பயணம் - கூர்க் - வரலாறு

பயணம் 

கூர்க்

தமிழில் ஏனோ முக்கியத்துவம் பெறாத இலக்கிய வடிவங்களில் பயண இலக்கியமும் ஒன்று. இன்னொரு வகை இலக்கியமும் முக்கியத்துவம் பெறவில்லை என்பது என் கருத்து. அதை பின்னர் பார்க்கலாம்.

சென்ற நூற்றாண்டில் நிறைய பயண தொடர்கள் தமிழ் இதழியல் சார்ந்து வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்போது அவ்வகை இலக்கிய வடிவத்தை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தம் தர தக்கதாகவே நினைக்கிறேன்.

இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் விகடனிலும்  பின்னர் அவரின் சொந்த இதயம் பேசுகிறது வார இதழிலும் மணியன் எழுதிய பயண தொடர்கள் மிகவும் பிரபலமானவை. ஆர்க்டிக் முதல் ஆஸ்திரேலியா வரை அவர் போகாத இடமே இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய விவரங்களை  அளித்திருப்பார் அவர். அவரின் பயண கட்டுரைகளின் ரசிகன் நான். 

இப்போது குடகின் வரலாற்றுக்கு வரலாம். 

வரலாறு 

குடகு மலை நாடாக தனியே இருந்தபோதிலும் தம் சொந்த நாட்டை அந்த மண்ணின் மைந்தர்கள் ஆண்டதாக வரலாறு இல்லை. வெளியில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் குடகு நாட்டை ஆண்டிருக்கிறார்கள். குடகர்கள் அல்லாத அரச குடும்பங்கள் தான் குடகின் மன்னர்களாக கோலோச்சியிருக்கிறார்கள். 

குடகின் வரலாற்றை பார்க்கும்போது சுங்க, சாளுக்கிய, ஹொய்சால, சோழ வம்சங்களே பெரும்பாலும் குடகின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருக்கின்றன. 

பழங்கால அரசுகளின் முடிவுக்கு பின்னர் எழுந்த விஜய நகர பேரரசு குடகையும் தங்கள் குடைக்குள் கொண்டு வந்தனர். 

விஜய நகர பேரரசு வீழ்ந்த பின்னர் அவர்களின் பாளையக்காரர்களாக இருந்த லிங்காயத்துகளான இக்கேரி நாயக்க வம்சத்தினர் குடகை கைப்பற்றிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை துவக்கினர். 

இவர்களின் ஆட்சி காலத்தில் குடகு மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்தது. இக்கேரி நாயக்க மன்னர்களில் முக்கியமானவர் தொட்ட வீர ராஜேந்திரன் ஆவார். அவர் காலத்தில் குடகு எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியது. மாபெரும் வீரரான அவருடன் பக்கத்து நாடுகள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. பெரும் போர்கள் ஏதுமின்றி மக்கள் நிம்மதியான  வாழ்க்கையை வாழ்ந்தனர். எல்லாமே ஹைதர் அலியின்  எழுச்சி வரை தான். 

மைசூரில்  உடையார் அரசு வீழ்ந்து உடையார்களின்   தளவாய் ஆக இருந்த ஹைதர் அலி  மைசூரின் சுல்தானாக தன்னை முடிசூட்டி கொண்டபின் குடகுக்கு சோதனை காலம் ஆரம்பமானது.

இயற்கை எழில் சூழ்ந்த குடகின் மீது ஹைதரின் பார்வை  விழுந்தது. துறைமுக நகரான மங்களூர் செல்ல குடகின் வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் குடகை ஆக்கிரமித்தால் போக்குவரத்து எளிதாகிவிடும் என்று கணக்கு போடுகிறார் ஹைதர்.

குடகு சிறிய நாடு தான் என்றாலும் குடகை வீழ்த்துவது எளிதாக இல்லை ஹைதருக்கு. குடவர்கள்  இயல்பிலேயே மாபெரும் வீரர்கள். அத்துடன் குடகர்களுக்கு தங்கள் நாட்டின் நிலவியல் முழுவதும் அத்துபடி. மலைகளில் மறைந்திருந்து மைசூர் படைகளின் மீது தொடர்ச்சியான கொரில்லா தாக்குதலில் வல்லமையுடன் ஈடுபட்டு ஹைதர் படைகளை விரட்டியடித்தனர்.

ஹைதருக்கு பிறகு அவர் மகன் திப்பு மைசூர் சுல்தான் ஆகிறார். குடகின் மீதான மைசூரின் பகைமை மேலும் அதிகரிக்கிறது. ஆரம்ப கால சண்டைகளில் திப்புவின் படை குடகர்களிடம் தோற்கிறது. சிறப்பான வியூகத்தினாலும், மாபெரும் படையின் வலிமையை கொண்டும் திப்பு குடகர்களை தோற்கடிக்கிறான். 

போரில் தொட்ட வீர ராஜேந்திரன் சிறை பிடிக்கப்படுகிறார். சுல்தானின் படைகள் குடகில் வெறியாட்டம் ஆடுகின்றனர். குடகு படையினரை கொத்து கொத்தாக கொல்கின்றனர்.  பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு வாள் முனையில் மத மாற்றம் செய்யப்படுகிறார்கள். 

