காஃபி - காஃபி சூழ் உலகு
காஃபி சூழ் உலகு
வாழ்க்கைல ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வீக்னெஸ் ஸை ஆண்டவன் கொடுத்திருக்கான் போல. எனக்கு அது சினிமா மற்றும் காஃபி.
காபியை பற்றி எத்தனை முறை பேசினாலும் எழுதினாலும் ஏனோ அலுப்பதேயில்லை.
நான் பார்க்கும் வேலையில் பயணம் மற்றும் பணிமாறுதல் என்பது அடிக்கடி நிகழும் நிகழ்வு.
எனக்கு கஷ்டத்தையும் அலுப்பையும் ஏற்படுத்தும் ஒரு இடையூறாக அவை இருந்தாலும் அனுகூலங்களும் பலவிதங்களில் கிடைத்துள்ளன.
நிறைய ஊர்கள், நிறைய மக்கள், நிறைய நட்பு, நிறைய அவர்களின் குணநலன்களை பார்த்து வியத்தல், விதவிதமான உணவுகளை ருசிபார்த்தல்.., இவையெல்லாம் தான் அந்த அனுகூலங்கள்.
எத்தனை பேருக்கு இவையெல்லாம் கிடைத்திருக்கும் ?
சரி காஃபி மேட்டருக்கு வருவோம்.
படிக்கிற காலத்தில் மன்னார்குடி சுதர்சன் காபி தான் வீட்டில். மன்னார்குடிக்காரர்களுக்கு அதன் ருசி நன்கு தெரியும். அந்த ஊரில் பிரமாதமான காபி அது.
பின்னர் மயிலாடுதுறையில் இருந்தபோது ரிலையன்ஸ். இப்போது கூட அங்கு ரிலையன்ஸ் தான் பேமஸ். அதன் சுவைக்கு பெரும்பாலான மயிலாடுதுறைவாசிகள் அடிமை.
கொஞ்ச நாள் நன்னிலம். அங்கு ராமன்ஸ் காபி. தஞ்சாவூர் ராமன்ஸ் காபி கிளை அது. அது வேறுவகையான சுவை. உதட்டில் இருந்து உள்ளத்துக்கு டிரான்ஸ்பர் ஆகும் அதன் டேஸ்ட்.
பின்னர் சென்னை. சென்னையில் அப்போது பேச்சிலர். தி. நகர் சரவணபவன் தான் தினசரி காபிக்கு. பேர் பெற்ற ஸ்தலம் அது. அந்த ருசி ஒரு மணி நேரத்துக்கு நாக்கில் நீடிக்கும்.
டிகாக்ஷனில் லைட்டா அபின் கலக்கறாண்டா என்று என் மாமா கூறுவார். உண்மையா என்று தெரியாது.
கல்யாணம் ஆகி கும்பகோணம். ஆரம்ப நாட்களில் சாந்தி காபி. அப்புறம் கிருஷ்ணன் சார் அறிமுகப்படுத்தியது மோகன் காபி. பிரமாதமான வாசனை. சுவையும் பிரமாதம். கும்பகோணம் வாசிகள் வெளியூர் சென்றாலும் கூரியரில் மோகன் காபி வாங்குகிறார்கள் இப்போதும். யு.எஸ்.ஸில் இருப்பவர்களுக்கு கூட அட்ரஸ் கொடுத்தால் அனுப்பி வைக்கிறார்கள்.
திருவாரூரில் வாசன் காபி. பஸ் ஸ்டேண்ட் விட்டு வெளியே வந்தாலே வாசன் காபி வாசம் மூக்கை துளைக்கும். கடை வாசலில் கூட்டம் அள்ளும். என்னோட சீனியர், துணைப்பதிவாளர் அமரர் திரு மணலி ராஜேந்திரன் சார் தினசரி 100 கிராமாக வாங்குவார். அவருக்கு ஃபிரெஷ் ஆக குடிக்கவேண்டும் டெய்லி.
