பயணம் - ஊட்டி - மலைராணி முந்தானை சரிய சரிய

பயணம் - ஊட்டி

மலைராணி முந்தானை சரிய சரிய 

பயணங்கள் சுவாரஸ்யமானவை. தொடர் பயணங்கள் எப்போதும் எனக்கு அலுப்பூட்டியதேயில்லை.
~

ஊட்டி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்ய இந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்தது. 

கோவை வந்து இறங்கும்போதே சிலுசிலுப்பும் சில்லென்ற சாரலும் புன்முறுவலுடன்  வரவேற்றன. 

கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
~

மேட்டுப்பாளையத்தில் refresh பண்ணிக் கொள்ள நண்பர் ஒருவரின் காடேஜில் ஒரு சின்ன ஹால்ட்.

குளித்து முடித்து அங்கேயே சுவையான சிற்றுண்டி. இட்லி, பணியாரம் மற்றும் கோதுமை ரவா உப்புமா. உடன் கொஞ்சம் டீ.
~

ஊட்டி நோக்கிய பயணம். வளைந்து வளைந்து செல்லும் பாதை மங்கை மேகக் கூந்தலோ பாடல் மனதில் வந்து வந்து அலை மோதியது.

சென்றமுறை பார்த்த மலைப் பாதைக்கும் இம்முறை பார்த்த மலைப்பாதைக்கும் நிறைய வித்தியாசங்கள். சாலையெங்கும் நிறைய கடைகள்.  முன்பெல்லாம் வாலையாறைக் கடந்துவிட்டால் அடுத்து டீ குடிக்க வேண்டுமென்றால்  குன்னூர் தான். இப்போது சாலையெங்கும் நிறைய ஆக்கிரமிப்பு கடைகள்.
~

கேத்தி மற்றும் தலையாட்டி மந்துவில் அலுவலகம் தொடர்பான சிறு சிறு வேலைகள். லேசான காலை நேர  குளிர் உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. டீ, சிற்றுண்டி சாப்பிட்டுட்டு தான் போகணும் என்று அடம் பிடித்த, விருந்தினர்களை உபசரிக்கும் நீலகிரி மக்களின் அந்தப் பண்பு வியக்க வைக்கிறது. 
~

காலை நேரத்தில் ஸ்வெட்டருடன் யூனிபார்ம் அணிந்து சந்தோஷமாய் சிறு சிறு குழுக்களாக  பள்ளி செல்லும் மாணவர்கள். பன்னீர் புஷ்பங்கள் படத்தின் ஸ்கூல் காட்சிகள் தான் நினைவுக்கு வந்தது. 
~

சைவ உணவுக் காரர்களுக்கு ஊட்டி எப்போதுமே கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இம்முறை ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. A2B புதிய கிளை இப்போது ஊட்டியில் திறக்கப்பட்டுள்ளது. விசாலமான உணவுக்கூடம். அன்பான உபசரிப்பாளர்கள். இவை எல்லாவற்றையும் விட சுவையான உணவு வகைகள். முழு லன்ச் சாப்பிட முடியாதவர்கள் மினி மீல்ஸ் சாப்பிடலாம். சரியான அளவு செமையான சுவை. நன்றி A2B.
~

பயணத்தின் இறுதிகட்டமாக தமிழகம் தங்கும் விடுதியில் சிறிய இளைப்பாறல். உள்ளத்தை அள்ளித் தா படம் எடுக்கப்பட்ட இடம். என்ன பிரம்மாண்டமான மாளிகை. குயின்ஸ் பேலஸ் க்கு போவதற்கான சுரங்க வழி ஆச்சரியமூட்டுகிறது. அங்கு தான் கவுண்டமணி உட்கார்ந்து "டேய் கிட்னா நாயே" என்பார்.
~

கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கிய பயணம். நீலகிரியின் அழகை ரசிக்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். கொஞ்சம் சுற்று தான். நல்ல சாலை. டிராபிக் ரொம்ப குறைச்சல். ஆனால் அருமையான அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும்.
~

சட் சட்டென மாறும் வானிலை நீலகிரியின் ஸ்பெஷல். சுளிர் வெய்யில், சில்லென்ற குளிர், பட படவெனப் பெய்யும் மழை, குளிர்ந்த சாரல்... லவ் யூ நீல்கிரிஸ்.
~

ஊட்டியில் நண்பர் சுந்தர் சொன்னது நினைவுக்கு வந்தது. 

"ஊட்டியின் கிளைமேட் பெண்களின் மனசைப் போன்றது சார். எப்ப எப்படி இருக்கும்னு தெரியாது. சட் சட்டென மாறிடும் சார்."
😜
பயணங்கள் இனிமையானது. அது தரும் அனுபவங்கள் இதமானது.

நன்றி நீலகிரி.
:
~
❤️

Comments