சினிமா - முண்டாசுப்பட்டி


முண்டாசுப்பட்டி (2014)
தமிழக கிராமங்களில் நிலவி வந்த சில வித்தியாசமான நம்பிக்கைகளின் அடிப்படையில் எண்பதுகளில் பொண்ணு ஊருக்கு புதுசு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதன் பிறகு அந்தமாதிரி கதைக்களம் கொண்ட திரைப்படம் நீண்ட நாட்களாக எதுவுமே வரவில்லை.

அந்தக் குறையை தீர்க்க நீண்ட இடவெளிக்குப் பிறகு வந்தது தான் முண்டாசுப்பட்டி.

புகைப்படம் எடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுள்ள ஒரு கிராமத்தில் மனிதர்கள் இறந்தபின்னரே புகைப்படம் எடுப்பார்கள். அவ்வாறு இறந்துபோன கிராம தலைவரின் தந்தையை புகைப்படம் எடுக்க உதவியாளருடன் சென்று, எடுத்த அந்த புகைப்படம் சொதப்பிவிட,  அந்த கிராமத்திலேயே கிண்று தோண்டும் தண்டனை பெற்று, தலைவரின் பெண்ணை காதலித்து எவ்வாறு எதிர்ப்புக்கிடையே அவரையே ஹீரோ மணமுடிக்கிறார் என்பது தான் கதை.
~
விண்கல் ஒன்று கிராமத்தில் வந்து விழுவது, அது விழுந்தவுடன் கிராமத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளைகாரர்கள் செத்துப்போவது, அக்கல்லை வானமுனி என்று கடவுளாக்கி ஊர்மக்கள் வணங்குவது, இதற்கிடையே இந்த விண்கல் பற்றி அறிந்து அதை திருடி வெளிநாட்டுக்கு விற்க முயலும் பக்கத்து ஊர் ஜமின் என்று ஸைடு டிராக்கிலும் படம் சுவாரஸ்யமாக பயணிக்கிறது.
~
ராம்குமாரின் வித்தியாசமான கதைக்கு,  நகைச்சுவை காட்சிகள் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தித் தருகின்றன. கிணறு தோண்டும் காட்சி போன்றவை நீளமாக இருக்கின்றன. தாட்சண்யமின்றி கத்திருத்திருக்கலாம்.

முனீஸ்காந்தாக நடிக்கும் ராம்தாஸ் கலக்குகிறார். கதாநாயகன் விஷ்ணு விஷாலின் உதவியாளராக நடிக்கும் காளி வெங்கட் டும் ஹஸ்கி குரலில் பின்னி எடுத்திருக்கிறார்.

பீரியட் படத்திற்கான நேர்த்தியான கலை அமைப்பு, சபாஷ் கோபி ஆனந்த். 

பி.வி. ஷங்கரின் கச்சிதமான  ஒளிப்பதிவு இயக்குனருக்கு பெரிய பலம். 

அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஷான் ரோல்டனின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
~
முண்டாசுப்பட்டி முழுமையான பொழுதுபோக்கு.
~

Comments