இசை - சங்கர்கணேஷ் - தவிர்க்கமுடியாத இசை இரட்டையர்கள்

இசை 

சங்கர்கணேஷ் - தவிர்க்கமுடியாத இசை இரட்டையர்கள்


மு.கு:

என்னுடைய இந்தப் பதிவு Facebook குரூப் ஒன்றில் வெளிவந்து நூற்றுக்கணக்கான லைக்குகள் மற்றும் பல ஷேர்கள் பெற்றது. அதை இங்கு மீள் பதிவேற்றம் செய்கிறேன்.
~

அலுவலக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த அந்த இளைஞரிடம்  உங்க பேர் என்ன? என்று பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டபோது.... 

சட்டென பதில் வந்தது - சங்கர் கணேஷ் என்று.

ஆச்சரியமாக நிமிர்ந்த்து பார்த்தேன். 

இந்த பெயர் என்னை எங்கெங்கோ இழுத்து சென்றது. 
~

" நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்... 
இசையென்னும் நதிவெள்ளம் ஓடும்.. 
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்.."

சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு பாட்டு பாடும் எம்ஜியார் நினைவுத்திரையில் வந்து போனார். 
~

என்ன ஒரு அற்புதமான பாடல் அது. ரொம்ப நாள் அந்த பாடலுக்கு இசையமையத்தது MSV என்றே நினைத்திருந்தேன்.  ஆனால் சங்கர் கணேஷ்  இசை என்று அறிந்த போது ஆச்சரியமாக தான் இருந்தது.
~

MGR பொதுவாக அவரின் திரைப்படங்களுக்கு கே.வி.மகாதேவன், MSV போன்றவர்களை மட்டுமே பயன்படுத்துவார். ஆனால் சங்கர் கணேஷ் க்கு தனது நான் ஏன் பிறந்தேன், இதயவீணை ஆகிய  இரண்டு  படங்களில் இசை அமைக்க அவர் வாய்ப்பு கொடுத்தது வியப்பான விஷயம் தான். 

வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இரண்டு படங்களிலுமே அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக கொடுத்தனர் இசை இரட்டையர்கள். 
~

கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்னும் தகவல் இன்னுமொரு ஆச்சரியம்.  

ஜி. ராமநாதன் காலத்தில் இருந்து ரஹ்மான் காலம் வரை களத்தில் இவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நிஜமாகவே  சாதனை தான்.
~

சங்கர் கணேஷ் என்றதும் 'டப்பாங்குத்து " பாடல்கள் தான் என்ற கருத்து பரவலாக பலரிடம் உள்ளது. ' டப்பாங்குத்து" என்பதும் இசையின் ஒரு வடிவம், ஜனரஞ்சகமான அந்த இசையும் மனதிற்கினியது தான் என்பதை இவர்களின் பல பாடல்கள் வெற்றிகரமாக நிரூபித்திருக்கின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு ஆகிய படங்களின் பாடல்கள்.
~

வெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே சங்கர் கணேஷ் என்று சொல்ல முடியாதபடிக்கு அருமையான பல மெலடிகளையும் வழங்கியிருக்கிறார்கள். 

கண்ணம்மா படத்தில் இடம்பெற்றிருக்கும் பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய  "எங்கெங்கும் உன் வண்ணம்..." பாடல் ஒரு அருமையான உதாரணம். பாடலில் இடம்பெற்றிருக்கும் அந்த புல்புல்தாரா என்னும் இசைக்கருவியை  இப்போது யாராவது வாசிக்கிறார்களா என்பதே தெரியவில்லை.  

ஆரம்ப கால சங்கர் கணேஷின் இசையில் பிரதானமாக TMS - சுசிலா ஜோடி நிறைய பாடியிருந்தாலும் அவர்களின் அடுத்தடுத்த படங்களில் புதிதாக  திரையுலகில் நுழைந்து வாய்ப்புகளுக்காக காத்திருந்த SPB, யேசுதாஸ், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் போன்றோர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வழங்கினர்.  

SPB,  சங்கர் கணேஷ் இசையில் பாடும்போது படு உற்சாகமாக   நிரவல்களை இழைத்தும் குழைத்தும் நிறைய பாடல்களை அற்புதமாக பாடியிருப்பார். (எ -கா)  பட்டிக்காட்டு ராஜாவில் வரும் "உன்னை நான் பார்த்தது..." .
~

குத்து பாடல்களுக்கு அடுத்து சங்கர் கணேஷ் மீது வைக்கப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு ஹிந்தி பாடல்களை அவர்கள் ஸ்ட்ரெய்ட் ஆக தூக்குவது. அவர்களே ஒப்புக்கொண்ட உண்மை தான் இது. தமிழுக்கு ஏற்றவாறு இசை அமைத்து அப்பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கியிருக்கின்றனர்.

நீயா படத்தில் இடம்பெற்ற "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.." பாடல் ஒரிஜினல் நாகின் படத்தில் வரும் பாடலின் தழுவல் தான். ஆனாலும்  அந்த பாடல் இன்னமும் மனதில் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது. 

பாலைவனச்சோலை படத்தில் இடம் பெற்ற "மேகமே..மேகமே.." கூட ஒரு கஜல் பாடலின் தழுவல் தான். ஆனால் தமிழுக்கேற்றாற்போல் அதனை கடடமைத்து சூப்பர் ஹிட் ஆக்கினார்கள். 

ஹிந்தி மட்டுமல்ல ஆங்கில பாடல்களையும் கூட நிறைய தழுவி டியூன் போட்டிருக்கின்றனர். போனி M குழுவின் " ரா..ரா.. ரஸ்புதின்.." பாடலை "நான் தானே ஒரு புதுக்கவிதை..." என்று வாணி ஜெயராமை கொண்டு பாட வைத்திருக்கிறார்கள். இந்த பாட்டும் தமிழ் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பாடல் தான்.
~

அன்புள்ள அப்பா படத்தின் மூலம் சிவாஜிக்கும்  இசை அமைத்து  சமன் செய்துவிட்டார்கள்  தங்களின்  கேரியரை. 

இப்படத்தில் இடம்பெற்ற "மரகதவல்லிக்கு மணக்கோலம்..."  "அன்புள்ள அப்பா..", 
"இது பால் வடியும் முகம்.." 
ஆகிய மூன்று பாடல்களுமே ஹிட். 
~

இளையராஜா சிகரத்தை தொட்டு விட்டார். ரஹ்மான் மேலே மேலே சென்று கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இணையாக தான் இன்னமும் அவுட் டேட்டட் ஆகவில்லை.  அப்டேட்டட் ஆக தான் இருக்கிறேன் என்று "இதயத்தாமரை" படம் மூலம் நிரூபித்தார். கனேஷ் (சங்கர் அப்போது மறைந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.)

ஒரு காதல் தேவதை .... 
யாரோடு யார் என்ற கேள்வி....
ஓ மை லவ்....

முற்றிலும் வித்தியாசமான சங்கர் கணேஷை இந்த பாடல்களில் கேட்கலாம். 
~

இவ்வளவு பாடல்கள் இருந்தாலும் எனக்கென்னவோ பிடித்தது யேசுதாஸ் பாடிய  "நியாயத்தராசு" படத்தில் வரும் "வானம் அருகில் ஒரு வானம்..." பாடல் தான்.
~

Comments