அமானுஷ்யம் - I - அகோரியுடன் ஒரு நாள்

அமானுஷ்யம் - I 

அகோரிகள்


சில ஆண்டுகளுக்கு முன்  டெல்லிக்கருகில் குர்காவ்னில் நான் தங்கியிருந்த  போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை கூறுகிறேன்.

குர்காவ்னின்  பரபரப்பான இப்கோ சவுக்குக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் என்  மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து  கொண்டிருந்தேன். அப்போது தான் என் வாழ்க்கையில்   முதல் முறையாக ஒரு அகோரியை பார்த்தேன். 

என்னை பார்த்ததும்  கையை உயர்த்தி சத்தமாக ஏதோ கூறினார். அருகில் வந்தார்.  என் நெற்றியின் நடுவில் தனது கட்டை விரலை வைத்து கண்களை மூடி உதடுகளில் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். 

அவரின் கட்டை விரல் ஐஸ் கட்டி  போல் சில்லென்று இருந்தது.

சில  வினாடிகள் கழித்து வலது கையில் கட்டியிருந்த தாயத்து ஒன்றை உருவி மேல் கீழாக அதை இடது கையில் பிடித்து கொண்டு தாயத்தின் மேல் பகுதியில் இருந்த மூடி போன்ற பகுதியை திறந்தார்.  பாடம் செய்த சிறிய குங்குமபூ ஒன்றை அதிலிருந்து எடுத்து என் வலது உள்ளங்கையில் வைத்து அழுத்தி  சில மந்திரங்களை முணுமுணுத்தார்.  அதை என்னுடைய பர்சில் வைக்க சொன்னார்.

நான் கீழே குனிந்து அவர் பாதத்தை தொட்டு வணங்கினேன். இரு கைகளையும் தூக்கி ஆசிர்வதித்தார்.

அருகில் இருந்த என்னுடைய நண்பன்  எங்களை புகைப்படம் எடுக்க போகஸ் செய்தான். எதிர்பாராத விதமாக அவன் படம் எடுத்த வேளையில் உடல் மேல் போர்த்தியிருந்த  கம்பளியை சட்டென்று அகற்றி தன்  நிர்வாண கோலத்தை காட்டினார் அவர். மேனியெங்கும் சுடுகாட்டு சாம்பல் பூத்திருந்தது. 

என் நண்பனும்  நானும் அதிர்ந்து போய்விட்டோம்.

ஹா ஹா என்று  சிரித்த அவர் ஒரு மொபைல் எண்ணை கூறி அதற்கு நூறு ரூபாய்  ரீசார்ஜ் செய்ய சொன்னார். 

எங்களை கவனித்துக் கொண்டிருந்த கடைக்காரர்,  வேண்டாம் அவர் சொல்லியபடி செய்யாதீர்கள்...  என்பது போல் சைகை செய்தார். 

நான் சுதாரித்து கொண்டு பத்து ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்தேன். உருட்டு விழிகளால் சுட்டெரித்தது போல் ஒரு முறை முறைத்தார். 

ஜனவரி மாத குர்காவ்ன் குளிரிலும் எனக்கு உள்ளங்கையில் வியர்க்க துவங்கியது.

கெட்ட காஷ்மீரி வார்த்தை ஒன்றை கூறிவிட்டு கிடு கிடுவென விரைந்து வெளியே சென்றுவிட்டார்.

அருகில் வந்த ரீசார்ஜ் கடைக்காரர், முன்பின் தெரியாத நம்பர்களுக்கு எல்லாம் ரீ சார்ஜ் செய்யாதீர்கள் சார். இம்மாநகரம் மோசமானது. அந்த அகோரி ஒரு காஷ்மீரி. தீவிரவாதியாக கூட இருக்கலாம். ஜாக்கிரதையாக இருங்கள் சார் என்றார். 

அவருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். பின்னர் மெட்ரோ பிடித்து நியு டெல்லி ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். 

சென்னை திரும்ப முன்பதிவு செய்ய பணம்  எடுக்க பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டேன்.

அந்த அகோரி ஆசிர்வதித்து அளித்த பாடம் செய்த குங்குமபூ வைத்திருந்த என்னுடைய பர்ஸ் பாண்ட் பாக்கெட்டில் இல்லை. 

நியூடெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழையும்போது கூட தொட்டு பார்த்து பர்ஸ் இருப்பதை உறுதி செய்திருந்தேன். ஆனால் இப்போது காணவில்லை. பாக்கெட் அடிக்கப்பட்டிருக்கிறது.

பர்சில் ஆதார், க்ரெடிட், டெபிட், பான் , கார்டுகள், வாக்காளர் அட்டை, அலுவலக அடையாள அட்டை ஆகியவைகளுடன்  மூவாயிரம் பணமும் இருந்தது. 

வாழ்க்கையில் முதல் முறையாக உடைமைகள் அனைத்தையும் இழக்கிறேன் ஒருசேர.

கண்கள் கலங்கி அழுகை வந்தது. நண்பனிடமும்  சுத்தமாக பணம் இல்லை.

அகோரி கட்டை விரலை அழுத்திய முன் நெற்றியின் மையப்பகுதி மீண்டும் சில்லிட துவங்கியது. தலை வலிக்க ஆரம்பித்தது. 

எனக்கு எதிரே அகோரி  சிரித்துக் கொண்டே ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது போல் தோற்ற மயக்கம். 

சுதாரித்துக்  கொண்டு புது டெல்லி ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்து FIR நகலை பெற்றுக்கொண்டோம். 

அங்கு பணியில் இருந்த மலையாளி ஒருவர் பரிவுடன் உதவிகள் செய்து  குர்காவ்ன் திரும்ப செல்ல நூறு ரூபாய் பணம் கொடுத்து உதவினார்.

அதன் பின்னர் பணத்தை திரும்ப கொடுக்க சென்ற போது அவர் பணியில் இருந்து மாறுதல் ஆகி ஆக்ரா சென்றுவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்கு கொடுக்க வேண்டிய நூறு ரூபாயை ஒரு கவரில் போட்டு தனியே வைத்துள்ளேன்.

வாழ்க்கை ஒரு வட்டம் - அவரை கண்டிப்பாக ஒரு நாள் சந்தித்து பணத்தை திரும்ப கொடுத்து விடுவேன் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
~
பி.கு: 
மறுநாள் பேண்ட்டை வாஷ் செய்வதற்காக பாக்கெட்டின்  உள்ளே கையை விட்டு ஏதாவது பொருள்கள் கிடைக்கிறதா என்று பார்த்தேன்.   பேப்பரில் நன்கு மடித்து பர்ஸ்ஸின் சீக்ரெட் இடத்தில் நான் வைத்த பாடம் செய்யப்பட்ட, அகோரி கொடுத்த  அந்த குங்குமப்பூ விரல்களுக்கிடையே சிக்கியது.

என்னை பார்த்து  காஷ்மீரி அகோரி சிரிப்பது போல் மறுபடியும் ஒரு தோற்ற மயக்கம்.

Comments