அற்புதம் - Part-5
அற்புதம் - Part-5
MIRACLE - Part-5
(சென்ற பதிவின் தொடர்ச்சி)
பின்னால் நின்று கொண்டிருந்த எனது பாட்டி அந்த பெயரை கேட்டதுமே சடடென்று என்னை தள்ளிக் கொண்டு பரபரப்பாக முன்னே ஓடி வந்தார்.
பாட்டியின் முகம் பிரகாசமாய் இருந்தது.
~
காளிதாசனின் அண்ணன் மகன்கள் தான் இவர்கள் என்று என்னையும் என் தம்பியையும் அந்த சாமியாடியிடம் சுட்டிக் காட்டினார் பாட்டி.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என் அப்பா பொதுவுடைமை இயக்கத்தில் முழு நேர உறுப்பினராக இருந்து குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றபின் அவரைப்பற்றிய தகவல்கள் எதையுமே பேசுவதை என் பாட்டியோ தாயாரோ விரும்பியதில்லை. அதனால் பாட்டியிடம் வளர்ந்த எங்களுக்கும் அப்பாவைப் பற்றியோ அல்லது அவர் அண்ணன் தம்பிகளை பற்றியோ, அவர்கள் சார்ந்த குடும்பங்கள் பற்றியோ எதுவுமே தெரியாது. எங்களுக்கு தெரிந்த உறவுகள் எல்லாமே தாய்வழி சொந்தங்கள் தான்.
பாட்டி என் அருகில் வந்தார். சாமியாடியை சுட்டிக் காட்டி இவர் குறிப்பிடுவது உன் அப்பாவின் தம்பி மகனை. அந்த பையனுக்கு காளிதாசன் என்று பெயர் வைத்தது நான் தான் என்றார். அப்போது வரை அவர்கள் குடும்பத்துடன் நமக்கு தொடர்பு இருந்தது. பின்னர் தான் தொடர்பு அற்று போயிற்று என்றும் தெரிவித்தார்.
எனக்கு கலவையான ஏதோ குறிப்பிட முடியாத ஒரு உணர்வு அக்கணம் தோன்றியது.
என் பாட்டி என்னிடம் கூறியது ஏதும் சாமியாடிக்கு புரியவில்லை. இருப்பினும் அவர் காளிதாசன் என்று கூறிய பெயரை எனது பாட்டி உறுதி செய்ததை அறிந்ததும் மகிழ்ச்சியடைந்தார்.
வீட்டினுள் சென்று ஒரு பெட்டியை திறந்து ஒரு திருமண பத்திரிக்கையை எடுத்து வந்து பாட்டியிடம் காண்பித்தார் சாமியாடி. பத்திரிக்கையை பார்த்த பாட்டி அதில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்னும் பெயரை குறிப்பிட்டு இவர் தான் உனது சித்தப்பா. உன் அப்பாவின் தம்பி. சாமியாடி குறிப்பிட்ட காளிதாசனின் அப்பா. இவரது இன்னொரு மகனுக்கு கல்யாணம். அதற்கான பத்திரிகை தான் இது என்றார். பாட்டியிடமும் ஒரு பரபரப்பு வந்திருந்தது இப்போது.
திருமண அழைப்பிதழை கூர்ந்து கவனித்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து வேலங்குடியில் இருக்கும் குல தெய்வத்தின் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
பாட்டி அப்பத்திரிக்கையில் இருந்த என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொள்ளசொன்னார். அவர் சொன்னபடி குறித்துக் கொண்டேன்.
பின்னர் அந்த சாமியாடி நேரே எங்களை ஊருக்கு வெளியே இருந்த காளியம்மன் கோவிலுக்கு கூட்டி சென்றார்.
கோவில் என்றால் நம் நினைவில் வருகின்ற பாரம்பரியமான கோவிலல்ல அது. ஆள் நடமாட்டமற்ற ஒரு மிகப்பெரிய திறந்த வெளி மைதானம். மைதானத்தின் உள்ளே ஓங்கி வளர்ந்த சில மரங்கள். எ0திரே ஒரு பெரிய ஊரணி. நடுவே ஒரு ஒற்றை பனை மரம். அதற்கு பக்கத்தில் ஒரு மிகப்பெரிய கருங்கல் மேடை.
அந்த மேடைக்கு முன்புறம் சுமாரான உயரத்தில் ஒரு திரிசூலம். பக்கத்தில் சூலத்தைவிட உயரம் குறைந்த ஒரு அருவாள். அதன் எதிரே ஒரு சிறிய பலி பீடம். சற்று தள்ளி ஒரு ஒற்றை மணி. நாற்புறமும் சுவர் எழுப்ப பெற்று வளாகத்திற்குள் ஒரு சிறிய ஊரணியுடனும் (குளத்தை விட சிறியது, கிணற்றை விட பெரியது) அழகான ஒரு தோட்டதுடனும் நல்ல பராமரிப்பில் இருந்த ஒரு கிராமிய கோவில் அது.
அக்கோவிலை கண்டதும் மனதிற்குள் மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு எழுச்சி. இது நமது கோவில். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அக்கோவிலில் நுழையும் தருணம் இது. இறுதியில் இங்கு வந்து அடைந்தாகி விட்டது என்ற உணர்வு.
கோவில் வளாகம் முழுக்க குவியல் குவியலாய் இருந்த இலையுதிர் கால உதிர்ந்த சருகுகளை நாங்கள் சுத்தம் செய்தோம். ஊருணியில் இருந்து நீர் எடுத்து தரை தளத்தில் ஊற்றி கழுவி விட்டோம்.
சாமியாடி எங்களுக்காக மனம் உருகி வேண்டிக்கொண்டார். தேங்காய் உடைத்து சூடம் காண்பித்தார். பாட்டி எங்களிடம் தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த சன்னதிக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். எங்கள் அனைவரின் மனதும் மகிழ்ந்து நெகிழ்ந்திருந்தது. எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து சேர்ந்துவிட்டோம் ஒருவழியாய் என்ற நிம்மதி ஏற்பட்டது.
சிறிது நேரம் அங்கு அமர்ந்து பேசிவிட்டு சாமியாடிக்கு நன்றி தெரிவித்து விட்டு ஊர் திரும்பினோம்.
~
அன்று மாலையேஊருக்கு வந்துவிட்டோம்.
நான் குறித்து வைத்திருந்த என் சித்தப்பாவின் தொலைபேசி எண்ணுக்கு பேசினால் தான் என்ன என்ற எண்ணம் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது.
அந்த எண்ணுக்கு கால் செயதேன்.
"ஹலோ"..... என்று எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.
(தொடரும்)


Comments
Post a Comment