மதம் பிடித்த மதம் - பெந்தெகொஸ்தே

பெந்தேகொஸ்தே

BY Narenthiran PS


Notices of Madras and Cuddalore in the last Century என்கிற கிறிஸ்தவ மிஷினரி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 

1726-ஆம் வருடம் தமிழகத்து இந்துக்களை மதமாற்றம் செய்ய வந்த டச்சு பாதிரியான ஷுல்ட்ஸ் (Benjamin Schultze) என்பவர் எழுதிய சுவாரஸ்யமான குறிப்புகள் கொண்ட புத்தகம். அன்றைய இந்தியாவிற்கு மதமாற்றம் செய்ய வந்த மிஷினரிகளுக்கு பைபிள் சொசைட்டி ஆஃப் இங்கிலாந்தும், ஜெர்மனியும் பண உதவிகள் செய்து அனுப்பி வைத்தன. அப்படி வந்தவர்களுள் ஒருவர்தான் பெந்தகோஸ்தே (நொந்தகோஷ்டி என்றும் பாடம்!) பாதிரி ஷுல்ட்ஸ். 

பெரும்பாலும் தரங்கம்பாடியில் இருந்து கடலூர், பறங்கிப்பேட்டை, சென்னைப் பகுதிகளில் பரிசுத்த ஆவியின் அருமை, பெருமைகளைச் சொல்லி மதம் மாற்றுகிற வேலை அவருடையது. அதில் அவர் அதிகம் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை என்றாலும் ஓரளவிற்கு வழிதவறிய ஆடுகளை மந்தைக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார் என்று தெரிகிறது!

அவர் வந்த காலத்தில் பைபிள் சீகன்பால்க் "ஐயரால்" (Ziegenbalg) தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சீகன்பால்க் ஐயரானவர் மேற்படி ஷுல்ட்ஸ் பாதிரி வருவதற்கு முன்பு இறந்துவிட்டதாக அல்லது இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது (நல்லவேளையாக  சீகன்பால்க்கை ஐயராக்கினாக்கினார்கள். விதியின் பயணாக அவரை ஐயங்காராக்கியிருந்தால் இன்றைக்குத் தெருவுக்குத் தெரு "சீகன்பால்க் ஐயங்கார் பேக்கரிகள்" முளைத்திருக்கும் என்கிற நினைப்பே வயிற்றைக் கலக்குகிறது!). 

சீகன்பால்க்கின் பைபிள் வழக்கொழிந்து, தீவிர சைவரான யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரால் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளே இன்றைக்கு பெருமளவில் புழங்குகிறது என்கிற செய்தியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

ஷுல்ட்ஸ் அன்றைய தமிழகத்தின் நிலையைக் குறித்தான சுவாரஸ்யமான செய்திகளை வழங்குகிறார். தாம்பரம் பகுதியெல்லாம் காடுகள் இருந்திருக்கின்றன. புலிகளும், யானைகளும் சென்னையைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த செய்தி நமக்கு ஆச்சரியமான செய்திதான். 

ஷுல்ட்ஸ் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகப் போய் சுவிஷேஷப் பிரசங்கம் செய்கிறார். ஆனால் ஆடுகள் மந்தையை நோக்கி வரத் தயங்குகின்றன. 

சிதம்பரம் கோவிலுக்குள் போய் அதன் கட்டிடக் கலையை வாய் பிளந்து பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் நீங்களெல்லாம் கல்லை வணங்குகிறீர்கள், பிசாசை வணங்குகிறீர்கள் என்று சீறுகிறார். ஆடுகள் அதனை ஆமோதிக்கின்றன. நாங்கள் கல்லின் வழியே கடவுளைக் காண்கிறோம் என்று சொல்லி வெறுப்பேற்றுகின்றன.

தமிழில் ஏற்கனவே பைபிள் வந்துவிட்டதால் ஷுல்ட்ஸ் தெலுங்கு மொழியை ஆள் வைத்துக் கற்றுக் கொள்கிறார். பிறகு பைபிளை தெலுங்கில் மொழிபெயர்த்து முடிக்கிறார் (ஆனால் அது அச்சில் வந்ததாகத் தெரியவில்லை).

