சினிமா - Hello Guru Prema Kosame - (Telugu) - (2018)

சினிமா

Hello Guru Prema Kosame -  (Telugu) - (2018)

2.0 போன்ற ஒரு அதிரடி படம் பார்த்துவிட்டு காமெடி கலந்த ஒரு மென்மையான காதல் படம் பார்ப்பது இனிமையாகத் தான் இருக்கிறது.

சொந்த ஊரை நேசிக்கும் இளைஞன் சஞ்சு பெற்றோரின் ஆசைக்காக தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்ற ஹைதராபாத் வருகிறான். ஹைதராபாத்தில்  நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதற்கு அவன் பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர்.  

தன் ஊரை மட்டமாக குறிப்பிட்டதற்காக ரயிலிலேயே ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் அனுவுடன்  அவனுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. 

சிறு மோதலுடன் இருவரும் ஹைதராபாத் வந்து சேர்கின்றனர். 

அனுவின்  தந்தை விஸ்வநாத் தான் தன் பெற்றோரின் நண்பர் என்பதையும் அவர் வீட்டில் தான் தங்க போகிறோம் என்பதையும் அறிந்து வியக்கிறான் சஞ்சு.    

நண்பரின் மகனை தனது நண்பராகவே கருதுகிறார் விஸ்வநாத். எல்லோரிடமும் தனது நண்பன் என்றே  அறிமுகம் செய்கிறார். விஸ்வநாத் வீட்டில் எல்லோரும் சஞ்சுவிடம்   அன்பு பாராட்டுகின்றனர்.  

விஸ்வநாத்திடம் ஒரு நல்ல பழக்கம். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றிவிடுவது தான் அது. 

அதுவே பின்னர் இப்படத்தின் சிக்கலான முடிச்சாகிறது. 

சிறு ஈகோவுடன் அனுவின்  மீது சஞ்சுவுக்கு  ஈர்ப்பு ஏற்படுகிறது. அனுவிற்கும் அவன் மீது மெல்லிய காதல் உருவாகிறது. 

மகளின்  மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் விஸ்வநாத்   ஒரு தந்தையாக அவளுக்கு நல்வாழ்வு அமைக்க முயற்சிகள் எடுக்கிறார். 

அமெரிக்காவில் வேலை பார்க்கும் பையன் ஒருவனை மணமகனாக நிசசயம் செய்கிறார். வாக்கும் கொடுத்துவிடுகிறார். இந்நிலையில்  அனுவிற்கும்  சஞ்சுவிற்கும்  இருக்கும் காதலை அறிந்து கொள்ளும்  விஸ்வநாத் நட்புக்கும் பாசத்திற்கும் இடையே சிக்கி இருதலை கொள்ளி எறும்பாகிறார். 

நட்பு ஜெயித்ததா? காதல் ஜெயித்ததா? 

சிம்பிளான கதை தான். காட்சிப்படுத்தியிருப்பதில் செம நேர்த்தி. 

விஸ்வநாத்துக்கும் சஞ்சுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. 

தலைமுறை இடைவெளிகளை நாசுக்காகவும், நாகரீகமாகவும் வெளிப்படுத்தும் இக்காட்சிகளில்  இயக்குனர் திரிநாத ராவின்  இருப்பு அழகாக வெளிப்படுகிறது.

சஞ்சு ஆக நடித்திருக்கும் ராம் போத்தினேனி யின் நடிப்பு செம மெச்சூர்டு. சாக்லேட் பாய் ஆகவும் இருப்பது அவரின் பிளஸ். 

அனுவாக அனுபமா பரமேஸ்வரன். அவரும் அருமையாக நடித்திருக்கிறார். அனுவின் அப்பா விஸ்வநாத் ஆக பிரகாஷ் ராஜ். கன கச்சிதம். அப்படியே அந்த கேரக்ட்டரில் ஒன்றி விடுகிறார். 

படத்தில் குறை என்றால் இசை தான். தேவி ஸ்ரீ பிரசாத். சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இயல்பான நகைச்சுவையுடன் கூடிய மென்மையான காதல் படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கலாம். 

அமேசான் ப்ரைம் இல் தற்போது இப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
~
❤️

Comments