இசை - மெல்லிசை மாமன்னர் MSV

இசை

மெல்லிசை மாமன்னர் MSV
By Suresh Venkadadhri


இளையராஜாவின் இசையில், செவ்வியல் ராகங்கள் விவாதிக்கப்பட்ட அளவுக்கு,எம்.எஸ்.வியின் இசையில் அவை விவாதிக்கப்படவில்லை என்ற ஒரு குறை  எனக்குண்டு. 

குறிப்பாக 70களில் வந்த பாடல்களில்..

இது குறித்து முன்பு சொல்வனம் இணைய இதழில்,எம்.எஸ்.வி இறந்தவுடன் வந்த எனது அஞ்சலிக் கட்டுரையில் எழுதியிருந்தேன். 

இப்போது,சென்ற வாரம், என் பக்கத்தில், நடந்த இசை, ராகங்கள் பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக , அந்தப் பகுதியை  மீண்டும் இங்கே பகிரத் தோன்றியது..அது கீழே..
~            

எழுபதுகளின் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் எம்எஸ்வி இசையமைப்பில் வந்த பாடல்கள் அறுபதுகளின் பாடல்களைவிடச் செவ்வியல் தன்மை அதிகமாக கொண்டிருந்தன.

அறுபதுகளில் புராணப் படங்களில் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்ட பாடல்கள் அதிகம் இடம்பெற்றன. மற்ற சமூக படங்களில் எம்எஸ்வியும் சரி, கே.வி. மகாதேவனும் சரி, செவ்வியல் இசைத்தன்மை அதிகம் கலக்காத மெல்லிசையே அதிகம் தந்தனர். எம்ஜிஆர் நடித்த சாண்டோ சின்னப்ப தேவர் எடுத்த படவரிசையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால், எழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடிய பாடல்கள்தான் அதிகம் வந்தன. 

அபூர்வ ராகங்கள், மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, இதுதான் முதல் ராத்திரி, 
என்ன சுகம் என்ன சுகம், 
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் 

போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. 

சிவாஜி படங்களிலும், 

அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானை, செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று, காதல் ராஜ்ஜியம்,
ஆகாயப் பந்தலிலே 

போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.

இந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். 

இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். 

சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அபூர்வ ராகங்கள் படத்தின் பாடல்களை எடுத்துக் கொள்வோம். 

ஏழு ஸ்வரங்களுக்குள், 
கேள்வியின் நாயகனே, மற்றும் 
அதிசய ராகம் 

என்ற இந்த மூன்று பாடல்களுமே மிகப் பிரபலம்தான். ஆனாலும் அந்தப் பாடல்கள் அமைந்திருந்த ராகங்களையோ அந்த ராகங்கள் அமைந்த அழகான வரிசையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு பாடலில் இத்தனை ராகங்களை அமைத்து சிறப்பான ராகமாலிகையாகக் கோர்த்த அந்த மாமேதையான எம்எஸ்வி எனும் இசையமைப்பாளரின் திறமையோ பேசப்பட்டதேயில்லை. 

இது சமீபத்தில்தான் பேசப்பட்டது. அன்று அந்தப் படத்துக்கு எழுதப்பட்ட திரை விமர்சனங்களில் இந்த அம்சங்கள் கண்டு கொள்ளப்படவேயில்லை. 

இளையராஜா வந்தபிறகு அவரது பாடல்களில் செவ்வியல்தன்மை லேசாகத் தெரிந்தால்கூட ராஜா அந்தச் செவ்வியல் ராகத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று விதந்தோதி எழுதப்பட்டது, 

ஆனால் எம்எஸ்வியின் பாடல்களில் ராகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்த ரசனை சார்ந்த விவாதங்கள் அநேகமாக இல்லவே இல்லை என்றே சொல்லலாம். 

இங்கு ராஜாவைப் பற்றி சொல்லும்போது அவரை குறைவாக மதிப்பிட்டுச் சொல்லப்படுவதில்லை என்பதும், அவரது மேதைமை பாராட்டப் பெற்ற அளவுக்கு எம்எஸ்வியின் மேதைமை அவரது உச்சத்தில்கூட பாராட்டப்படவில்லை எனும் ஆதங்கமுமே பதிவு செய்யப்படுகிறது என்பதும் நினைவில் கொள்ளப்படவேண்டியவை.

இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. எழுபதுகளின் இறுதிவரை அதிகம் கண்டுகொள்ளப்படாத கர்நாடக சங்கீதத்தை ரசிப்பது என்பதை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெருமைக்குரிய விஷயமாக்கியது ஒரு தெலுங்கு படம். ஆம், சங்கராபரணம் எனும் அந்தத் தெலுங்குப் படமதான் தமிழ்நாட்டில் மீண்டும் கர்நாடக சங்கீதம் பற்றிய ஒரு சாதகமான உணர்வை கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 

அதன்பிறகே தமிழ்ப் படங்களின் பாடல்களிலும் கர்நாடக சங்கீத ராகங்களின் சாயல்களைக் கண்டுபிடித்து பாராட்டி விவாதித்து ரசிக்கும் ஒரு போக்கு உருவானது.

அப்போது, அந்தக் காலத்துக்கு முன்னர் வெளிவந்த எழுபதுகளின் செவ்வியல் தன்மை கொண்ட செமிகிளாசிகல் பாடல்கள் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் மறக்கப்பட்டன. 

பாட்டும் பரதமும் படப்பாடலான 

நடராஜன் ஆட வந்தால் சிவகாமி என்ன செய்வாள், 

என்ற பாடல் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. 

ஆனால், அப்படியே அதே மெட்டில் பல்லவி அமைந்த ராஜாவின், 

தூங்காத விழிகள் ரெண்டு, 

என்ற பாடல் அமிர்தவர்ஷிணி ராகத்தை ராஜா பயன்படுத்திய விதத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது என்ன ஒரு முரண். 
~

ஆக தமிழ் சினிமாவின் பிற துறைகளின் தோல்வி அதன் ஒரே காக்கும் முகமான உயர்ந்த தரத்திலான எம்எஸ்வியின் பாடல்களையும் இருளில் ஆழ்த்தின என்றுதான் சொல்ல வேண்டும்.
~

பி.கு: நானும் எழுபதுகளின் பாடல்களுக்கான ரசிகன் தான்.

Comments