திப்புவை வரலாறு என்னதான் புகழ்ந்துரைத்தாலும், மலபாரிலும், குடகிலும் திப்புவின் படைகள் செய்த அழிச்சாட்டியங்களே இன்றளவும் பெரும்பான்மை கன்னட மக்களை திப்புவுக்கு எதிரான மன நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. 

திப்பு பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க வியூகம் அமைக்கிறார். இந்த நேரத்தில் தான் குடகு மன்னர் தொட்ட வீர ராஜேந்திரன் சிறையில் இருந்து தப்பிக்கிறார். தப்பிய அவர் திப்புவை அழிக்க ஆங்கிலேயர்களுக்கு உதவுகிறார். 1799 இல் திப்பு ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார். போரில் உதவிய குடகு மன்னர் தொட்ட வீர ராஜேந்திரனை மீண்டும் மன்னராக்குகிறார்கள் ஆங்கிலேயர்கள். 

சில காலமே பதவியில் இருந்த வீர ராஜேந்திரன் உடல் நலமின்றி காலமாகிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் தன் மகளை அரசி ஆக்க ஆசைப்படுகிறார். அவர் விருப்பப்படி அரசியான மன்னனின் மகள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே குடகை ஆள்கிறார். வீர ராஜேந்திரனின் தம்பி லிங்கராஜா அரசியை பதவியில் இருந்து நீக்கி விட்டு தானே குடகின் அரசன் என்று முடி சூட்டி கொள்கிறான். 

அவனுக்கு பிறகு அவன் மகன் சிக்க வீர ராஜேந்திரன் குடகின் மன்னனாகிறான். குடகை ஆண்ட கடைசி மன்னன் இவன்தான். 

தன்னுடைய கூடாநட்பு, பேராசை, நிர்வாக திறமின்மை ஆகியவைகளால் மக்களின் அதிருப்தியை பெறும்  சிக்க வீர ராஜேந்திரனை ஆங்கிலேயர்கள் பதவி நீக்கம் செய்து நாடு கடத்துகிறார்கள். அவன் அரண்மனை மற்றும் செல்வம் ஆகியவைகளை அவனிடமிருந்தும்  அபகரிக்கின்றனர். குடகு நாட்டை நேரடியாக தங்களின் நிர்வாக பொறுப்பில் எடுத்து கொள்கின்றனர். 

தொட்ட வீர ராஜேந்திரனின் புகழ் மிக்க வீரம் செறிந்த ஆடசி சிக்க வீர ராஜேந்திரனால் முடிவுக்கு வந்தது. 

தனது மனைவி மற்றும் மகளுடன் வாரணாசி செல்லும் சிக்க வீர ராஜேந்திரன் 12 ஆண்டுகள் வாரணாசியில் வசிக்கிறான். பின்னர் இழந்த தன் சொத்துகளை மீட்க இங்கிலாந்து சென்று அரசியை சந்தித்து முறையிட தீர்மானித்து குடும்பத்துடன் லண்டன் செல்கிறான். அங்கேயே உயிர் இழக்கிறான். அவன் மகள் கிறித்துவராக மாறி ஆங்கிலேயர் ஒருவரை மணம் செய்து கொள்கிறாள். 

சிக்க வீர ராஜேந்திரனின் பேராசை, பெண்ணாசை, வஞ்ச்கம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு குடகு  சாம்ராஜ்யம் வீழ்ந்த கதையை பிரபல கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் "சிக்க வீர ராஜேந்திரன்" என்னும் தலைப்பில் அருமையான நூலை  எழுதியிருக்கிறார். இந்நூல் அவருக்கு "ஞானபீட விருது" பெற்று தந்தது.  ஹேமா ஆனந்த தீர்த்தன் இந்நூலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

குடகின் வரலாற்றுக்கு மீண்டும் வருவோம். 

1947க்கு பின் சுதந்திர இந்தியாவில்  குடகு ஒரு மாகாணமாக இருந்தது. 1950 இல் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி "கூர்க் மாநிலம்" என்று அது பெயர் மாறியது.  

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது கூர்க் மாநிலம் மைசூர் மாநிலத்துடன் ஒரு மாவட்டமாக இணைக்கப்பட்டது. 

பின்னர் மைசூரு மாநிலம் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
~

பி.கு: 

சிக்க வீர ராஜேந்திரன் நாவலை பற்றிய மதிப்புரை கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. வரலாற்றில் விருப்பம் உள்ளவர்கள் அதை முன்னோட்டமாக படித்துவிட்டு மாஸ்தி யின் ஞானபீட விருது பெற்ற நாவலை தமிழில் படிக்கலாம். 

http://www.nisaptham.com/2017/05/blog-post_74.html

புத்தகம் ஆன்லைனிலும் கிடைக்கிறது. அதன் இணைப்பு : 

http://marinabooks.com/detailed?id=3%200936

Comments