சினிமா - ரெட்ரோமூவிஸ் - எங்கள் தங்கம்

சினிமா

எங்கள்தங்கம் - 1970

வரிசையாக புதுப்படங்கள். அதிலும் ஆங்கிலம், பிரெஞ்ச்,  கொரியன், மலையாளம், தெலுங்கு, மராத்தி வரை பார்த்து பார்த்து லேசாக அலுப்பு தட்ட ஆரம்பித்தது.

சரி, பழைய படங்கள் பார்த்து ரொம்ப நாளேச்சே, #அன்பேவா போன்ற ஒரு ரெட்ரோ மூவி பார்க்கலாம் என்று முடிவு செய்து MGR நடித்த #எங்கள்தங்கம் பார்த்தேன்.

படம் எப்படி ? 
~

படத்தில் MGR தங்கம் என்னும் கேரக்டரில் லாரி டிரைவராக வருவிறார்.

அவருக்கு சுமதி என்ற கண் பார்வை பறிபோன தங்கை ஒருவர். 

தங்கையின்  கண்பார்வையை மீட்பதற்காக MGR பணம் சேர்க்கிறார். தமிழ் நாடு அரசு சிறுசேமிப்பு துறை நிகழ்ச்சி ஒன்றில் தான் சேர்த்த பணத்தை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு  செய்கிறார். 

அந்த நிகழ்ச்சியில் அப்போதைய சிறுசேமிப்பு துணைத்தலைவர் MGR ம் வருகிறார். கொடுமைடா சாமி.

MGR இன் நண்பனாக சோ. உடைந்த ஆங்கிலத்தில் படு மொக்கை காமெடி பண்ணுகிறார்.  பாவம் MGR.

அப்புறம் MGR இன் பள்ளி நண்பன் AVM ராஜன். குடிகாரரான அவரை MGR தன் வீட்டு வாசலில் படுக்க வைத்துவிட்டு லாரி ஓட்ட போய் விடுகிறார். குடி போதையில் AVM ராஜன் சுமதியை கெடுத்து விடுகிறார். இதை அறிந்த MGR, நண்பனை பழிவாங்க சபதம் போடுகிறார்.

இதற்கிடையே சுமதி தற்கொலை செய்துகொள்ள கரெக்டாக அருகில் உள்ள ரயில்வே டிராக்குக்கு போகிறார். 

அங்கு ஒரு வயதான அம்மையார் சுமதியை காப்பாற்றி தன்னுயிரை பறிகொடுக்கிறார். 

சாகும்போது தன்னிடம் உள்ள தன் மகனின்  போட்டோவை MGR இடம் கொடுத்து சகவாச தோஷத்தால் வீணாகி போன தன் பையனை திருத்தி நல்வழிப் படுத்த சொல்கிறார்.

போட்டாவை பார்த்தால்... அது AVM ராஜன். 

MGR தடுமாறுகிறார். பழிவாங்குவதா அல்லது அந்த வயதான தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா ? 

கடைசியில் தங்கை சொல்வதை கேட்டு AVM ராஜனை தேடி போகிறார். 

இதற்கு நடுவே கதாநாயகி ஜெயலலிதா வேறு MGR ஐ சுற்றி சுற்றி வருவிறார்.

தமிழக அரசின் லாட்டரி சீட்டில்  MGR க்கு பரிசு விழுந்துவிடுகிறது. அண்ணா ஆட்சியில் ஏழைகள் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்று பஞ்ச் டயலாக் வருகிறது இங்கு.

அப்புறம் MGR ஏதோ  பாகவதர் வேஷத்தில் கதா காலட்சேபம் வேறு செய்கிறார். அது என்ன உழவுக்கென்றே தெரியவில்லை.

AVM ராஜனை தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார் MGR. 

முதலிரவு அன்றே அவர் பழைய கும்பலுடன் சேர்ந்து திருட போய்விடுகிறார். போலீஸ் துரத்த,  AVM ராஜனை தனியே விட்டுவிட்டு அவர் கும்பல்  தப்பிவிடுகிறது.

AVM ராஜன் போலிஸில் இருந்து தப்பித்தாரா, 

அவர் தாயாருக்கு MGR கொடுத்த வாக்குப்படி அவரை திருத்த முடிந்ததா, 

தங்கைக்கு கண் வந்ததா, 

ஜெயலலிதா காதலை ஏற்று MGR அவரை திருமணம் செய்தாரா...

இதெல்லாம் எனக்கு தெரியாது. 

எனெனில் இந்த படத்தை இதற்கு மேல் பார்க்க எனக்கு பொறுமையில்லை. ரிமோட்டை தூக்கிப்போட்டுவிட்டு  மொபைலை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்துவிட்டேன்.
~
யப்பா.. சாமி. இனி பழைய படம் பக்கம் போகவே மாட்டேன். 

இது சத்தியம். 
~

விஜயகாந்த்தின் சொக்கத்தங்கம் 100 மடங்கு பெட்டர் இதுக்கு.

Comments