அமானுஷ்யம் - III - காதுகள்

அமானுஷ்யம் - III

காதுகள் 


மௌனமான நேரங்களில்,  தனிமையில்,  உங்கள் காதுகளில் ஏதாவது குரலோ அல்லது குரல்களோ கேட்பது போன்ற அனுபவம் எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? 

 'தற்கொலை செய்து கொள்' என்று அடிக்கடி காதில் கேட்ட குரலின் கட்டளைக்கு கீழ்படிந்து என் நண்பரின் சகோதரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டு இறந்த  தகவலை நண்பன் தெரிவித்த போது நான் அதிர்ந்தேன். 

"தற்கொலை செய்து கொள்" என்று காதில் கேட்ட குரல்  சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் கண் எதிரே இறந்த அவளின் உயிர்த் தோழியின் குரலாம்.

காதில் குரல்கள் கேட்பது குறித்த சுவாரசியமான சில தகவல்களை பார்க்கலாம். 

சுஜாதாவின் "ஆ" என்னும் கதையில், காதில் கேட்கும் மாயக் குரல்களும்,  முன் ஜென்ம நினைவுகளும் கலந்து,  கதையின் நாயகனை குழப்பி அடிக்கும் கூத்தை  திகிலுடன் படித்திருக்கிறேன்.

எம்.வி. வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற  "காதுகள்" நாவலில் காதில் கேட்கும் பல குரல்களால் வாழ்வை தொலைக்கும்  ஏழை நெசவாளி ஒருவனின் துயரத்தையும், அதன் பொருட்டு அவனுக்குள் ஏற்படும்  ஆன்மீகத் தேடல் அனுபவங்களையும், அதில் அவன் கண்ட வெற்றிகளையும் அருமையாக எழுதியிருப்பார்.  

அந்த கதையில் வரும் கதாநாயகனின் அனுபவம் அவரின் சொந்த அனுபவம் என்று அவரே பின் ஒரு சமயத்தில் கூறினார்.

தங்கள் காதுகளில் இறைவன் பேசியதாக பெரிய பெரிய மகான்கள் (முகமது நபி உட்பட)  கூறியிருக்கிறார்கள். 

பொருளாதாரத்திற்காக நோபல் பரிசுபெற்ற  புகழ் பெற்ற கணிதவியலாளர் ஜோன் நாஷ்  Paranoid Schizophrenia வுடன் வாழ்ந்து நோபல் பரிசு பெற்றவர். காதில் பல்வேறு குரல்கள் கேட்கும் உளம் சார்ந்த நோய் அது. 

அவர் வாழ்க்கையை விவரிக்கும்  படம் A Beautiful Mind.  அதில் காதில் கேட்கும் குரல்களை (auditory hallucination) பாத்திரமாகமாற்றி (visual hallucination) உலவவிட்டிருப்பார்கள்.

இப்போது மீண்டும் முதல் பத்திக்கு வருவோம். 

மௌனமான நேரங்களில்,  தனிமையில்,  உங்கள் காதுகளில் ஏதாவது குரலோ அல்லது குரல்களோ கேட்பது போன்ற அனுபவம் எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? 

Paranoid  schizophrenia வின் ஆரம்ப கட்டமாகவும் அது  இருக்கலாம்.

உடனடியாக பார்க்க வேண்டியது ஒரு நல்ல மருத்துவரை.
~

Comments