அற்புதம் - Part-1

அற்புதம் - Part-1

MIRACLE 


எதிர்பாரா தருணங்களில் சில விஷயங்கள் சிலருடைய வாழ்க்கையில்   'சட்' என்று ஒரு மின்னல் வெட்டி மறைவது போல் நடந்துவிடுவதுண்டு. அதனால் நற்பலன்கள் கிடைக்கும்போது அந்நிகழ்வு அவரின் வாழ்க்கையில் "அற்புதம்" என்று கொண்டாடப்படுகின்றது. 

அதை தற்செயல் நிகழ்வுகளின் தொடர்ச்சி என்றும் சிலர் விளிக்கலாம். அது அவர் அவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம். 

என் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நீங்கள் அற்புதத்தை நம்புபவராக இருந்தால்  மேலே படியுங்கள். 
~
 
சில ஆண்டுகளுக்கு முன்...

விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் எனக்கு ஒரு கனவு. வயதான தோற்றம் உள்ள ஒருவர் 'எனக்கு பசிக்கிறது' என்கிறார். 'நீ  என்னை கவனிப்பதேயில்லை'  என்கிறார். 

தொடர்ந்து காகம் கரைந்ததில்  கனவு கலைந்தது. எழுந்து உட்கார்ந்தேன். நேரம் காலை ஆறு இருக்கலாம். என் வீட்டு சமையல் அறையை ஒட்டி உள்ள ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்து காகம் கரைந்து கொண்டிருக்கிறது. 

எனது மனைவியை அழைத்தேன். கனவை சொன்னேன். அவள்  என்னை உற்று பார்த்து சொன்னாள், 'காலை முதல் காகம் கரைந்து கொண்டிருக்கிறது. இன்று அமாவாசை வேறு.. '.  

நான் அவள் பதிலை ஒட்டி , 'அப்போ கனவில் வந்தது உன் அப்பாவா' என்றேன். 

'ஏன் உங்க அப்பாவாக இருக்க கூடாதா'  என்றாள். 

எனக்கு துணுக்கென்றது.

 ~
எனது தந்தையை சிறு வயதில் பார்த்தது தான். பிறகு நான் பார்த்ததே இல்லை. பொது உடைமை தத்துவங்களின் பற்றாளரான அவர் தீவிர கம்யூனிஸ்ட் ஆகி (எழுபதுகளின் துவக்கம் அப்போது. டெல்டா மாவட்டங்களில் பொதுவுடைமை  இயக்கம் வேரூன்ற தொடங்கியிருந்த நேரம் ) பல வழக்குகளில் தேடப்பட்டு தலை மறைவானார் என்று  என் அம்மா  சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

அவர் என்ன ஆனார் என்று எங்களுக்கு,  அதாவது, எனது அம்மா, பாட்டி (அம்மாவின் அம்மா) மற்றும் எனது தம்பி ஆகிய யாருக்குமே தெரியாது. அப்பா இல்லாத குறை தெரியாது எனது பாட்டி என்னை வளர்த்தார். 

நானும் வளர்ந்தேன், படித்தேன், வேலைக்கு சென்றேன், திருமணமும் ஆனது.  இரு குழந்தைகளுக்கு தந்தை ஆனேன். மனைவிக்கு நல்ல கணவன் ஆனேன். 

அப்பா ஞாபகம் மனதின்  ஒரு மூலையில் எங்கோ ஒரு அடித்தட்டில் தங்கிவிட்டது.  அதன் மேலே மேலே, பல நினைவுகள் அடுக்கப்பட்டு, அவரை பற்றிய நினைவு  சுத்தமாக மறைக்கப்பட்டுவிட்டது.  
~

திடீரென்று என்னை இந்த கனவு இப்போது உலுக்கிப் போட்டுவிட்டது. 

எனது மனைவி "இன்று அமாவாசை விரதம் இருங்கள். இக்கனவை பற்றி பிறகு பெரியவர்களிடம் பேசலாம்" என்றார். அது வரை அமாவாசை மற்றொரு நாளாகவே இருந்த எனக்கு, அந்த நாள்  நான் விரதம் இருந்த முதல் அமாவாசை நாள் ஆனது. 

சில நாட்கள் இது குறித்து பேசினோம். பின்னர் மறந்தோம், மறுபடியும்  அந்த  கனவு வரும் வரை.

(தொடரும்)

Comments