வாழ்க்கை - காஃபி

வாழ்க்கை - காஃபி 

❤️



காலை எழுந்தவுடன் காபி..
அதுவும் பில்டர் காபி தான் தொன்று தொட்டு சாலச் சிறந்து வந்து கொண்டிருக்கிறது.

இப்போது fresh & honesd, coffee day.., போன்ற பிராண்டட் அயிட்டங்கள் மார்கெட்டில் நிறைய வந்துவிட்டன. கூடவே Cream Milkம் பாக்கெட்டுக்களில்.

அந்த காலத்தில், அதாவது மன்னார்குடியில் இருந்த பால்ய காலத்தில், அதிகாலையில் உப்புக்காரத் தெரு பால் டெப்போவுக்கு சென்று கியூவில் காத்து நின்று ராஜேந்திரன் கோனார் கறந்த fresh பசும் பாலை வாங்கி வருவது எங்களின் அன்றைய தினத்து முதல் பணி. 

எங்களின் என்றால் நான் மற்றும் எனது தம்பி Sai Kannan.

டெப்போவில் நான்கைந்து கோனார்கள் இருந்தாலும் ராஜேந்திரன் someone special. தீவிர MGR பக்தர். சைக்கிளில் MGR பாடல்களைப் பாடிக்கொண்டே வருவார். முளைக்குச்சியில் கட்டிப்போடப்பட்டு, படுத்து அசை போட்டுக்கொண்டிருக்கும் பசுக்கள் அவர் வருகையை அறிந்தவுடனே கிருஷ்ணனைக் கண்ட கோபிகைகள் போல் மகிழ்ச்சியாய் துள்ளி எழுந்து நிற்கும். கன்றுகள் நின்ற இடத்திலேயே துள்ளும்.

கன்றுகளை முத்தமிட்டுக் கொஞ்சும் ராஜேந்திரன் பசுக்களை லெச்சுமி, கோமதி.. என்று பாசம் பொஙக அழைத்து தடவிக் கொடுப்பார். அந்த அன்புக்கு பசுக்களின் மடி தானே பால் சுரக்கத் துவங்கி விடும். கறந்த பாலை கணக்குப்பிள்ளையிடம் அளந்து ஊற்றி விட்டு சிட்டையில் எழுதிக் கொண்டு மாட்டை ஓட்டிக்கொண்டு உரிமையாளர்கள் செல்வார்கள்.

கணக்கு பிள்ளை என்று சொல்லக் கூடியவரின் பந்தா இருக்கிறதே, அதை விவரிக்கவே முடியாது. சொசைட்டியில் சம்பளம் வாங்கும் அவர்,  தான் தான் உலகுக்கே படியளப்பவர் போல் தோரனை காட்டுவார். பெரியவன் ஆனதும் பால் சொசைட்டி டெப்போ கணக்குப் பிள்ளை ஆக வேண்டும் என்பது தான் எனது பால்ய காலத்து கனவு. 

அதே சொசைட்டிக்கு தனி அலுவலராகி, அந்தக் கனவை இறைவன் நனவாக்கினான் பின்பு.

கறந்த பாலை வாங்கிக் கொண்டு பசங்களிடம் கதை பேசிக் கொண்டு வீடு வந்தால் நிலை கொள்ளாமல் வாசலுக்கும் கொல்லைக்கும் பரபரத்துக் கொண்டிருப்பார் பாட்டி. அவரின் உயிர் காப்பியில் தான் இருந்தது.

பின்னர், சில காலம் கழித்து சைக்கிள் பால் தெருவுக்கு வந்த போது டெப்போ சென்று வரும் வேலை எங்களுக்கு மிச்சமானது. பாட்டிக்கு டென்ஷன் அதிகமாகியது.

பால்காரர் வருவதற்கு லேட் ஆனால்  ஆயிரத்தெட்டு அர்ச்சனைகள் விழத் தொடஙகி விடும். 

முதல் டிகாஷனில் போடப்படும் அந்த முதல் காபி முதல் தரமாக இருக்கும்.

காப்பி பவுடர் வாங்க எங்களை நம்பாமல் தானே  சென்று வாங்கி வருவார். 

மன்னார்குடியில் சுதர்சன் காபி தான் அப்போது நம்பர் ஒன். காப்பித்தூளின் வாசம் கிட்டத்தட்ட ஒரு பர்லாஙகு தூரம் இருக்கும் பந்தலடியிலேயே மணக்கத் துவங்கிவிடும்.

 கால் கிலோ A காபி 25 சிக்கரி - இது தான் காம்பினேஷன். வறுத்து, அரைத்து வாங்கி வருவோம். வாங்கி வந்த பின்னும் ஸ்கூல் பையில் ரெண்டு நாள் காப்பித்தூள் வாசம் வீசும்.
~

பின்னர் பல்வேறு ஊர்களில் பல்வேறு சுவையுடன் கூடிய காப்பியுடனான எனது பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மாயவரத்தில் ரிலையன்ஸ் காபி, கும்பகோணத்தில் மோகன் காபி, திருவாரூரில் வாசன் காப்பி, சென்றமுறை சென்னையில் வசித்தபோது லியோ காபி. இந்த முறை லிங்கம் காப்பி.

அதுபோல் நல்ல காப்பி எங்கு கிடைத்தாலும் தேடிப்போய் குடித்துவிட்டு வருவேன்.

மன்னார்குடியில் உடுப்பி, கும்பகோனத்தில் வெங்கட்ரமணா, முருகன் கபே, மாயவரத்தில் அபிராமி, தஞசாவூரில் ராம் ஆர்யாஸ், திருவாரூரில் வாசன், திருவண்ணாமலையில் அருணா, வேலூரில் கண்ணா, சென்னையில் சரவண பவன்...., 

இதெல்லாவற்றையும் விட ருசியான காரைக்கால் பஸ் ஸ்டாண்டுக்கெதிரே வடிவேல் கடை.... 

பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
~

ஆந்திராவிலும், டெல்லியிலும, மும்பை, பூனாவிலும் பில்டர் காப்பி கிடைக்காமல் நான் தவித்த தவிப்பு கடுங்காவல் சிறைத் தண்டனைக்கு ஒப்பானது.
~

இன்று இப்போது இந்த நேரம், மனைவி ஊரில் இல்லை. காலை எழுந்து பில்டரில் டிகாஷன் இறக்கி, ப்ளாட் வாசலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பையில் இருந்த ஆவின் Cream பாலை காய்ச்சி, முதல் டிகாஷன் ஊற்றி நானே தயாரித்து நான் குடிக்கும் இந்த காப்பி.... ஆஹா.., 

தேவாம்ருதம்.
~

காப்பி வாங்கி வரட்டுமா என்று கேட்ட அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கும் ஒரு டம்ப்ளர் காப்பி கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் அவர்...

 ' அம்மா இல்லாமல் ் நீங்களே காப்பி போட்டுட்டீங்களா சார்' என்றார். 
~

பாவம், காபிக்கும் எனக்கும் உள்ள பந்தம் அவருக்கு எப்படி புரியும்.

~


Comments