ரெட்ரோ மூவிஸ் - இதயக்கமலம்


இதயக்கமலம் (1965)

MGR, சிவாஜி அப்பறம் கொஞ்சமே கொஞ்சம் ஜெமினி.  அந்த அளவு மட்டுமே எனக்கு பழைய படங்கள் பரிச்சயம். இந்த நிலையில் தான் சமீபத்தில்  இதயக்கமலம் பார்த்தேன்.
~
பாஸ்கர் உயிரையே வைத்திருந்த கமலா விஷ காய்ச்சலில் இறந்துவிடுகிறாள். அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பாஸ்கர் அவள் நினைவாக இதயக்கமலம் என்ற நினைவிடம் ஒன்று கட்டுகிறான். இந்நிலையில், கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்த பெண் ஒருத்தியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்கிறார் இன்ஸ்பெக்டர் பாலாஜி. 

அந்தப் பெண் நான் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவள் இல்லை, பாஸ்கரின் மனைவி கமலா என்கிறாள். அச்சு அசலாக கமலா போலவே இருக்கும் அவள் பாஸ்கரைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் உட்பட அனைத்தையும் இம்மி பிசகாமல் கூறுகிறாள். அதிர்ச்சியாகிறான் பாஸ்கர். ஆனாலும் அவள் தன் மனைவி இல்லை என்றும் அவள் இறந்ததை தான் பார்த்ததாகவும் தானே அவளுக்கு ஈமக்கிரியை செய்ததையும் சொல்லி  மறுக்கிறான். 

அவள் யார்? இறந்த கமலா என்ன ஆனாள்? பாஸ்கரின் குழப்பம் தீர்ந்ததா? 

ஆகியவைகளை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமும் அருமை. 

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இசை. பாடல்கள் செம கிளாசிக். 

"ஜி. ராமனாதனுக்கு பிறகு மாமா தான்..., மாமாக்கு அப்பறம் ராஜா தான்"  என்று சின்ன வயதில் என் மாமா கூறக் கேட்டிருக்கிறேன். 

அவரிடமே "யாரந்த உங்களுடைய  மாமா"  என்றதற்கு KV மஹாதேவன் என்று சொல்லியிருக்கிறார். KVM ஐ மாமா என்று தான் கூப்பிடுவார்களாம். 
~
🍀 உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல....

🍁மலர்கள் நனைந்தன பனியாலே....

🌺தோள் கண்டேன் தோளே கண்டேன்...

💖💖💖

என்ன மாதிரியான பாடல்கள் இவை. சான்ஸே இல்லை. இவ்வளவு இனிமையாக எல்லாம் இனி பாடல்கள் வருவதற்கு வாய்ப்பேயில்லை.

திரும்ப திரும்ப பலமுறை கேட்டிருக்கிறேன் இந்த பாடல்களை என் சிறிய வயதில்.
~
படத்தில் குறை என்று சொன்னால் ரவிச்சந்திரன் தான். ஷம்மி கபூரை மட்டமாக இமிடேட் செய்கிறார் நடிப்பில். KR விஜயா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் பாந்தமாக இருக்கிறார்.

இன்னொரு குறை சிரிப்பே வராத காமெடி. தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் ஆகிய படங்களில் தூள் கிளப்பிய பாலையாவா இவர்? சிரிப்பே வரவில்லை. 
~
நல்ல கதையுடன் கூடிய ஒரு திரைப்படம் பார்த்தோம் என்ற திருப்தியுணர்வு படம் முடிந்ததும் ஏற்பட்டது. 

அந்த வகையில் டைரக்டர் ஸ்ரீகாந்தை மனதார பாராட்டலாம்.
~
கொரிய, ஈரானிய பட சிடிக்களில் கதை தேடுவதை விட்டுவிட்டு இதயக்கமலம் போன்ற பழைய நல்ல திரைப்படங்கள் பார்த்தாலே இளைய இயக்குனர்களுக்கு உத்வேகம் பிறக்கும். புதிய கற்பனைகள் தோன்றும்.
~
இதயக்கமலம் - இதயத்துக்கு இதமானது.

❤️

Comments