சினிமா - கலைஞர்களின் கலைஞன் - சிவாஜி கணேசன

சினிமா

கலைஞர்களின் கலைஞன் - சிவாஜி கணேசன


கணேசன் நடையப் பாருடா... ஸ்டைலப் பாருடா...

இது என் ஒன்றுவிட்ட சகோதரன் கிருஷ்ணன்.
~

மாயவரத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுடன் சிவாஜி படம் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்ட டயலாக்.
~

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு போன்ற சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு நாங்கள் சிவாஜியை சகட்டுமேனிக்கு ஓட்டும் போதெல்லாம் கண்கள் கலங்க பதிலடியாக  "தெய்வ மகன் பாருங்கடா, வசந்த மாளிகை பாருங்கடா, அப்புறம் வந்து பேசுங்கடா"...  என்று கூறும்  மாமா   என்றழைக்கப்படும் மன்னார்குடி பிருந்தாவன் நகர் மோகன்.
~

தனது தோற்றத்தாலும், முகபாவங்களாலும் சிவாஜியை நினைவுறுத்தும் தேசிய மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத்.
~

கெட்ட வார்த்தை ஒன்றை அழகாய் சிவாஜி பாணியில் அடிக்கடி டெலிவரி செய்யும் ஸ்ரீதர் சார்.
~

மன்னார்குடி சாந்தி தியேட்டரில் திரிசூலம் பார்த்துவிட்டு வந்த இரவில் எங்கள் வீட்டில் திருடன் புகுந்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது.
~

எங்களின் வளரிளம் காலத்தில் ஒவ்வொரு நாளும், கணமும் சிவாஜி எங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
~

மற்ற நடிகர்களுக்கு வேண்டுமானால் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் சிவாஜி, கமல், அஜித் ஆகியோருக்கு இருப்பவர்கள் ரசிகர்கள் இல்லை. பக்தர்கள்.

அவர்களுக்கு அவர்களின் தெய்வத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை.
~

சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூரில் நான் பணியாற்றியபோது என்னுடன் கூட பணியாற்றிய ஒரு சீனியரிடம் 'பாசமலர் படத்தை என்னால் பத்து நிமிடங்கள் தொடர்ந்து பார்க்க முடியவில்லை..'  என்பதை கூறி நான்  வாங்கி கட்டி கொண்டதை என்றும் மறக்கமுடியாது.  

இதோ இப்போது கூட பாருங்கள்,  நான் உறுப்பினராக இருக்கும் ஒரு முகநூல் குழுவில் தினசரி "இரவின் மடியில், ஸ்டைலிஷ் ஆன நடிப்பில் 'திலகத்தின்' பாடல் ஒன்று.." என்று ஒருவர் பதிவுகளாக போட்டுக்கொண்டிருக்கிறார். 

திலகம் என்றால் கொஞ்ச நேரம் புரியவில்லை எனக்கு. அப்புறம் தான் தெரிந்தது "நடிகர் திலகம்" என்பதை தான் short form ல் திலகம் என்கிறார். 

அவருக்கு திரையுலகில் ஒரே ஒரு திலகம் மட்டும் தான். 

சிவந்த மண் படத்தை பற்றி போகிற போக்கில் ஏதோ ஒரு பதிவில் நான் சற்று உரசிவிட்டு போக, சட்டென பற்றிக் கொண்ட நெருப்பில் இருந்து நான் தப்பி வர பெரும் பாடு ஆயிற்று. கடைசியில் அந்த பதிவையே அட்மின் தூக்க வேண்டிய நிலைமைக்கு சென்று விட்டது. இத்தனைக்கும் அது சிவாஜி பற்றி எழுதப்பட்ட பதிவல்ல. வேறொரு இயக்குனர் பற்றிய பதிவு அது.
~

சிவாஜி இன்றும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார். 

என்றும் வாழ்வார். 

கலைஞனுக்கு மரணமில்லை. சிவாஜி 'மகா கலைஞன் '.

PC : Jeeva Nanthan

Comments