லைப்ரரி - மொஸாட் - என். சொக்கன்
லைப்ரரி
"மொஸாட்"
by என்.சொக்கன்
~
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் முதலில் வாங்கிய நூல் "மொஸாட்".
புத்தகத்தை வாங்குவதற்கு முக்கிய காரணம் அந்த புத்தகத்தின் தலைப்பு தான்.
"மொஸாட்" என்னும் பெயரை கேட்டாலே ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. உலகின் மிக சிறந்த உளவு அமைப்பு இஸ்ரேலின் மொஸாட்.
பிரமிக்க வைக்கும் அவர்களின் சாகசம் நிறைந்த சம்பவங்கள் பல நூல்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து விற்பனையிலும், வசூலிலும் சக்கை போடு போட்டிருக்கின்றன.
கொஞ்ச நாள் முன்பு தான் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் கின் "மியூனிக்" படம் பார்த்தேன். 1972இல் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை ஒட்டுமொத்தமாக போட்டு தள்ளிய பாலஸ்தீன தீவிரவாத இயக்க மாஸ்டர் மைண்ட் தலைகளை ஒவ்வொன்றாக வீழ்த்தும் மொஸாட்டின் சாகசம் வியக்க வைத்திருந்தது என்னை.
~
சரி, புத்தகத்தை பற்றி பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்ததன் விரிவான நூல் தான் "மொஸாட்".
மொஸாட் அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? இதுவரை அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? சிறிய ஒரு அமைப்பாக தோற்றுவிக்கப்பட்ட மொஸாட் அமைப்பு உலகிலேயே படு இன்டெலிஜெண்டான மாபெரும் அமைப்பாக வளர்ந்தது எப்படி? போன்ற விவரங்களை சுவாரஸ்யமாக அதே சமயம் கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் வழங்கியிருக்கிறார் திரு என். சொக்கன்.
1972 மியூனிக் ஒலிம்பிக்சில் நிகழ்ந்த அந்த கருப்பு வெள்ளிக்கிழமைக்கு மூளையாக செயல்பட்ட ஒவொருவரையும் தேடித் தேடி நாடு நாடாக அலைந்து அவர்களை துரத்தி பழிவாங்கும் "ரத்த ஒலிம்பிக்ஸ்" என்னும் முதலாம் அத்தியாயமே செம கலக்கல்.
மொஸாட்டின் மிகப்பெரிய பலமே அதன் தகவல் திரட்டும் திறன் தான். ஒவ்வொரு சின்ன தகவல்களை கூட உதாசீனப்படுத்தாமல் தொகுத்து ஒரு பெரிய சம்பவம் நிகழ்த்த களம் அமைத்துக் கொடுக்கும் மொஸாடின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
எகிப்தின் மிகப்பெரிய விமானப்படையை ஜஸ்ட் லைக் தட் உள்ளே புகுந்து கண்மூடி கண்திறக்கும் நேரத்திற்குள் அழித்தொழித்த விதமாகட்டும், பெரியண்ணன் அமெரிக்காவுக்கே தெரியாமல் ரகசியமாக அணு உலை அமைத்து, திருட்டு தனமாக ஜெர்மனியை ஏமாற்றி மஞ்சள் கேக் எனப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை திருடி வந்ததாகட்டும், பிரான்சால் பறிமுதல் செய்யப்பட்ட அதிவிரைவு போர்ப்படகுகளை ஒரு கிறிஸ்துமஸ் முன்னிரவில் அவர்களுக்கு தண்ணி காட்டி கடத்தி இஸ்ரேலுக்கு கொண்டு வந்ததாகட்டும் எல்லாவற்றிலும் உள்ள மொஸாட்டின் குறிப்பிடத்தகுந்த பங்கை அழகாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் சொக்கன்.
மொஸாட் பற்றி நூலில் அளித்துள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. ஈராக் அணு உலையை மனித உயிரிழப்பில்லாமல் அழித்தொழித்த மொஸாடின் சாகசம் வாய் பிளக்க வைக்கிறது. வளர்த்த கடா பார்பில் பாய்ந்தது போல் அமெரிக்க அண்ணனையே உளவு பார்த்த மொஸாட்டின் கேப்மாரித்தனம் புன்னகைக்க வைக்கிறது.
மொஸாட்டுக்காக உளவு பார்த்தலில் உள்ள ரிஸ்க், அந்த வேலையில் உள்ள த்ரில், நாட்டுக்காக கடமையாற்றும் பெருமித உணர்வு, ஹனி ட்ராப் எனப்படும் அழகிகளை பயன்படுத்தி காரியங்களை சாதித்தல், உளவாளி ஒருவரை உயிருடன் இழக்கும் போது மொஸாட் அமைப்புக்கு ஏற்படும் பெரும் வேதனை ஆகியவைகளையும் உணர்ச்சிகரமாக விவரித்திருக்கிறது இந்நூல்.
என்ன ஒன்று, ஆசிரியர் சில இடங்களில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு தன்னையே மொஸாட் உளவாளி போல் பாவித்து எழுத தொடக்கி விடுகிறார். அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
இது போன்ற தலைப்புகளில் எழுதப்படும் பெரும்பாலான நூல்கள் வெறும் விக்கிபீடியா அளவில் தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறிவிடக்கூடிய பேராபத்து உள்ளது. அதை வெற்றிகரமாக கடந்து இந்த நூலை படு சுவாரஸ்யமான ஒரு புத்தகமாக வழங்கியிருக்கும் திரு சொக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
~
"மொஸாட்" - சாகசங்களில் விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய சுவாரஸ்யமான நூல்.
கிழக்கு பதிப்பகம் - விலை ரூ.175/-
~


Comments
Post a Comment