சினிமா - நேற்று இன்று நாளை
இன்று நேற்று நாளை (2015)
தமிழில் ஃபேண்டஸி கலந்த விஞ்ஞான கதைகள் திரையில் வருவது அரிதிலும் அரிது. அந்த வகையில் துணிச்சலாக இந்தப் படத்தை தமிழ்த் திரையுலகிற்கு அளித்ததற்கு முதலில் இயக்குநர் ரவிக்குமார் குழுவினருக்கு பாராட்டுகள்.
~
கால எந்திரம் அதாவது டைம் மெஷின் ஒன்று 2065 இல் இருந்து 2015 க்கு வந்து இங்கேயே பிரேக் டவுன் ஆகி நின்று விடுவதும், அது ஹீரோ மற்றும் அவர் நண்பர் கையில் கிடைப்பதும், அதன் மூலம் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்துக்கு தாவி சம்பவங்களை தமக்கு சாதகமாக்கி காசு பார்க்கும் அவர்கள் ஒரு கட்டத்தில் தாம் செய்யும் தவறு ஒன்றினால் பெருத்த சிக்கலில் மாட்டிக் கொண்டு பின்னர் ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு வந்து காதலியைக் கைப்பிடிப்பதும் தான் கதை.
முதல் ஸீனிலேயே ஆர்யா வந்தவுடன் கொஞ்சம் கலவரமாகித் தான் போனது. நல்லவேளை அதற்குப் பின்னர் அவர் கடைசி காட்சியில் தான் வருகிறார். இயக்குனருக்கு நன்றி.
தனக்கு கிடைத்த பட்ஜெட்டுக்குள் இது போன்ற்தொரு படத்தை குழப்பமில்லாமல் எளிமையாக எடுத்ததற்கும், திறமையாக கதை சொல்லிய நேர்த்திக்கும் இயக்குனர் ரவிக்குமாருக்கு முதலில் ஒரு ஷொட்டு.
விஷ்ணு விஷால் as usual. நடிப்பதற்கு பெரிதாக ஒன்றும் முயற்சி எடுக்கவில்லை. அதற்கான ஸ்கோப் பும் படத்தில் இல்லை. கருணாகரன் இயல்பான காமெடியில் கலக்குகிறார். ஜெயபிரகாஷ் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். மியா ஜார்ஜ் எல்லாம் வந்து போகிறார். அவ்வளவு தான். வில்லனாக வரும் ரவிசங்கர் சூப்பர். நல்ல உயரமும் ஆகிருதியுமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடல்கள் சுமார். பின்னணி இசை ரகளை. வசந்த் தின் ஒளிப்பதிவும் அருமை.
டைம் மெஷினை சாதாரண சேர் லெவெலில் காண்பிப்பது தான் உறுத்துகிறது. இன்னும் கொஞ்சம் நன்றாக டிஸைன் செய்திருக்கலாம்.
மற்றபடி இதைப் போன்றதொரு புதுமையான முயற்சியை தாராளமாக மனம் திறந்து பாராட்டி ஆதரவளிக்கலாம்.
இன்று நேற்று நாளை - ரகளை
~


Comments
Post a Comment