அற்புதம் - Part-3

அற்புதம் - Part-3

MIRACLE - Part-3

(சென்ற பதிவின் #தொடர்ச்சி)

அவர் தீர்க்கமாக என்னை பார்த்தார். உன் வயது என்ன என்றார். நாற்பத்தி நான்கு என்றேன். உன் தந்தையின் நிலை என்னவென்று தெரிய வேண்டும் அவ்வளவு தானே என்றார். நானும் ஆம் என்றேன். ஒரு ஆண்டு பொறுத்திரு, பின்னர் சொல்கிறேன் என்றார். 

அது வரை மீண்டும் இக்கனவு எனக்கு வந்தால் என்ன செய்வது என்றேன். 

தெய்வத்தை நம்பு. அமாவாசை நாளன்று வீட்டளவில் விரதம் அனுஷ்டித்து கொள் என்றார்.

குழப்பமாய் வெளியே வந்தேன்.

நான் சொல்லப் போகும் அற்புதம் இனி தான் வரப்போகிறது.
~

ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும்  மறந்தோம். வெளிநாட்டில் இருக்கும் எனது தம்பி,  தனது மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு வந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். பேச்சினூடே தம்பி மனைவி "நமது குடும்பத்தில் தொடர்ச்சியாக நிறைய கஷ்டங்கள்,   சோதனைகள் நிகழ்ந்து வருகின்றன. குல தெய்வம் கோவிலுக்கு போய் வருவது நல்லது என்று எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் சேர்ந்து நமது குல தெய்வம் கோவிலுக்கு சென்று வருவோம்" என்றார். ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினேன்.

எனக்கு நினைவு தெரிந்து  நான் இரு முறை  குல தெய்வம் கோவில் இருக்கும் ஊருக்கு சென்றிருக்கிறேன். 

முதல் முறை  மிக சிறு வயதாக இருக்கும் போது. அபபோது வீட்டில் மூத்த மகனான எனக்கு  மொட்டை அடித்து காது குத்துவதற்காக பாட்டியுடன் சென்று வந்தேன். அந்த காலகட்டத்தில்   பாட்டி வீட்டில் என்னை விட்டு விட்டு எனது தந்தை, தாய்  தனியே வசித்து வந்தனர். எனது தந்தை  நாத்திகர் ( பொதுவுடைமை வாதி). எனவே அவர்கள் அப்போது குலதெய்வம் கோவிலுக்கு வரவில்லை என பாட்டி சொல்லியிருக்கிறார்.
 
இரண்டாவது முறை எனது முதல் மகன் பிறந்து  ஓராண்டு ஆன பிறகு,  நான், எனது மனைவி, மூத்த மகன் மற்றும் பாட்டி ஆகியோர்  சென்று வந்தோம்.  அவனுக்கு முடி எடுத்து காது குத்துவதற்காக.   

பாட்டிக்கு  இம்முறை 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது.  பல ஆண்டுகள் கழித்து திரும்ப வந்திருப்பதால்   கோவில் அமைந்துள்ள இடத்தின் வழியினை மறந்து விட்டார். லொக்கேஷன் தெரியாமல் நிறைய அலைந்தோம். உள்ளூர் வாசிகள் சிலரிடம்  விசாரித்துக் கொண்டு,   அவர்கள் காட்டிய வழியில் கோவிலுக்கு சென்ற போது,  இந்த கோவில் தான்  குலதெய்வம் கோவிலா  என்று பாட்டிக்கு சந்தேகம் வந்து விட்டது.   அலைய  உடலில் தெம்பில்லாத காரணத்தினால் அந்த கோவிலிலேயே  முடியிறக்கி மொட்டை போட்டுவிட்டு ஊர் திரும்பினோம். 
 
நானாவது இருமுறை சென்று வந்திருக்கிறேன்.  எனது தம்பியும், அவன் குடும்பத்தாரும் இதுவரை சுத்தமாக குலதெய்வம் கோவில் இருந்த  பக்கம் வந்ததே இல்லை.

இந்த நிலையில் மீண்டும் கோவிலுக்கு செல்வோம் என்று தம்பி மனைவி கூறும்போது  ஆச்சரியம் வராமல் வேறு என்ன வரும். ?

குலதெய்வம் கோவிலை எப்படியாவது தேடி கண்டுபிடித்து வழிபட்டு வரவேண்டும் என்று முடிவு செய்து புறப்படுவதற்கு நாள் குறித்தோம். 
~
அன்றைய தினம் அதிகாலை.  நான், என் மனைவி, இரு மகன்கள், தம்பி, அவர் மனைவி மற்றும் அவர் மகன், மறுபடியும் அடையாளம் சொல்ல எனது பாட்டி ஆகியோருடன் ஒரு வேனில்  புறப்பட்டோம்.  

பாட்டிக்கு இப்போது மேலும் இருபது வயது கூடியிருந்ததால் பாட்டியின் ஞாபக திறன் மீது பெருத்த சந்தேகம் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. இருப்பினும், அக்கோவிலை அவர் மட்டுமே அறிந்துள்ளார். வேறு எவருக்கும் அது பற்றி தெரியாது என்ற நிலையில்,   குறைவான அவரின்  ஞாபக சக்தியின் மீது பலமான நம்பிக்கையை வைத்து  புறப்பட்டோம்.

பதிவின் ஆரம்பத்தில் கூறிய அற்புதம் ஏதும் இதுவரை வரவில்லையே,   இந்த  பதிவை  இனியும் தொடரத்தான் வேண்டுமா என்று லைட்டாக அலுப்பு தோன்ற ஆரம்பிக்கிறதா..? 
 

வெய்ட்.  நான் இனிமேல்  சொல்ல போவதில் தான் அந்த அற்புதம் இருக்கிறது.

(தொடரும்)

Comments