அமானுஷ்யம் - II - கிட்டு மாமா

அமானுஷ்யம் II

கிட்டு மாமா 


கிட்டு மாமா என் பாட்டிக்கு கடைசி தம்பி. ICF இல் வேலை பார்த்து வந்தார். உறவுமுறைப்படி அவர் எனக்கு தாத்தா வேண்டும். ஆனாலும் கொஞ்சம் வயது குறைவானவராக இருந்ததினால் அவரை மாமா என்றே கூப்பிடுவோம்.

எங்கள் குடும்பம் ஒரு கலைக்குடும்பம்.  இயல், இசை, நாடகம் மூன்றிலுமே கிட்டு மாமாவிற்கு எக்கசக்க ஈடுபாடு. ரயில்வேகாரர்கள் நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் தொடர்சசியாக எழுதி வந்துகொண்டிருந்தார். இசையில் தீவிர ஈடுபாடு. ஜி. ராமநாதனுக்கு அப்புறம் இளையராஜா தான்டா என்பதை அடிக்கடி அழுத்தம் திருத்தமாக கூறுவார். நாடகங்கள் எழுதி இயக்குவதில் மிக்க  விருப்பம் உள்ளவர்.

சிறு குழந்தைகளுக்கான பாலவிகாஸ் என்றொரு அமைப்பினை என் பாட்டி மன்னார்குடியில் நடத்தி வந்தார். அவர்களுக்கு சரித்திர, புராண, இதிகாசங்களை சொல்லித் தருவது, இசையை கற்றுத் தருவது, சுலோகங்கள் சொல்லிக் கொடுப்பது என்று படு பிசியாக இயங்கிக் கொண்டிருந்தார்.

கோடை விடுமுறைகளில் அந்த பாலவிகாஸ் குழந்தைகளை வைத்து ஒவ்வொரு வருடமும் ஒரு மேடை நாடகம் போட்டு விடுவார். அந்த நாடகத்தை எழுதி இயக்குவது கிட்டு மாமா தான். நடிக்கும் குழந்தைகளுக்கு  பாவமுடன் வசனங்களை பிழையின்றி உச்சரிப்பதை அவர் சொல்லிக்கொடுப்பது செமையாக இருக்கும். அந்தந்த காரெக்டர் ஆகவே அவர் மாறிவிடுவார்.
~

சரி, அவர் நாடகம் போடுவதல்ல விஷயம். சப்ஜெக்டுக்கு வந்துவிடுவோம்.

அமானுஷ்யங்களில் அதீத நம்பிக்கை உள்ளவர். அவர் அதை விவரிக்கும் விதம் எங்களுக்கு எல்லாம் கிலி ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் ஏதாவது ஒரு அமானுஷ்ய அனுபவத்தை சொல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தார்.

இப்படித்தான் ஒரு கோடை விடுமுறையில் இரவு நேரத்தில் கள்ள சாமியார் ஒருவர் பெண்களை வசியம் செய்து கடத்தியது பற்றிய விஷயம் ஒன்றை சொன்னார்.
~

அந்த கள்ள சாமியார் பகல் நேரத்தில் ஏற்கனவே நோடடம் இட்டு முடிவு செய்து வைத்திருந்த வீட்டிற்கு சென்று தனக்கு உணவிடுமாறு கேட்பார்.  உணவிடட பெண்மணிக்கு நன்றி தெரிவித்துவிட்டு ரோஜா பூ ஒன்றை கொடுத்து தலையில் வைத்துக் கொள்ள சொல்வார்.  அந்த பெண்மணியும் விபரீதம் புரியாமல் தலையில் ரோஜா பூவை வைத்துக் கொள்வார். சாமியார் நன்றி தெரிவித்து விட்டு புன்னகையுடன் அங்கிருந்து சென்று விடுவார்.

நள்ளிரவு நேரம் வந்ததும் தலையில் பூ வைத்த அந்த பெண்மணி படுக்கையில் இருந்து அனிச்சையாக எழுந்து கதவை திறந்து கொண்டு தானாகவே சுடுகாட்டை நோக்கி நடந்து செல்வார்.  சுடுகாட்டில் தயாராக இருக்கும் சாமியார் அந்த பெண்மணியை தனது வசிய சக்தியால் அனுபவித்துவிட்டு அவளை சுடுகாட்டிலேயே  பலியிட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று விடுவார். 