தமிழர்களை ஏமாற்றி மதம் மாறச் செய்யப் பெரும் தடையாக இருப்பது அதன் வலிமையான சாதிய அமைப்புதான் என்பதனைக் கண்டுபிடுத்து புலம்பித்தள்ளுகிறார். சாதிய அமைப்பை உடைக்காதவரைக்கும் தமிழர்களை மதம்மாற்றுவது நடக்கவே நடக்காது என்பது அவருக்குத் தெரிகிறது. இருந்தாலும் பத்து, இருபது ஆடுகள் மந்தையை வந்தடைகின்றன. டானிஷ் மிஷன் பள்ளிகள் துவங்கப்படுகின்றன.

ஆனால் கத்தோலிக்க பாதிரிகள் மதம் மாற்றுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருப்பதனைப் பார்க்கிறார். மேரி சிலையையும், இரண்டு கட்டைகளை சிலுவையாக்கி பறங்கிமலை போன்ற பகுதிகளில் ஆன்ம அறுவடை செய்வதனைப் பார்த்து, பெந்தகோஸ்தர்களும் இப்படியாகப்பட்ட தந்திரங்களைச் செய்ய வேண்டும் என்று குமுறுகிறார். 

கத்தோலிக்க போர்ச்சுக்கீசிய பாதிரிகள் பரங்கிமலைக்குள் பெந்தகோஸ்டரான ஷுல்ட்சை அனுமதிக்காமல் விரட்டியடிக்கிறார்கள். பரங்கிமலை செயிண்ட் தாமஸ் என்பவரால் கட்டப்பட்டது என்பதினை முழுவதுமாக நிராகரிக்கிறார் ஷுல்ட்ஸ். தாமஸ் விரலால் வரைந்ததாகக் கூறப்படும் சிலுவையைச் சுற்றி எழுதியிருக்கும் எழுத்துக்களைப் படிக்க முனையும் அவரை நெருங்கவிடாமல் கத்தோலிக்க பாதிரிகள் துரத்தியடிக்கிறார்கள்.

ஷுல்ட்ஸ் அப்பாவி தமிழர்களை மதம்மாற்ற கத்தோலிக்க பாதிரிகள் செய்யும் தகிடுதத்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறார் (அவற்றில் பல இன்றைக்கும் உபயோகிக்கப்படுகின்றன. உதாரணமாக, மரணப்படுக்கையில் இருப்பவன் ஒருவனுக்கு அவனோ அவனது குடும்பத்தாரோ அறியாமல், எதிர்பாராமல் ஞானஸ்னானம் செய்வது போன்றவை.)

சீகன்பால்கின் பிராமண வெறுப்பு உலகறிந்தது. அவரே இன்றைய தமிழகத்தின் பிராமண வெறுப்பிற்கு விதை தூவியவர். மலபாரி பிராமணர்களுடன் அவர் நடத்திய விவாதங்களை "Conferences with Malabarian Brahmins" என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார் (என்னிடம் இருக்கிறது. கொஞ்சம் பழைய ஆங்கிலம். "S" எழுத்தையெல்லாம் "f" என எழுதியிருப்பார்கள்). சீகன்பால் கண்ணனூரிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கிற பகுதிகளை மலபார் என்கிறார். எனவே அனேகமாக அந்த விவாதங்கள் கேரள பிராமணர்களுடன் அவர் நடத்தியிருக்க வேண்டும். அவரது பிராமண வெறுப்பு அங்கிருந்தே துவங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது.

பெஞ்சமின் ஷுல்ட்சும் தமிழ்நாட்டு பிராமணர்களை மதம்மாற்ற முயன்று தோற்றவர்தான். யாரோ ஒரு தமிழ் நாட்டு பிராமணர் அவருக்கு அனுப்பிய கேள்விகளை இன்றைக்கும் தமிழ்நாட்டு இந்து ஆன்மிகவாதிகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் . அன்றைக்கு ஷுல்ட்ஸ் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயலவில்லை அல்லது அவரால் இயலவில்லை. இன்றைய மிஷினரிகளாலும் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. 

இப்படியெல்லாம் கேள்வி கேட்டு சங்கடப்படுத்தும் பிராமணர்களை மிஷனரிகள் வெறுப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
~

Comments