நட்பு - ஓவியர் ஜீவா என்கிற பன்முக திறனாளி

நட்பு -  ஓவியர் ஜீவா என்கிற பன்முக திறனாளி


என்னுடைய ஒரு மாமாங்க இணைய வாழ்வில் நான் சந்தித்த மகத்தான மனிதர் ஓவியர் ஜீவா.

அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் இவர் பெரும்பாலும் அறியப்படுவது அவரின் ஓவியத் திறனுக்காக. அருமையான ஓவியர். 

சினி ஆர்ட்ஸ் என்னும் புகழ்மிக்க பேனர் வரைபட நிறுவனம் நடத்தியவர், பின்னர் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டார். 

நல்ல சினிமா ரசிகர்.  தான் பார்த்த நல்ல சினிமாக்களை  நல்ல விமர்சகராக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

உலக சினிமா பற்றி இவர் எழுதிய "திரைச்சீலை" என்னும் நூலுக்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது.  

இந்திய சினிமாக்களையும், கலைஞர்களையும் எந்த வகையிலும் குறைவுபடுத்தாமல் அதன் பெருமைகளை உலக திரைப்படங்களுக்கு இணையாக அப்புத்தகத்தில் இவர் எழுதியிருப்பார். 

அதில் இடம்பெற்றுள்ள  கட்டுரைகளை படித்தால் உலகில் நாம் யாருக்கும் இளையோரல்ல என்ற எண்ணம் மேலோங்கும்.

நிறைய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் ஆகியோருடைய நட்பில் இருப்பவர். 

எல்லாவற்றையும் கடந்து, அவர் ஒரு நல்ல மனிதர். 

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. பிராமணர்களுக்கு குலதெய்வம் தொடர்பாக ஒரு காரசார விவாதம் ஆர்குட் தமிழ்க் குழுமத்தில் அப்போது ஓடிக்கொண்டிருந்தது. அப்போது  நான் சொன்ன என் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வந்தது. 

இணையப் போராளிகள் பலர் என்னை சுற்றி சுற்றி அடித்தார்கள். என்னுடைய கருத்தை நான் விரிவாக பேசவே விடவில்லை. மடை மாற்றிக் கொண்டேயிருந்தார்கள். 

ஒரே ஒரு பதிவு, அவரைப் பேசவிடுங்கள் என்று ஜீவா சாரிடம் இருந்து வந்தது. 

அவ்வளவுதான் கூச்சல் போட்டவர்கள் கப்சிப். என் கருத்தை தெளிவாக சொல்லிமுடித்தேன். 

அவரின் ஆளுமை மகத்தானது என்பதை அன்று உணர்ந்து கொண்டேன். 

அவரை நேரில் சந்தித்தபோது இவ்வளவு பிரபல மனிதர் எவ்வளவு சிம்பிள் என்று தோன்றிய வியப்பு இன்னமும் என் மனதிற்குள் சுழன்று கொண்டேயிருக்கிறது.

எனக்கும் அவருக்கும் இடையே உள்ள  ஒற்றுமை ஒன்று என்னை அதிசயிக்க வைத்தது. 

அவர் தந்தையும் பொதுவுடமைவாதி. என் தந்தையும் அதுவே. 

என்னைப் போலவே அவரும் இரண்டாம் தலைமுறை கம்யூனிஸ்ட். 

நான் கம்யூனிஸத்தில் இருந்து 
90களின் இறுதியில்   முற்றிலுமாக வெளியேறிவிட்டேன்.  வலதுசாரி பாதைக்கு மாறிவிட்டேன். 

என்னைப் போன்ற நிறைய வலதுசாரி நண்பர்களுடன் இடதுசாரியில் ஒரு சாதாரண அரசியல் நோக்கராக இன்னமும் அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்தப் பக்கம் வந்துவிடுங்கள் ஜீவா சார். 😊

Such a wonderful person. Respects sir 🙏

Comments