மனிதர்கள் - நடிகர் ராஜேஷ்
மனிதர்கள்
நடிகர் ராஜேஷ்
~
சில நாட்களுக்கு முன்...
அஷோக் நகர் மெட்ரோவில் இறங்கி வீட்டுக்கு ஏதாவது ஸ்னேக்ஸ் வாங்கிக் கொண்டுபோகலாம் என்று கீழே இயங்கும் A2b சென்றேன்.
கவுண்டரில் இருந்த பையன்கள் ரெஸ்டாரண்ட்டில் உணவருந்திக் கொண்டிருந்த ஒரு நபரைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
யாருப்பா.... என்றேன்.
சார்.. அவர் விஜய்க்கு அப்பாவாக நடிச்சவர் சார் என்றான் ஒரு பையன்.
அடக்கடவுளே.... என்ன ஒரு அறிமுகம்.
யார் அந்த அப்பா, அவர் முகத்தை பார்ப்போமே என்று அருகில் சென்றேன்.
இன்ப அதிர்ச்சி.
அவரை அங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.
வணக்கம் சார் என்றேன்.
வாங்க தம்பி.. வணக்கம் என்றார் இரு கைகளை குவித்து எழுந்து நின்று.
எப்படி சார் இருக்கீங்க.
நல்லா இருக்கேன் தம்பி. நீங்க.... என்றார்.
என்னைப்பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்தேன்.
அவர் தொடர்பான சில விஷயங்களைப் பற்றி பேசியதும் மனிதர் செம சந்தோஷமானார்.
உங்க எழுத்து எனக்கு ரொம்ப புடிக்கும். நிறைய விஷயங்கள் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இப்போல்லாம் ஏன் சார் நீங்க எழுதறதில்ல.... என்றேன்.
நான் இருந்த துறையில் நிறைய பேருக்கு மது, மாது போன்றவற்றில் அதீத ஈடுபாடு இருக்கும். அதுபோல எனக்கு படிப்பு தம்பி. இப்போ கூட பாருங்கள்.. காலையில் வைரமுத்து இந்த புத்தகத்தை கொடுத்தார். கிட்டத்தட்ட அதை முடிக்கும் நிலையில் இருக்கிறேன் இப்போது. இன்றைக்குள் முடித்துவிடுவேன் என்றார். அவர் டேபிளில் வைரமுத்துவின் சமீபத்திய "தமிழாற்றுப்படை" இருந்தது. நிறைய அடிக்கோடிட்டிருந்தார்.
ஸோ... ரசித்து படிக்கிறார் புத்தகங்களை.
ஆனால் பாருங்க தம்பி.... என்று தொடர்ந்தார்.
எனக்கு நிறைய எழுதவேண்டும் என்று ஆசை இருக்கிறது. தினமணி வைத்தியநாதன் வாய்ப்பு கொடுத்தார். வாராவாரம் எழுதினேன். நான் அறிந்ததை மக்களுடன் பகிர்ந்துகொண்டோமே என்ற ஆத்மதிருப்தி எனக்கு கிடைத்தது. சொல்லும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
ஆமாம் சார். நானும் தொடர்ந்து படித்திருக்கிறேன். தினமணி கதிரில் உங்கள் தொடர் அருமையாக இருந்தது என்றேன்.
அப்புறம் கல்கியில் எழுதினேன். அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. லேட்டஸ்ட்டாக தந்தியில் எழுத சொல்லி கேட்டார்கள். 30 வாரங்கள் எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்காக நிறைய படித்தேன். நிறைய தகவல்கள் சேகரிக்க உழைத்தேன். 8 வாரம் தொடர்ந்து என் எழுத்து தந்தியில் வந்தது... ஹ்ம்...
என்று ஒரு கேப் கொடுத்தார்.
என்னாச்சு சார் என்றேன்.
என்னன்னே தெரியல.. திடீர்னு நிறுத்திட்டாங்க. ஏன்னு கேட்டாலும் பதில் சொல்லமாட்டேங்கறாங்க என்றார். அவர் குரல் தழுதழுத்தது.
உங்கள் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை. விடுங்க சார் என்றேன்.
நீங்க ஏன் சமூகவலை தளங்களில் எழுதக்கூடாது என்றேன்.
எனக்கு டெக்னாலஜி தெரியல தம்பி. புரியவும் மாட்டேங்குது என்றார் அப்பாவியாக.
உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க சார். நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றேன். சரிங்க தம்பி என்று சொல்லும்போது சின்ன மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
தம்பிக்கு எந்த ஊர் என்று கேட்டார்.
நான் பதில் சொன்னேன்.
அவர் முகம் மீண்டும் சந்தோஷத்தில் மலர்ந்தது.
நானும் அந்த ஊர் தான் தம்பி. பக்கத்துல பட்டுக்கோட்டை என்றார்.
தெரியும் சார் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றேன்.
