BONUS - Marathi (2020)
சினிமா
BONUS - Marathi (2020)
பெரும்பாலான மக்களுக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்னு சில கதைகள் இருக்கும்.
உதாரணமாக உத்தமபுத்திரன், பாசமலர், எங்கவீட்டுப்பிள்ளை, சவாலே சமாளி, சம்சாரம் அது மின்சாரம், ரோஜா, ஆட்டோகிராப் போன்றவைகளை சொல்லலாம். காலத்தை வென்ற கதைகள் அவை.
அந்தவகையான கதைகள் பல மொழிகளிகளில், பல காலகட்டங்களில், பல்வேறு கலைஞர்களால் பலமுறை பல்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கும்.
மனசுக்கு நெருக்கமான அந்தவகை கதைகளை எத்தனை முறை, எத்தனை மொழிகளில் பார்த்தாலும் மக்கள் மகிழ்ச்சியடையவே செய்கின்றனர்.
ஏனெனில் அது அவர்களுக்கான கதை. அவர்களின் கதை.
அந்த வகையை சேர்ந்த மற்றுமொரு "மக்களின் படம்" தான் மராட்டி மொழியில் வந்துள்ள BONUS.
படம் எப்படி ?
~
தாத்தாவால் நாசிக்கில் உருவாக்கப்பட்ட அந்த பெரிய நிறுவனத்தை பேரன் ஆதி நடத்திவருகிறான்.
பேரன் பொருளாதாரம் படித்த நவீன சிந்தனைகள் உள்ளவன். டீடோட்டலர், உணவுப்பழக்கங்களில் வேகன். ஸ்ட்ரிக்டான பிஸினஸ்மேன்.
தாத்தாவோ பிஸினஸ் எதிக்ஸ், தொழிலாளர் நலன், சட்டதிட்டங்களை மதித்து நடப்பது என்று நேர்மையாகவும் , மனிதாபிமான உணர்வுடனும் பிஸனசை வளர்த்தவர்.
வயதானதால் பேரனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆலோசகராக தாத்தா நீடிக்க, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்த பிரச்சினையில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் மோதல் வருகிறது. பேரன் போனஸ்சுக்கு எதிராக இருக்கிறான்.
போர்டு மீட்டிங்கில் போனஸ் குறித்த விவாதம் வரும் போது 4-4 என்று டையில் (tie) பிரச்சினை முடிகிறது. இந்த பிரச்சினையின் மீது ஒரு மாதத்திற்கு பின் முடிவு எடுக்கலாம் என்று கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கூட்டம் முடிந்தபின் தாத்தாவும் பேரனும் காரில் திரும்பும்போது பேரன் தொழிலாளர்களை பற்றியான மோசமான தனது கருத்துகளை கூறுகிறான்.
தொழிலாளர்களுக்கு பரிந்துபேசும் தாத்தா ஒரு மாதம் அவர்கள் வாழும் வாழ்க்கையை நீ வாழ்ந்துகாட்டு. நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்கிறார்.
தாத்தாவின் வார்த்தைகளை சீரியஸ்ஸான ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளும் ஆதி சாதாரண ஒரு மனிதனாக ஒரு மாதம் வாழ்க்கையை வாழ வெறும் 5000 ரூபாய் பணத்துடன் மும்பைக்கு பஸ் ஏறுகிறான்.
தாத்தாவிடம் போட்ட சபதத்தில் ஆதி வெற்றிபெற்றானா ? சாதாரண மக்கள் பற்றிய அவன் மதிப்பீடு மாறியதா ? என்பதை யதார்த்தம் குறையாமல் இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த முடிவு தான் இப்படத்திலும்.
படம் நெடுக எங்கேயுமே செயற்கை மிகை தன்மைகள் இல்லாமல் இயல்பாக கதை சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் முக்கியமான பலமே நெகெட்டிவ் கேரக்டர்கள் எதுவுமே படத்தில் இல்லாதது தான்.
படத்தில் காணக்கூடிய காரெக்டர்கள் எல்லாமே யதார்த்தமான மனிதர்கள்.
படத்தில் வரும் மும்பையின் குடிசைப்பகுதி கூட சமீபத்திய படங்களில் காட்டப்பட்டதுபோல தாதாக்கள் நிறைந்ததாக, சட்டவிரோத காரியங்கள் அதிகமாக நடப்பது போன்ற ஏரியாவாக இல்லாமல், செயற்கையான மிகை தன்மைகள் அற்ற, இயல்பான நல்ல மனிதர்கள் வாழும் இடமாகவே காட்டப்படுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நாயகியாக வரும் மினல் ரொம்ப நல்லவராக, ஆதிக்கு ஃபிரண்ட்லியாக உதவும் யதார்த்தமான ஒரு பெண்ணாக வருகிறார். பக்கத்துவீட்டுப் பெண் போலான தோற்றம் அவரின் பலம்.
படத்தின் இறுதி காட்சியில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் உரையாடல் நெகிழ்ச்சியூட்டுகிறது. சவாலில் வெற்றி தோல்வி பற்றி அவர்கள் பேசும் வசனங்கள் செம.
எவர் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்ட முடியாத வகையில் படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு முயற்சியாக ஒரு டீம் ஒர்க் ஆக மிளிர்ந்து நிற்கிறது.
படம் முடியும்போது துக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ கண்களின் ஓரத்தில் நீர் கோர்த்து மனம் நெகிழ்ச்சியடைந்தால் அந்தப் படம் மனசுக்கு ரொம்ப நெருங்கிய ஒரு படம் என்று அடிக்கடி நான் குறிப்பிடு வதுண்டு.
இப்படத்தின் இறுதியிலும் மனம் நெகிழ்கிறது. கண்களின் ஓரம் நீர் தளும்பி நின்றது.
~
BONUS - நேர்மறையான நல்ல படம்.
❤️
தற்காலத்தில் குடும்பத்துடன் பார்க்க தகுதியான ரேர் மூவிகளில் ஒன்று.
அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.



Comments
Post a Comment