HIT - Telugu (2020)

சினிமா
~
HIT - The First Case (2020)(Telugu)
~
தனது பணி தந்த மன அழுத்தத்தால் PTSD (Post Traumatic Stress Disorder) ஆல் அவதிப்படும் புத்திசாலி போலிஸ் அதிகாரி விக்ரம் இரு மாத விடுப்பில் ஓய்வுக்கு செல்கிறான். 

அவன் கூட பணிசெய்பவரும் அவன் காதலியுமான நேஹா இந்நேரத்தில் கடத்தப்படுகிறாள். 

தகவல் விக்ரமுக்கு கிடைத்ததும் அவளை மீட்பதற்காக மீண்டும் வேலையில் சேர்கிறான். 

ஆனால் நேஹா கடத்தல் கேஸை டிபார்ட்மெண்ட்டில் அவனுடைய போட்டியாளராக எப்போதுமே இருந்துவரும் அபிலாஷ் வசம் ஒப்படைக்கிறார்  மேலதிகாரி விஸ்வநாத்.

நேஹா கடத்தப்பட்ட  அதே சமயத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணான ப்ரீத்தி என்பவரும்  கடத்தப்படுகிறார். 

ப்ரீத்தி கடத்தல் வழக்கை விசாரித்துவரும் நண்பர் மூலம் அவள் கடத்தப்பட்ட விதத்தை அறிந்துகொள்ளும் விக்ரம் நேஹா மற்றும் ப்ரீத்தி ஆகியோரின் கடத்தல்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை உணர்ந்து இக்கடத்தல் கேஸையாவது தன்னிடம் ஒப்படைக்குமாறு விஸ்வநாத்தை வேண்டுகிறான். அதன்மூலம் நேஹாவையும் மீட்கலாம் என்று எண்ணுகிறான்.

நேஹா கடத்தலை விசாரிக்கும் அபிலாஷ் ஒரு கட்டத்தில் விக்ரமையே சந்தேகப்பட இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. கோபமாகும் விஸ்வநாத் நேஹா கடத்தலுக்கும் புலனாய்வு அதிகாரியாக விக்ரமையே நியமிக்கிறார். 

சடசடவென நகரும் காட்சிகள் மூலம் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி நேஹா மீட்கப்பட்டாளா? ப்ரீத்தி என்ன ஆனாள்..? அவர்களைக் கடத்தியது யார் ? என்பதை படத்தின் முடிவு வரை சீட் நுனிக்கு நம்மை நகர்த்தி, பரபரக்க வைத்து, இறுதியில் முடிச்சுகளை அழகாக அவிழ்க்கிறார் இயக்குநர்.
~
இன்வெஸ்டிகேஷன் படம் என்றால் இதுபோன்று இருக்கவேண்டும். அறிமுக இயக்குநர் சைலேஷ் க்கு ஒரு சபாஷ். 

தமிழில் "துருவங்கள் 16" அப்படி இருந்தது. "துப்பறிவாளன்" படம் நன்றாக இருந்தாலும் விறுவிறுப்பு மிஸ்ஸிங். 

ஆனால் HIT இந்த இரண்டையும் விட பெஸ்ட்.
~
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் எடிட்டிங். நீளமான காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. இன்வெஸ்டிகேஷன் போது வெளிப்படும் வார்த்தைகள் மூலமே அடுத்த அடுத்த காட்சிகளுக்கு படம் நகர்வதால் படத்தில் எங்குமே continuity மிஸ் ஆகவில்லை. 

படத்தின் அடுத்த ப்ளஸ், பாத்திர படைப்புகள். 

தேவையற்ற பாத்திரங்கள் என்று எதுவும் படத்தில்  இல்லை. ஒரு சின்ன கேரக்டர் கூட படத்தை விறுவிறுப்பாக நகர்த்த தேவையான வலுவை கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ப்ளஸ். பருந்து பார்வையிலும், டாப் மற்றும் வைட் ஆங்கிளிலும் காட்சிகளின் பரிமானத்தில் கனத்தை கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன்.

பின்னனி இசையும் அருமை. படத்தில் ஒரு பாத்திரமாகவே பின்னனி இசையும் படம் நெடுக இழைந்தும், குழைந்தும், ஆக்ரோஷமாகவும், மெலடியாகவும் வந்துகொண்டேயிருக்கிறது.
~
படத்தின் ஹீரோ செலக்‌ஷன் பிரமாதம். கோபக்கார போலீஸ் வேஷத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விஷ்வக் சென்.  விக்ரம் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

ரோஹித் மற்றும் அபிலாஷாக வருபவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். உயர் அதிகாரி விஸ்வநாத் ஆக பானுச்சந்தர். பிரமாதம். 
~
எல்லாவற்றையும் விட சூப்பர்,  சாதாரண ஒரு ஆள் கடத்தல் புலனாய்வு கதையை அற்புதமாக ஆங்கில படங்களுக்கு இணையாக சொல்லியிருக்கும் நேர்த்தி. க்ளைமேக்ஸில் வரும் எதிபாரா திருப்பங்களை யூகிக்கவே முடியாதவாறு திரைக்கதை அமைத்திருப்பதில் இயக்குநர் சைலேஷ் கொலானுவின்  திறமை மிளிருகிறது. 

விக்ரம்  PTSD ல் உழலும் அந்த  காட்சியமைப்புகளின் நேர்த்தி செம. வேற லெவல் அவை. முக்கியமான தருணங்களில் இப்பிரச்சினை அவருக்கு வருவது போன்ற  காட்சியமைப்புகள் இயக்குநரின் புத்திசாலித்தனதை காட்டுகிறது.
~
படத்திற்கு இரண்டாம் பாகமும் வரும் என்பதாக கதை முடிக்கப்பட்டிருக்கும் விதம் அடுத்த பாகத்தை எதிர்பார்க்க தூண்டுகிறது.
~
நான் ஏற்கனவே சொன்னதையே மறுபடியும் இப்போது சொல்கிறேன்.

மலையாளம், தெலுங்கு சினிமாக்கள் தான் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒரு மதிப்பை தற்காலத்தில் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்ற என்னுடைய எண்ணம் மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

HIT The First Case - #SuperHit
~
❤️

Comments

Post a Comment