இப்படியே ஒவ்வொரு ஊரிலுமாக இது மாதிரி சம்பவங்களை நிகழ்த்தி வந்த சாமியார் புதிதாக  ஒரு ஊருக்கு சென்றார். அங்கேயும் உணவு அளித்த பெண்மணிக்கு ரோஜா பூ ஒன்றை கொடுத்து தலையில் சூடிக் கொள்ள சொன்னார். அந்த பெண்மணி அப்புறம் சூடிக்கொள்வதாக சொல்லி ரோஜா பூவை கிண்ணம் ஒன்றில் போட்டு வைத்தார்.

இரவு நேரம் வந்தது. டக் டக் என்று சத்தம் கேட்கவும் அந்த பெண் திடுக்கிட்டு எழுந்தார். 

பார்த்தால்..... ரோஜா பூ வைக்கப்பட்டிருந்த கிண்ணம் மெதுவாக தத்தி தத்தி வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பயந்து போன அந்த பெண்மணி கணவனை எழுப்புகிறார். அதிர்ச்சியடைந்த கணவன்  வீட்டுக்குள்ளேயே மனைவியை இருக்க சொல்லிவிட்டு துணைக்கு தன் தம்பியை அழைத்துக் கொண்டு அந்த கிண்ணத்துக்கு பின்னாலேயே மெதுவாக நடந்து சென்றான்.

கிண்ணம் நேராக சுடுகாட்டிற்கு சென்றது. பெண்ணின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  கள்ள சாமியார் கிண்ணம் தத்தி தத்தி வருவதை பார்த்து குழப்பமடைகிறார். ஒருவாறு  நடக்க இருந்தது என்ன என்பதை யூகித்துக் கொண்ட அந்த பெண்ணின் கணவன் ஒரே தாவாக சாமியார் மேல் தாவி  சாத்து சாத்து என்று சாத்தி  கைகளை கட்டி அவரை ஊருக்குள் இழுத்து வந்து ஊர்காரர்களிடம் ஒப்படைத்தான்.

அப்பறம்  சாமியாருக்கு தர்ம அடி தான்.

இது கதையில்லடா... நிஜமாகவே திருச்சி கிட்ட நடந்தது என்று முடிப்பார்.

இது மாதிரி ஏராளமான கதைகளை சொல்லி எங்கள் விடுமுறை தினங்களை கலவரமாக்கி விடுவார்.

நாங்களும் மெனக்கட்டு தெருவில் உள்ள பெண்களுக்கு இந்த சம்பவத்தை சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்வோம்.
~

சுவாரஸ்யமான கிட்டு மாமாவிற்குள் மாபெரும் சோகம் ஒன்று மறைந்திருந்தது. அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரின் மனைவி ஒரே குழந்தையுடன் அவரை விட்டுவிட்டு பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். 

ஒண்டிக்கட்டையாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் தனது சோகங்களை கலையார்வத்தில் மறைத்து கொண்டு போலியான உற்சாகத்துடன் வாழ்ந்து வந்தார் என்பதை  பிந்தைய நாள்களில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களான போது தான் புரிந்து கொண்டோம்.
~

நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் ராஜேஷை வைத்து "அணை வெள்ளம்" என்றொரு படம் எடுக்கிறேன் என்று எல்லோரிடமும் கடன் வாங்கி பூஜை போடடார். பூஜைக்கு பின் பட வேலைகளை தொடர முடியாமால், கடன் காரர்கள் நெருக்க, ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 

ஒரு வழியாக VRS கொடுத்து கடன்களை ஓரளவு செட்டில் செய்து அதுவும் போதாமல் பென்ஷனிலும் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் கொடுத்து .... ரொம்ப சிரமப்பட்டு வாழ்ந்து மறைந்தார்.
~

வளர்ந்து நல்ல வேலையில் செட்டில் ஆகி,  தனது தாய்,  மனைவி மற்றும் குழந்தையுடன்   வாழ்ந்து வந்த கிட்டு மாமாவின்  மகன் அவரின் மறைவு செய்தி கேள்விப்பட்டு மகனாக தான் செய்யவேண்டிய  ஈம சடங்குகளை அவருக்கு  செய்து முடித்தது தான் மாமாவுக்கு  கிடைத்த ஒரே ஆறுதல்.
~

சுபம் 

Comments