மகாபாரதம் - என்ன ஆனான் ஏகலைவன்



ஏகலைவன் 
~

துரோணர் குரு தட்சிணையாக ஏகலைவனின் வலதுகை பெருவிரலைக் கேட்டார். சற்றும் தாமதியாமல் விரலை வெட்டி குருவின் காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன். நமக்கு தெரிந்த கதை இத்துடன் முடிகிறது. 

ஆனால், , அப்புறம் என்ன ஆச்சு ? ஏகலைவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதே மகாபாரதம்.
~

அதிர்ச்சியடைந்த அர்ஜுனன் "குருவே ஏன் இத்தகு கொடுமையான தண்டனையை தட்சிணையாக அவனிடம் கேட்டீர்கள்" என்று வினவினான். 

இனி பிளாஷ் பேக். 

~
பாண்டவர்களும், கௌரவர்களும், ஆச்சாரியார் துரோணரிடம் வில்வித்தை கற்றுக் கொள்ளும்போது அவர்கள் வனதரிசனம் மேற்கொண்டனர். 

வனதரிசனம் மேற்கொண்ட வேளையில் குரைக்க  முடியாதபடி ஒரு நாய்க்கு அம்புகளைக் கொண்டு வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிசயித்து நின்றார்கள்.

இச்செயலை செய்தது யார் என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது தான் ஏகலைவனைப் பற்றியும், வில் வித்தையில் அவனின் திறமைகள் குறித்தும் அவர்களுக்குத் தெரியவந்தது.
~

அர்ஜுனன் ஆச்சாரியார் துரோணரை பார்த்து கேட்ட கேள்விக்கு இப்போது துரோணர் பதில் அளித்தார். 

"சத்ரியர்களுக்கான போர்க்கலையை எவ்வாறு ஒரு  நிஷாதன் கற்றுக் கொள்ள இயலும் ? சமூக ஒழுங்குமுறை அமைப்பு சிதைந்து விடாதா ?  இதை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும் அர்ஜுனா ?" என்று துரோணர் பதில் அளித்தார்.

துரோணரின் இந்த செயலும் கட்டை விரலை வெட்டித் தரச்சொல்லி தான் கேட்ட குரு தட்சிணையை நியாயப்படுத்திய விதமும் இன்னமும் புதிய புதிய விவாதக் களங்களுக்கு இந்நிகழ்வை எடுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது.

மகாபாரதத்தின் அவிழாத பல முடிச்சுகளில் இதுவும் ஒன்று. அல்லது அதை அவிழ்க்கும் விதம் நமக்கு புரிபடவில்லை. ஏதோ ஒன்று.
~

சரி விரலை இழந்த ஏகலைவன் பிறகு என்ன ஆனான் ?
~

மகத மன்னன் ஜராசந்தனின் நம்பிக்கைக்குரிய படையணித் தலைவர்களில் ஒருவராக ஆன ஏகலைவன் ஜராசந்தனின் வேண்டுகோளின்படி ருக்மணி சுயம்வரத்தின்போது சிசுபாலனுக்காக தூது சென்றான். ஆனால், ருக்மணியோ யதுகுல கண்ணனை மணமுடித்தாள்.

கண்ணனின் ஜென்ம விரோதியான ஜராசந்தன் கடும் கோபம் கொண்டு கண்ணனின் தலைநகர் மதுராவின் மீது பதினேழு முறை கடும் தாக்குதல்கள் மேற்கொண்டு பேரழிவை விளைவித்தான். 

அவ்வாறு நடைபெற்ற ஒரு போரில் இடைக்குல கண்ணனால் ஏகலைவன் போர்க்களத்தில்  கொல்லப்பட்டான்.
~

தனது மக்களை பேரழிவில் இருந்து காக்க வேண்டி கண்ணன் தலைநகரை மதுராவில் இருந்து துவாரகைக்கு மாற்றினான். 

பீமனைக் கொண்டு ஜராசந்தனை கண்ணன் பழிதீர்த்தது பின்னர் தனியே நடந்து முடிந்தது.
~

ஏகலைவன் கட்டை விரலுடன் உயிருடன் இருந்திருப்பானேயானால், பாரதப் போரில் கௌரவர் பக்கம் சேர்ந்திருப்பான். அர்ஜுனனுக்கு இணையான வில்லாளியான ஏகலைவன் யுத்தத்தை கௌரவர்களுக்கு சாதகமாக கூட மாற்றியிருப்பான். 

அவனின் கதையை கட்டை விரலுடன் முடித்தது கூட போரின் முடிவுக்கான விதியின் ஒரு சூத்திரமாக இருக்கலாம்.
~
😰

Comments