கேரளா மாடல் - நோக்கு கூலி என்னும் அராஜகம்
கேரளா மாடல்
நோக்கு கூலி என்னும் அராஜகம்
நோக்கு கூலி தொடு கூலி என்றெல்லாம் சிலவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேரளாவை பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் குண்டர்களும் சங்கங்களும் இவற்றை மிக பிரசித்தமாக வைத்திருக்கின்றன.
அனுபமா என்னும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே இதனால் பாதிக்கப்பட்ட பிரச்சனை எல்லாம் நடந்திருக்கிறது அது மிகப்பெரிய அளவில் ஊடகங்களிலும் அடிபட்டு விவாத பொருளானது.
அது என்ன நோக்கு கூலி என்கிறீர்களா ?
நீங்கள் ஊருக்கு போக ரயில் நிலையம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பொட்டி படுக்கையுடன் சென்று ரயில் நிலையத்தில் இறங்குகிறீர்கள். அங்கே சடாரென்று இருவர் வந்து எந்த வண்டி என்று கேட்பர். நீங்கள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்று சொன்னால் விடுவிடுவென்று உங்கள் சாமானை கொண்டு வண்டியில் வைத்துவிட்டு காசு கேட்பார்கள்.
நீங்கள் தரமாட்டேன் என்று சொல்ல முடியாது.
ஆரம்பத்திலேயே நீங்கள் வேண்டாம் நாங்களே தூக்கிக்கொள்கிறோம் என்று சொன்னால் உங்கள் சாமான் செட்டை நீங்களே தூக்குவதை அப்படியே உற்று பார்ப்பார்கள். அதற்கு நீங்கள் கூலி தர வேண்டும்.
இல்லை உங்கள் சாமானை தொட்டு விட்டு கூலி கேட்பார்கள். அது தொடு கூலி. நீங்கள் தரவேண்டும் இல்லை பிரச்சனை தான்.
என் தம்பி போன்ற ஒருவன் பஹ்ரைனில் வேலையில் இருக்கிறான். அவனுடன் வேலை செய்யும் பலர் வடக்கு மலபாரை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள். கேரளாவின் இடதுசாரி குண்டர்களின் சொர்க்க பூமி அது தான்.
அங்கு சில காலம் முன்பு ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் ஒரு கடையை திறந்திருக்கிறார்கள். அதற்கு வைக்க ஒரு எஸ்கலேட்டர் வந்திருக்கிறது. அதை தூக்கி வைக்க ஒரு கிரேனும் வந்திருக்கிறது.
அவ்வளவு தான்.., எங்கிருந்தோ வந்துவிட்டனர் சகாவுகள்.
லால் சலாம் சகாவே.. நீங்கள் கிரேனில் எல்லாம் தூக்கி வைக்க முடியாது. நாங்கள் தான் தூக்கி வைப்போம் என்று ஒரே பிரச்சனை.
சரி தகராறு வேண்டாம் என்று கடை நிர்வாகமும் நீங்களே தூக்கி வையுங்கள் என்று ஒதுங்கி கொண்டது. கூலி பேசும்போது எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டதற்கு கிரேன் வாடகை 4000/- அதை கொடுத்து விடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சகாவுகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை 80,000/- வேண்டும் இல்லை என்றால் எஸ்கலேட்டரை இறக்க முடியாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். கடை நிர்வாகமும் இது என்னடா வம்பு என்று சரி என்று தலையாட்டியிருக்கிறது.
எங்கிருந்தோ ஒரு நூறு பேரை திரட்டிக்கொண்டு வந்து "சோர வீண மண்ணில்" என்று பாடிக்கொண்டும் "இன்குலாப் சிந்தாபாத்" என்று கத்திக்கொண்டும் சாரம் எல்லாம் வைத்து கட்டி எஸ்கலேட்டரை தூக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
முடியவில்லை நாளை வருகிறோம் என்று கூறிவிட்டு மறுநாள் இன்னும் கொஞ்சம் ஆட்களை திரட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் நகர்த்த கூட முடியவில்லை. Infact அதை அசைக்க கூட முடியவில்லை.
நிர்வாகம் நாங்கள் இதற்கு தான் சொன்னோம் கிரேனிலேயே தூக்கி வைத்துக்கொள்கிறோம் என்று என்க அது தான் சரி என்று ஒத்துக்கொண்ட சகாவுகள் இரண்டு நாட்கள் கூலியாக ஒரு 90,000/- கேட்டிருக்கிறார்கள்.
பெரும் பேரத்திற்கு பிறகு நிர்வாகம் 50,000/- கொடுத்து முடித்துக்கொண்டு கிரேனை வைத்து தூக்கி பொருத்தியிருக்கிறார்கள்..
இது தான் கேரளாவின் கம்யூனிசம். ஒரு தொழிற்சாலை கூட விவசாயம் உட்பட ஒரு தொழில் கூட கேரளாவில் உருப்பட முடியாமல் போன காரணம் இது தான்.
அதனால் தான் வீட்டிற்கு ஒரு மலையாளி உலகின் பல பாகங்களில் சென்று பிழைத்துக்கொண்டு இருக்கிறான்.
தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு கூட கேரளா கிடையாது. ஆனால் அந்த சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு கூட ஒரு வாழ்க்கையை சொந்த ஊரிலேயே ஏற்படுத்த முடியாமல் தான் தவிக்கிறது அந்த மாநிலம்.
அமர்த்தியா சென் போன்ற கோமாளிகள் இதை தான் கேரளா மாடல் என்றார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சென்று பிழைக்க வழியில்லை என்றால் பெரும்பாலும் மலையாளிகள் டீக்கடை வைத்துக்கொண்டு தான் பிழைப்போட்ட வேண்டியிருந்திருக்கும்..
~
By Gopinath R


Comments
Post a Comment