வரலாறு - கிரேஞ்ச் மாளிகை
வரலாறு
~
ஆப்கன் மன்னர்கள் சிறை வைக்கப்பட்ட ஏற்காடு கிரஞ்சு (Grange) மாளிகை.
வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யப்படாத பல நிகழ்வுகள், இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
பாபர் முதலான மொகலாய மன்னர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் வந்தார்கள்.
ஆனால் ஆப்கானிஸ்தான் மன்னர்களை சிறை வைத்த கிரஞ்சு மாளிகை, நூற்றாண்டுகள் கடந்தும் ஏற்காட்டில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
ஏற்காடு மான்போர்டு பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பழமை வாய்ந்த காப்பி தோட்டங்களுக்கு மத்தியில் இருக்கிறது இந்த கிரஞ்சு மாளிகை. ஏற்காட்டில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் மாளிகை என்ற பெருமையும் இதற்கு உண்டு.
கி.பி.1820களில் சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த டேவிட் காக்பர்ன் என்பவரால் கோடை காலத்தில் பாதுகாப்பாக தங்குவதற்காக காட்டேஜ் பாணியில் இந்த மாளிகை கட்டப்பட்டது. இரண்டு அடுக்குகளில் விசாலமான அறைகளை கொண்டும் 20ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாதுகாப்பான ஒரு கோட்டையை போல் வடிவமைத்து கிரேஞ்ச் மாளிகை கட்டப்பட்டுள்ளது.
மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் அரேபிய தீபகற்பத்திலிருந்தும், சைபீரிய நாட்டிலிருந்தும் ‘‘காப்பியா அராபிக்கா’’ என்ற உயர் ரக காப்பி செடிகள் கொண்டு வந்து பயிரிடப்பட்டது என்பது அரியதகவல்.
~
ஆப்கானிஸ்தான் நாட்டின் மன்னராக இருந்தவர் அயூப்கான். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக ஆப்கன் போரில் போரிட்டு தோற்ற அயூப்கான் மற்றும் அவரது 7 மகன்கள், மருமகள்கள், குழந்தைகள், வேலைக்காரர்களை என அனைவரையும் கைது செய்து அலகாபாத்தில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள்.
இந்த நேரத்தில் முதல் உலகப்போர் துவங்கியது.
ஆப்கானிஸ்தானிலும் பிரச்னை எழுந்தது. அப்போது சிறை வைக்கப்பட்டவர்களை இந்தியாவின் தென்கரையோர பகுதிக்கு கொண்டு வர முடிவு செய்தனர்.
சேலம் ஏற்காட்டிற்கு அயூப்கான் குடும்பத்தினரை ரயிலில் கொண்டு வந்து கலெக்டர் லீ யிடம் ஒப்படைத்தனர்.
1917ம் ஆண்டு மே 17ம் தேதி, அயூப்கான் குடும்பத்தை சேர்ந்த சுல்தான் அகமது கான், அப்துல் அஜீஸ்கான், ஷேர் அகமது கான், நூர் அகமது கான், முகமது சர்வர்கான், உமர்கான், அப்துல் ரஷீத்கான் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கலெக்டர் லீ கிரஞ்சு மாளிகையில் சிறை வைத்தார்.
ஏற்காட்டின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு ஒத்துப்போனது.
~
இந்தியாவின் வட மாநிலங்களில் சிப்பாய் கலகம் ஏற்பட்ட நேரத்திலும் ஏற்காடு கிரேஞ்ச் மாளிகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த கலவரம் சேலத்திற்கு பரவினால் பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு அதிகாரிகள் கிரஞ்சு மாளிகைக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் இந்த மாளிகை மீண்டும் பலப்படுத்தப்பட்டது. சேலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மூன்று பீரங்கிகளும் கிரஞ்சு மாளிகையை சுற்றிலும் நிறுத்தப்பட்டது.
கிரஞ்சு மாளிகையும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நிலங்களும் பின்னர் ஹுசைன் சேட் என்பவரின் பாதுகாப்பில் இருந்து வந்தது. தற்போது அவரது வழித்தோன்றல்கள் பராமரித்து வருகின்றனர்.
இதுவரையிலான தகவல்களுக்கு skyscrapercity.com க்கு நன்றி.
~
ஆப்கன் மன்னர்கள் வசித்த புகழ்மிக்க இந்த கிரஞ்சு மாளிகை தற்போது யாரும் வசிப்பாரின்றி பேய் பங்களா போல் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளிவந்த சில பேய்ப்படங்கள் இந்த பங்களாவில் தான் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக கிரஞ்சு எஸ்டேட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
~
கிரஞ்ச் எஸ்டேட்டில் ஆங்கிலேயர்கள் தங்கிய ஏனைய இடங்கள் சில பழமை மாறாமல் மாற்றியமைக்கப்பட்டு கிரஞ்சு ரிஸார்ட் ஆகியுள்ளது இப்போது. (பேய் பங்களாவான கிரஞ்சு பங்களா மிகவும் தள்ளி ரிஸார்ட்டுக்கு வெளிப்புறம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. பயம் வேண்டாம். )
~
17 காட்டேஜ்கள் உள்ள இந்த ரிஸார்ட் இருக்கும் இடம் கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவுள்ள காபி மற்றும் மிளகு எஸ்டேட் அமைந்துள்ள காட்டின் நடுவே அமைந்துள்ளது.
~


Comments
Post a Comment