நண்பேண்டா - சுப்பிரமணியம் (எ) பாலு (எ) டியூஷன் வாத்தியார்

நண்பேண்டா

சுப்பிரமணியம் (எ) பாலு (எ) டியூஷன் வாத்தியார்


என்னை வாடா, போடா என்று கூப்பிடுபவர்கள் அரிதாகிவிட்ட இந்த நாட்களில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது வயதோ, பதவியோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றோ  வாடா போடா என்று வாத்சல்யமாக அழைக்கும் உரிமையை  என் பால்ய நண்பர்களிடம் இருந்து பறித்துவிட்டிருக்கிறது. 

சமீபத்தில் தொலைபேசியில் பேசிய என் பள்ளிக்கால நெருங்கிய நண்பன் கோபால் என்னை நீங்க..  வாங்க..போங்க... என்று அழைத்தபோது மனதிற்குள் சிறுமைப்படுவதை உணரந்தேன். அவனுடன் நான் கழித்த பள்ளி நாட்கள் அற்புதமானவை. 

ஆனால், விதிவிலக்காய் ஒரே ஒரு குரல் மட்டும் தொலைபேசியில் பேசும்போதும், நேரில் பார்க்கும்போதும் "நாயே... நாயே..." என்று நொடிக்கு நூறு நாய்களுடன் என்னை விளிக்கும். அப்போது மனம் அடையும் மகிழ்ச்சியின் அடர்த்திக்கு அளவில்லை. 

சிறுவனாய் நான் இருந்தபோது என்றோ ஒரு மழை நாளில் என் நட்பில் வந்து புதிதாய் இணைந்த என் நண்பனின் உறவினன். என்னைவிட சில ஆண்டுகள் மூத்தவன். பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை என்னுடைய சுக துக்கம், நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் என் கூடவே வந்துகொண்டிருப்பவன். என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாய் எளிதில் தன்னை இணைத்துக் கொண்டவன்.

ஒன்றாய் நிறைய கஷ்டப்பட்டோம், ஒன்றாய் நிறைவாய்  முன்னேறினோம்.. 

அவன் வளர்ச்சியில் நானும், என் வளர்ச்சியில் அவனும் பரஸ்பரம் அக்கறை செலுத்திக் கொண்டு சமூகத்தில் ஓரளவு செல்வாக்கான நிலைக்கு இருவரும்  இணைந்தே உயர்ந்துகொண்டோம். 

இன்றும் முக்கியமான தருணங்களில் இருவரும் பரஸ்பரம் ஆலோசித்துக் கொண்டு முடிவெடுப்போம். அவை பெரும்பாலும் வெற்றியடையும். 

பாலு அண்ணா என்று என் மனைவியாலும் பாலு அங்கிள் என்று பசங்களாலும், டியூஷன் வாத்தியாரே என்று என் தம்பியாலும் இன்னும் பிற மன்னார்குடி நண்பர்களாலும்  அன்பாக அழைக்கப்படும் பாலசுப்பிரமணியன் (எ) சுப்பிரமணியம் (எ) என் அன்பு நண்பன் பாலு உண்மையான நட்புக்கு உத்தமமான உதாரணம். 

நண்பேண்டா...


Comments