ? 

கேள்விகள் இன்னும் விடை இல்லாது தொங்கி கொண்டே இருக்கின்றன.
~

இப்போது அற்புதத்திற்கு வருவோம். 

நாற்பது ஆண்டுகளாக சுற்றம் அனைவரும் இருந்தும், எவரையும் அறியாது வாழ்ந்ததும், ஒரே நாளில் அனைத்து சொந்தங்களும் மீண்டும் வந்ததும் அற்புதம் தானே.

அல்லது நீங்கள் அதை தற்செயல் நிகழ்வுகளின் கோர்வையாகவும் நினைக்கலாம். அது உங்கள் எண்ணங்களின் அடிப்படையிலானது. 

என்னை பொறுத்தவரை அந்த பள்ளத்தூர் கிராமத்து பூக்கடையில் சந்தித்த முதியவர் சொன்னது தான் இப்போதும் காதுகளில் ஒலி த்துக் கொண்டிருக்கிறது.
 

"அந்த மூட்டவூரணி காளி அவளை சேர்ந்தவங்க யாரா இருந்தாலும், அவர்கள் கடல் கடந்து சென்றாலும் கூட, சேர்த்துக்க வேண்டிய நேரத்துல சரியா தன் கிட்ட கொண்டு வந்து சேர்த்துப்பா. அது தான் அவ சக்தி."

~
சுபம்

Comments