அற்புதம் - Part-4

அற்புதம் - IV 

MIRACLE - IV 

(சென்ற பதிவின் தொடர்ச்சி)

பாட்டிக்கு இப்போது மேலும் இருபது வயது கூடியிருந்ததால் பாட்டியின் ஞாபக திறன் மீது பெருத்த சந்தேகம் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. இருப்பினும், அக்கோவிலை அவர் மட்டுமே அறிந்துள்ளார். வேறு எவருக்கும் அது பற்றி தெரியாது என்ற நிலையில், குறைவான அவரின் ஞாபக சக்தியின் மீது பலமான நம்பிக்கையை வைத்து புறப்பட்டோம்.
~

தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருமயம் வழியாக பள்ளத்தூரை வந்தடைந்தோம். 

வேனை  விட்டு வெளியே இறங்கி, பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த பூக்கடைக்கு சென்றோம். 

பாட்டி சொன்ன அடையாளங்களுடன் கூடிய கோவில் எங்கு உள்ளது என்று பூக்கடைக்காரரை வினவினோம். அவர் ஒரு கோவிலுக்கு வழி காட்டினார். 

அது ஊருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கு சென்று சேர்ந்த பின்னர் தான் தெரிந்தது அது  ஏற்கனவே நாங்கள் எனது மூத்த மகனுக்கு முடி இறக்கிய கோவில் என்று.   குலதெய்வம் கோவில் இந்தக் கோவில்  இல்லை  என்று எனது பாட்டி தெளிவாக கூறினார். 

மீண்டும் பள்ளத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தோம்.

அதே  பூக்கடைகாரரிடம் நடந்ததை விவரித்தோம். அவர் சிறிது யோசித்தார். பின்னர் கடை வாசலில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் நாங்கள் தேடி வந்திருக்கும் கோவில் பற்றி விசாரித்தார். 

அந்த பெரியவர் எங்களை கூர்ந்து பார்த்தார். உங்களுக்கு எந்த ஊர் என்றார். என்ன ஜாதி என்றார். விவரம் சொன்னோம். பாட்டி அந்த பெரியவரிடம் தன ஞாபகத்தில் இருந்த விவரங்களை எல்லாம் எடுத்து கூறி அந்த கோவில் எங்கிருக்கிறது  என்று கேட்டார். 

நன்கு யோசித்த அவர், கண்ணை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.    கோட்டையூருக்கு முன் இருக்கும் வேலங்குடி மூட்டாவூரணி காளி அம்மன் கோவிலாகத் தான் கண்டிப்பாக  இருக்கும் என்றார். அந்த பெயரை பெரியவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாட்டி அவரிடம் ஆமாம்,  அந்த ஊர் தான். இப்போது எனக்கு ஞாபகம் வந்து விட்டது என்றார். பாட்டியின்  முகம் மலர்ச்சியடைந்திருந்தது. நாங்கள் ஆச்சரியமடைந்தோம். 

வேலங்குடிக்கு செல்ல வழி விசாரித்தோம். வழியை சொன்ன அந்த பெரியவர்,   கோவில் ஊரின் வெளியே இருக்கும்,  ஊருக்குள் சாத்தப்பன் என்று ஒருவர் இருப்பார். அவர் தான் சாமியாடி, பூசாரி என்றார். அவரை அழைத்துக்கொண்டு காளியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள் என்றார்.  

பெரியவருக்கு  நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து  நிறைவான மனதுடன் புறப்பட்டோம்.
~

பள்ளத்தூரில் இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வேலங்குடிக்கு நுழையும் முன்பே அந்த கோவில் வளாகம்  தெரிந்தது. அதன் வெளிப்புறம் வேனை நிறுத்தினோம். 

பாட்டி கோவிலை நன்கு  பார்த்து விட்டு,  இந்த கோவில் தான். நான் பல வருடம் முன்பு ஏற்கனவே இங்கு தான் வந்தேன் என்றார். வேனில் இருந்தபடியே  கோவிலை வணங்கிவிட்டு ஊருக்குள் சென்றோம். 

வேலங்குடி  ஒரு மிக சிறிய  கிராமம். அருகில் கோட்டையூர் மற்றும் காரைக்குடி  தான் முக்கியமான ஊர். 

ஊரில் பழமையான செட்டிநாட்டு கட்டிடக்கலை மிளிர்ந்து கொண்டிருக்கும் வீடுகள் நிறைந்த தெரு ஒன்றுக்குள் வேனுடன்  நுழைந்தோம். கொஞ்ச தூரம் சென்றவுடன் நானும் எனது தம்பியும் வேனை  விட்டு இறங்கினோம்.

அந்த தெருவில் ஊராட்சி பணியாளர்கள் குழாய் பழுது நீக்கி கொண்டு இருந்தார்கள். அதை பார்வையிட்டபடியே ஒரு வயதான முதியவர் சிறிய கட்டை ஒன்றின் மீது மேல் சட்டை ஏதுமின்றி அமர்ந்து இருந்தார். 

எனது தம்பி நேரே அவரிடம் சென்றார். சாமியாடி  சாத்தப்பன் என்பவர் யார் என்று அவரிடம் பணிவாக கேட்டார். அவர் அதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் என்னையே உற்று பார்த்து கொண்டு இருந்தார். 

நீங்கள் காளிதாஸ் ஐயாவிற்கு என்ன உறவு முறை என்றார் என்னை பார்த்தபடி.  நான் சற்று குழம்பினேன். அந்த பெரியவரின்  பார்வை என்னை ஊடுருவிக் கொண்டிருந்தது. அவர் சொன்ன காளிதாஸ் ஐயா யாரென்று எனக்கு புரியவில்லை. யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. குழம்பிப் போனேன் சுத்தமாக. 

ஆனால் அந்த கணத்தில்,  பின்னால் நின்று கொண்டிருந்த  எனது பாட்டி அந்த பெயரை கேட்டதுமே சடடென்று என்னை தள்ளிக் கொண்டு பரபரப்பாக முன்னே ஓடி வந்தார். 

பாட்டியின்  முகம் பிரகாசமாய் இருந்தது.

(தொடரும்)

Comments