நாகப்பட்டிணத்தில் பணியாற்றியபோது மதியம் மூன்று மணிக்கு ஃபிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு அலுவலக உதவியாளர் சங்கர் கிளம்பிவிடுவார். உமா காபி அங்கு ரொம்பவே ஃபேமஸ்.
நாகை டூ மயிலாடுதுறை பயணம் செல்லும்போதெல்லாம் காரைக்காலில் ஜீப்பை நிறுத்தி வடிவேல் கடை காபி. வடிவேல் கடை பஸ் ஸ்டேண்ட்டுக்கு எதிரே ஒரு சின்ன கடை. காபி மட்டுமே போடுவார் வடிவேலு. காலை மாலை இரு வேளைகளிலும். காரைக்காலில் பிரபலங்கள், சாதாரண ஜனங்கள் எல்லோரும் எனிடைம் கடைவாசலில் தவம் கிடப்பார்கள். அந்த காபியின் சுவை அவ்வளவு அற்புதம். முழுக்க முழுக்க கறந்த பசும்பால் காபி. அதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பரசுராம் Parasuraman Undal சார்.
பின்னர் மீண்டும் சென்னை. மேற்கு மாம்பலத்தில் லிங்கம் காபி. ஸ்டேஷன் ரோடு முழுக்க காபி வாசனை நிறைந்து மணக்கும். அப்புறம் கோடம்பாக்கம் சரவணா காபி. அது ஒரு வித்தியாசமான டேஸ்ட்டு.
இப்போது வீட்டில் குடிப்பது Fresh and Honest டின் Alive. ஒண்ணாங்கிளாஸ் காபி அது. 👌
சென்றமுறை கூர்க் சென்றபோது விராஜ்பேட் பஸ் ஸ்டேண்ட் டில் ஒரு சின்ன கடையில் காபி கொட்டை வாங்கி அரைத்து எடுத்து வந்தேன். ரெண்டு கிலோ. பிரமாதம். அந்த சுவை நாவிலேயே இருக்கிறது இன்னமும். பொடி தான் சீக்கிரமே காலி ஆச்சு. யாராவது கூர்க் போனால் கொஞ்சம் சொல்லுங்கள். பிராஜ்பெட்டில் அந்த கடை இருக்கிறது.
இது தவிர அவ்வப்போது பெங்களுரில் இருந்து கூரியரில் அங்கு பேமஸ் ஆன சுமா காபி பவுடர் இறக்குமதி செய்து கொள்வேன்.
ஆனாலும் நான் சாப்பிட்ட காபிகளிலேயே அதிக ருசியானது எது என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் கூட சட்டுனு சொல்வேன்....
ஸ்ரீரெங்கம் முரளி காபி என்று.
சின்ன கடை. காலை மாலை குறிப்பிட்ட கொஞ்சம் நேரம் மட்டுமே வியாபாரம். காபி மட்டுமே ஸேல்ஸ். மறைந்த முதல்வர் கலைஞர் முதற்கொண்டு பலபேர் முரளி காபியின் தீவிர ரசிகர்கள். அங்குபோனால் குறைந்தது ரெண்டு டம்ப்ளர் காபி குடிக்காமல் கிளம்புவதில்லை. திருச்சி போனால் முரளி காபி சாப்பிடாமல் என்றுமே திரும்பி வருவதில்லை இப்போதெல்லாம். Thanks to Arun Babu and RDD திரு. லோகநாதன் சார்.
எவ்வளவோ காபி ருசி பார்த்தாச்சு. ஆனாலும் இன்னும் இன்னும் என்ற தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
என் தேடல் காபி யில் தான் என்று ஆண்டவன் நிர்ணயித்துவிட்டான் போல.
சொல்ல விட்டுப்போச்சு. ஒருமுறை ஏற்காட்டில் காபி எஸ்டேட் ஒன்றின் நேரடி அவுட்லெட்டில் நண்பர் திரு கமலக்கண்ணன் M.s. Kamalakannan வாங்கி கொடுத்த காபி பவுடர். ஏற்காடு எக்ஸ்பிரஸ் முழுக்க மணம் வீசியது. பிரமாதமான சுவை. நன்றி கமல்.
~
❤️


Comments
Post a Comment