நீங்க பிண்ட்லே ஸ்கூலில் ஆசிரியராக வேலை பார்த்ததாக யாரோ ஒரு நண்பர் ஒருமுறை சொல்லக் கேள்வி சார்... என்றேன்.
இல்லை தம்பி. இண்டர்வியூவுக்கு வந்தேன். ஆபிரஹாம் பண்டிதரோட பேரனுக்கு ரெக்கமண்டேஷனில் அந்த வேலையை கொடுத்துட்டாங்க. நான் சென்னை வந்துட்டேன். நான் சென்னை வந்தது நல்லவேளை. அங்கேயே இருந்திருந்தா உங்களையெல்லாம் சந்தித்திருக்க முடியாதே என்றார்... வெகுளியாக.
உங்களின் சில படங்கள் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள் சார். (அவர் நடித்த அப்படங்களின் பெயர்களைக் கூறினேன்.) உங்கள் நடிப்பு அப்படங்களில் பண்பட்ட நடிப்பாக இருந்தது. இந்த வசீகரிக்கும் குரல் உங்களின் பிளஸ் பாயிண்ட் சார் என்றேன். குழந்தைபோல் மகிழ்ந்தார்.
அந்த படங்கள் எல்லாம் நிஜமாவே நல்ல படங்கள் சார். அவற்றை இயக்கியவர்கள் ஜாம்பவான் இயக்குனர்கள் என்றார்.
உங்களை மீண்டும் பெரிய திரையில் நிறைய பார்க்க விரும்புகிறேன் என்றேன்.
எங்கே தம்பி... சினிமா துறை முன்பு மாதிரி இல்லை. சுயநலம் பிடித்த மனிதர்களால் நிரம்பி வழிகிறது... என்றார் சோகமாக.
நானும் வாய்ப்பு கேட்டெல்லாம் போயி யாரிடமும் கெஞ்சி நிற்பதில்லை என்றார் பெருமையாக. இருந்தாலும் ஒரு சில வாய்ப்புகள் தானாக தேடி வரும்போது மட்டும் நடிக்கிறேன் என்றார்.
மனுசங்க முன்ன மாதிரி இல்லை. ரொம்ப கெட்டுப்போயிட்டாங்க. எல்லா இடத்திலும் சுயநலம். சமூக விரோத காரியங்களை பயப்படாமல் செய்கிறார்கள். தமிழ்நாட்டை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இனி வருங்காலத்தில் இங்கு வாழமுடியுமா என்று அச்சமாக இருக்கிறது... எல்லாம் இந்த டிமானிடேஷனுக்கு அப்புறம் தான் என்றார்.
இங்கே தான் எனக்கு மூளையில் பளிச் என்று மின்னல் வெட்டியது. அவர் தொழில் நடிப்பு, எழுத்து மட்டுமல்ல... என்பது அப்போது தான் ஞாபகம் வந்தது. :)
சரி சார்.. ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றேன்.
ஓ .. தாராளமா ... என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர் செல்பேசி சிணுங்கியது.
வாங்க தம்பி... உள்ளே தான் இருக்கேன். உள்ளே வாங்க... என்றவர் பரபரப்படைந்தார். வாயிலை நோக்கினார். நானும் நோக்கினேன்.
கதவை திறந்துகொண்டு சால்ட் அண்ட் பெப்பர் முடி, தாடியோடு, செம கலராக, எல்லோரையும் ஈர்க்கும் பெர்சனாலிடியுடன், லீவைஸ் ஜீன், வெளிர் நீல காதி முழுக்கை குர்த்தா, ரீபாக் ஷூவுடன் சிரித்துக் கொண்டே அவர் நுழைந்தார். கான்ட்ரோவர்ஷியல் பெர்சனாலிடி அவர். ஒரு மாதத்தின் பெயரையும், தேதியின் எண்ணையும் இயக்கத்தின் பெயராக வைத்திருப்பவர்.
வணக்கம் தம்பி.. வாங்க.. உட்காருங்க என்றார் அவரை நோக்கி மகிழ்ச்சியுடன் நம் நடிகர் எழுத்தாளர் கம் பிஸினஸ்மேன்.
வந்த அந்த மனிதர் சற்றே தயங்கி என்னை நோக்கி புன்னகைத்து ஒரு வணக்கம் சொல்லி கைகைளை குவித்தார். உட்கார்ந்தார்.
சரி சார். நீங்க பேசுங்க.. நாம் அப்புறம் சந்திக்கலாம் என்று நான் விடைபெற்றேன்.
~
பணம் செலுத்தி பார்ஸல் வாங்கி வெளியே வரும்போது கதவருகே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு கண்களை ஈர்த்தது...
"இங்கு அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் தயவுசெய்து பேசவேண்டாம்."
வாய்விட்டு சிரித்துக் கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
~
😜


Comments
Post a Comment