இசை - விஜயபாஸ்கர் - சம்சாரம் என்பது வீணை
இசை
விஜயபாஸ்கர் - சம்சாரம் என்பது வீணை
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா...
கண்ணே
புதுக்குரல் கொடுக்கட்டுமா...
~
படம் - தொட்டதெல்லாம் பொன்னாகும்
இசை - விஜயபாஸ்கர்
~
ஆரம்ப கால அந்த SPB யின் புதுக்குரலில் மயங்காதவர்கள் யார் தான் இருந்தனர்?
அந்த புதுக்குரலை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய பலரில் முக்கியமான ஒருவர் இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்.
~
MSV படுபிஸியாக இருந்த 70களில் V. குமார், சங்கர் கணேஷ், போன்றோருடன் அவரின் வேலைப்பளுவை குறைத்தவர்களில் ஒருவர் விஜயபாஸ்கர்.
விஜயபாஸ்கர் கன்னடத்தின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர். இருந்தாலும் அவ்வப்போது வெக்கேஷனுக்கு வந்துபோகும் வேடந்தாங்கல் பறவை போல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் இசை அமைத்து வந்தார்.
கொஞ்சமே கொஞ்சம் தமிழ் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருந்தாலும் எல்லாப் படங்களிலும் தன் பெயர் சொல்லும் வண்ணம் சில பாடல்களை முத்திரைப் பாடல்களாக்கிவிட்டுத் தான் சென்றிருக்கிறார்.
~
அன்பு மேகமே இங்கு ஓடி வா....
- எங்கம்மா சபதம்
ஓ இளமை அழைக்கிறது....
- எங்கம்மா சபதம்
பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு...
- உங்க வீட்டு கல்யாணம்
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு ...
- யாருக்கு மாப்பிள்ளை யாரோ
ஆவணி மலரே... ஐப்பசி மழையே...
- தொட்டதெல்லாம் பொன்னாகும்
எனது வாழ்க்கைப் பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்....
- மோகம் முப்பது வருஷம்
சம்சாரம் என்பது வீணை...
- மயங்குகிறாள் ஒரு மாது
ஒருபுறம் வேடன்.. மறுபுறம் நாகம்...
- மயங்குகிறாள் ஒரு மாது
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்...
- மயங்குகிறாள் ஒரு மாது
வானுக்கு தந்தை எவனோ..மண்ணுக்கு மூலம் எவனோ...
- ஆடுபுலி ஆட்டம்
என்னடா பொல்லாத வாழ்க்கை...
- தப்புத் தாளங்கள்
~
எனக்கு தெரிந்தவைகளை மட்டும் மேலே பட்டியலிட்டிருக்கிறேன். வேறு பாடல்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம் நண்பர்களே.
தப்பு தாளங்களுடன் அவரின் தமிழ்ப்பட பிரவேசம் முடிவுக்கு வந்தது. தமிழ் திரை இசையில் இளையராஜாவின் பிரம்மாண்ட எழுச்சி விஜயபாஸ்கரை கன்னட படவுலகில் முழு கவனத்தையும் செலுத்த வைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.
~
அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக விஜயபாஸ்கர் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒரு தகவல். பாடல்களே இல்லாத அவரின் 'மதிலுகள்' படத்தின் முழுப் பின்னணி இசையும் விஜயபாஸ்கர் தான்.
அடூரின் 'கதாபுருஷன்', 'விதேயன்' படங்களுக்கும் அவரே தான் இசை.
~
கன்னடத்தில் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். அங்கே அவர் ரொம்பவே பாப்புலர். டாக்டர் ராஜ்குமாரின் பல படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இவர் இசையில் ராஜ்குமார் ஒரு பாடலும் பாடவில்லை என்பதும் ஆச்சரியமான தகவலே. ராஜ்குமார் வழக்கமாக தனது படங்களில் தானே தன் சொந்தக் குரலில் பெரும்பாலான பாடல்களை பாடிவிடுவார்.
அதை ஈடுகட்டும் விதமாக விஜயபாஸ்கரின் மகள் திருமண வரவேற்பில் ராஜ்குமார் இவர் இசையமைத்த பாடல்களை விருந்தினர்கள் முன்னிலையில் பாடினாராம்.
~
இன்னொரு சுவாரஸ்யமான தகவலை நண்பர் ஒருவர் சொன்னார்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் படத்தில் இடம்பெற்ற 'பனிமலர் மேகங்கள்' பாடலும் திக்கு தெரியாத காட்டில் படத்தில் இடம்பெற்ற 'கேட்டதெல்லாம் நான் தருவேன்..' பாடலும் கிட்டத்தட்ட ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் ஆகும் என்றும் இவை இரண்டுமே 'சுத்த சாரங்க்' ராக அடிப்படையில் அமைந்த பாடல்கள் என்றும் புதிய தகவலைத் தந்தார்.
~
விஜயபாஸ்கர் 2002 ல் மறைந்துவிட்டாலும் தென் மாநிலங்கள் முழுவதிலுமே அவர் இசையமைத்த ஏதாவது ஒரு பாடல் எங்காவது ஒரு மூலையில் நித்தமும் ஒரு முறையாவது ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன.
~
எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடல் - சம்சாரம் என்பது வீணை...


Comments
Post a Comment