செல்லம்ஸ்
செல்லம்ஸ்
❤️
செல்ல நாய்களுக்கு தமிழ்நாட்டில் தான் எவ்வளவு அழகாக பெயர் வைக்கிறார்கள்.
ஜிம்மி, டைகர், சீஸர், ராஜா, மணி என்று நிறைய பொதுவான பெயர்கள்.
சுஜாதாவின் "என் இனிய எந்திரா" வந்ததுக்குப் பிறகு நிறைய வளர்ப்பு நாய்களுக்கு "ஜீனோ" என்று பெயர் வைப்பது வழக்கமானது. நாங்களும் "ஜீனோ" என்று எங்கள் பொமேரேனியன் ஒன்றுக்கு பெயர் வைத்திருந்தோம். படு இண்டெலிஜெண்ட் அவன்.
அன்பு, ஆக்ரோஷம், அறிவு மூன்றும் கலந்த கலவை அவன்.
~
மன்னார்குடி பிருந்தாவன நகரில் தம்பிகளின் செல்ல நாய் ஒன்றின் பெயர் "பூச்சி". பூச்சியை நினைவுபடுத்திய குமார் என்கிற சிவகுமார் செல்வராஜுக்கு Sivakumar Selvaraj நன்றி.
அப்பறம், ஒரு நாய்க்கு சேகர் என்று பெயர் என்று மறைந்த அமரர் அண்ணன் காசிநாதன் Kasinathan Govindharaj சொன்னார்.
மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவி கொஞ்சிய நாய்க்கு சுப்பிரமணி என்று பெயர். Ravichandran Ra நினைவுபடுத்தினார் அதை.
தேவர் படங்களில் எந்த விலங்கு நடித்தாலும் அதன் பெயர் ராமு தான். நாய், குதிரை, ஆடு, மாடு, குரங்கு, பாம்பு ஏதாயிருந்தாலும் ராமு தான். சில படங்களில் ஹீரோ பெயரும் ராமு தான். இந்த ராமு பெயரின் மீது அவருக்கு அப்படி என்னதான் பிரியமோ ....
பாலு மகேந்திராவின் சதி லீலாவதி படத்தில் சொக்கலிங்க பாகவதர் கூப்பிடும் நாயின் பெயர் "சபாபதி".
நாய்களுக்கு தான் எவ்வளவு வித்தியாசமான பெயர்கள்.
~
ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்.
மன்னார்குடி பிருந்தாவன நகரில் நாங்கள் இருந்தபோது எங்களுடன் சேர்ந்து வளர்ந்த நாய் முருகன். பரம சாது. தேமே என்று திண்ணையில் படுத்திருக்கும். யாராவது கேடடை திறந்தால் நிமிர்ந்து ஒரு பார்வை. கொஞ்சம் தெரிந்தவராக இருந்தால் படுத்துக் கொண்டே சின்னதாய் ஒரு வாலாட்டல். அவ்வளவு தான் அதன் ஆக்டிவிடி.
ஒத்தை தெருவில் இருந்து பெரிய கோவிலுக்கு போய் ராஜகோபாலனை சேவித்துவிட்டு அப்படியே எங்கள் வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த என் ஒண்ணு விடட பெரிய தாத்தா ரிடையர்டு தாசில்தார் சீனுவாசன் அடிக்கடி சொல்வார்....
"முருகன் ஒரு ரிஷி மாதிரி. தவம் செய்யும் முனிவர். என்ன ஒரு தேஜஸ் அவன் முகத்தில். ஏதோ சாபவிமோசனத்துக்காக நாயாக பிறந்து உங்கள் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்" என்பார்.
~
ஒரு முறை வீட்டில் கொள்ளு பாட்டி ஆச்சியும் நானும் தம்பி கண்ணனும் Sai Kannan மட்டுமே இருந்த நேரத்தில் முனிசிபாலிட்டி ஜீப் வாசலில் வந்து நின்றது. நானும் தம்பியும் ரொம்ப சின்னவர்கள் அப்போது.
ஜீப்பை விட்டு ரெண்டு பேர் இறங்கி கேட்டை திறந்தனர். சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட முனிவர் முருகன் அவர்களை உற்றுப் பார்த்து அதிசயமாய் குரைக்க தொடங்கினார்.
வந்தவர்கள் விழுந்தடித்து ஜீப்புக்கு ஓடினார்கள். ஜீப்புக்குள் இருந்து சத்தமாக " நாயை கட்டுங்க... " என்றார் அந்த அதிகாரி. வாசல் ஜன்னல் கம்பியில் முருகனைக் கட்டிய பின்னரும் அவர் குரைப்பதை நிறுத்தவில்லை.
"முருகா... இப்ப பேசாம இருக்க போறியா... இல்ல நாலு சாத்து சாத்தட்டுமா..." என்று கோபமாக ஆச்சி சத்தம் போட்டார்.
அந்த அதிகாரியின் முகம் கலவரமானது. கோபமாக ஜீப்புக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
பின்னர் மெதுவாக உள்ளே வந்த கிளார்க் சொன்னார்.... "பெரியம்மா.., ஆபீசர் பேரும் முருகன் தாங்க... அப்ரூவ்டு பிளான் படி வீடு கட்டிருக்கீங்களா என்று செக் பண்ண வந்திருக்காருங்க..." என்றார்.
அவ்வளவுதான், ஆச்சிப் பாட்டி இப்ப கலவரமாயிட்டாங்க. கமிஷனர் வந்த ஜீப் வேகமாக சீறிப் பாய்ந்து புறப்பட்டு சென்று விட்டது.
~
அப்புறம், கமிஷனரின் பெண்களுக்கு என் பாட்டி பாட்டு சொல்லிக் கொடுத்ததும், அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்கள் ஆனதும், கமிஷனர் சென்னைக்கு மாற்றலாகி சென்றபின்னரும் அவர்களுடனான நட்பு தொடர்ந்ததும், அவரின் பெண்களின் திருமணங்களுக்கு நாங்கள் சென்று வந்ததும் தனிக்கதை.
~
😊


Comments
Post a Comment