சினிமா - கைதி - தமிழ் (2019)

சினிமா
~
கைதி (Tamil) (2019)

கதாநாயகி இல்லாமல், காதல் காட்சிகள் இல்லாமல், அட.. ஒரு பாடல் இல்லாமல், ஒரு ஃபிளாஷ்பேக் இல்லாமல், நகைச்சுவை காட்சிகள் இல்லாமல்  ஸ்ட்ரெயிட்டாக சம்பவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு கதை சொல்லி தமிழில் ஒரு படத்தை வெற்றிப்படமாக கொடுக்க முடியும் ? 

முடியும் என்று நிரூபித்து நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
~
ஓவர் நைட்டில் தொடங்கி விடிவதற்குள் முடியும் கதை.

அண்டர்கிரவுண்டு ஆப்பரேஷனில் கோக்கேய்ன் கடத்தலை மடக்கி  800 கிலோ கொக்கெயினை பறிமுதல் செய்து யார் கண்ணிலும் மாட்டாமல் இருக்க அதை கமிஷனர் ஆபிஸிலேயே மறைத்து வைக்கிறார்கள் நரேன் தலைமையிலான சிறப்பு போதை மருந்து தடுப்புக் குழு. 

இதை அறிந்து கோபம் கொள்ளும் போதை மருந்து கும்பல் போலீஸில் இருக்கும் கறுப்பு ஆடு ஒன்றின் உதவியுடன் கொக்கெயினை மீட்கவும், சிறப்பு படையின் முக்கிய அலுவலர்கள் ஐந்து பேரை போட்டுத்தள்ளவும் வெறிகொண்டு களத்தில் இறங்குவதிலிருந்து தொடங்குகிறது விறுவிறுப்பு.

ஓய்வு பெறப்போகும் ஐஜி அந்த  சிறப்புக்குழுவினருக்கு தண்ணி பார்ட்டி கொடுக்கும்போது மதுவில் உயர்ரக போதை மருந்தை கலந்துவிடுகிறது அக்கும்பல். வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மெடிகேஷனில் இருக்கும்  மது அருந்தாத நரேன் மட்டும் தப்ப ஏனையோர் மயங்கி சரிகின்றனர். 

அவர்களை மீடியாவுக்கு தெரியாமல் புறநகரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து உயிர்காக்கவும், கடத்தல் கும்பலால் சூழப்பட்ட கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் போதை மருந்தை கடத்தல் கும்பல் கைப்பற்றாமல் தடுக்கவும்  நரேன் போராடுவதே கதை. 

இந்த இடத்தில் தான் கார்த்தி எண்ட்ரியாகிறார்.

ஆயுள் தண்டனையில் இருந்து நன்னடத்தை காரணமாக விடுதலை பெற்று வெளிவரும் கார்த்தி,  அனாதை ஆசிரமத்தில் வளரும் தன் மகளைக் காண செல்லும் போது,  சந்தேகத்தின் பேரில் லோக்கல் போலீஸாரால் கைதியாக்கப்படுகிறார். 

கார்த்தி வலுக்கட்டாயமாக நரேனால் மிரட்டி உதவிக்கு  அழைத்து வரப்பட, அவரின் துணையுடன் சக அலுவலர்களை நரேன் காப்பாற்றினாரா? கடத்தல் கும்பலிடமிருந்து கமிஷனர் ஆபிஸையும், போதை மருந்தையும் காப்பாற்றினாரா ? என்பதையும் ஆங்கிலப் பட பாணியில் ஆக்‌ஷன் திரில்லரில் செமையாக ப்ரெசண்ட் செய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தை தன் தோள்களில் சுமந்திருக்கிறார் கார்த்தி. என்னவொரு அழுத்தமான, அசாத்தியமான நடிப்பு. சூர்யாவை விட பலமடங்கு சூப்பர் நடிகராக மாறிவிட்டார் கார்த்தி.

நரேன் மற்றும் கார்த்தியுடன் படம் நெடுக கூட வரும் தீனாவும் நன்றாக நடிக்கிறார். கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார். 

கதையிலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி படம் செம நேர்த்தி. 

பின்னணி இசை மிக அருமை. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஆக்‌ஷன் கம்  திரில்லர் படத்துக்கு தேவையான விறுவிறுப்பை நன்றாக கூட்டுகின்றன. 

படம் நெடுக நிறைய காட்சிகளில் லாஜிக் உதைத்தாலும், படம் ஏற்படுத்தும் விறுவிருப்பு அதை மறக்கடித்து விடுகின்றது. 
~
ஹீரோ நெற்றி நிறைய விபூதியை  எடுத்துப்பூசும் காட்சிகள் இடம்பெறும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. 

முதலில் அசுரன்.. இப்போது கைதி. 👌

சூப்பர் 👍

கைதி - இந்த தீபாவளியின் நிஜ ஹீரோ.
~
❤️


Comments