சினிமா - மைல்கல் சினிமா - அவள் அப்படித்தான்

ரசித்துப்படித்தது
~
அவள் அப்படித்தான்
by Rajeshwar K

திரைப்படக் கருத்தாடல் 

ஒரு திரைப்படத்தைப் பற்றி அதிக தகவல்களையும் மேம்போக்கான அபிப்பிராயத்தையும் கூறுவது வெறும் ஆய்வு [review]. அதைப் பற்றிய அழுத்தமான பார்வையை வைப்பது திறனாய்வு [criticism]. திரைப்படத்தைப் பற்றிய நுண்ணறிவைப் புகல்வது மதிப்பீடு [appreciation]. 

வெறும் ஆய்வு செய்பவனுக்கு திரைப்படக் கலையின் தொழில்நுணுக்கம் தெரிந்திருப்பதில்லை. திறனாய்வு செய்பவனுக்கு திரைப்படத் தொழில் நுணுக்கம் கொஞ்சமும், தன் கருத்தியல் சார்ந்த பார்வை அதிகமும் கொண்டவனாக இருக்கிறான். இந்த இரண்டு பிரிவுக்குள் தான் நம் விமரிசகர்கள் இருக்கிறார்கள். 

நல் மதிப்பீடு செய்பவன் அரிதாக, அரூபமாக இருக்கிறான். சமீபத்தில் ஒரு வழிபாட்டு வடிவாக்கப் பட்ட ஒரு திரைப்பட இயக்குனரின் படத்தை அவரது வாழ்க்கையை வழிபாட்டு வரலாறாக எழுதிய ஒரு ‘விமரிசகர்’ டேவிட் லீநின் டாக்டர் ஷிவாகோ படத்துக்கு நிகராக ஒப்பீட்டு இருந்தார். 

கடவுளே! ஒரு படத்துக்கு செறிவும் செழுமையும் ஆழமும் அர்த்தமும் எப்படிக் கிடைக்கிறது? ஒரு படைப்பாக்கம் என்பது என்ன? கதாப்பாத்திரங்கள், அவர்கள் வாழ்வில் நிகழும் நெருக்கடிகள், வாழும் சமூகமும் நடக்கும் சம்பவங்களும்; அவ்வளவே. இதை விவரணையாகச் சொன்னால் அது வெறும் தகவல் சார்ந்த வெற்றுக் கதையாகிறது. அதில் சமூகப் பார்வை கலந்து சொன்னால் சற்றே உயர் கலையாகிறது. உளவியல் கலந்தால் இன்னும் உயர்கிறது. ஆன்மீகப் பார்வையுடன் படைக்கப்பட்டால் உன்னதமாகிறது. ஆகப் படைப்பாளியும் அவனுடன் பங்கேற்கும் சஹஹிருதயர்களும் சமூக, உளவியல், ஆன்மீக பார்வை கொண்டவர்களாகவும் பயிற்சி உள்ளவர்களாகவும் இருந்தாலே படைக்கும் படைப்பு உன்னதமாகும் சாத்தியம் உண்டு. 

மாஸ்லோவா என்னும் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை டால்ஸ்டாயின் கை பட்டு ‘புத்துயிர்ப்பு’ என்னும் உன்னத இலக்கியமாயிற்று. எப்படி? முன் குறிப்பிட்ட சமூக,  உளவியல், ஆன்மீகப் பார்வையல்லவா காரணம்?

 ‘அவள் அப்படித்தான்’ தமிழ் சமூகத்தின் கூட்டு நனவில் [collective consciousness] ஏற்படுத்திய தாக்கம் அதனலாலன்றோ? எப்பேர்பட்ட கரங்கள் அதில் கோர்த்து நின்றன? 

இடதுசாரி சிந்தனையாளரும் ‘புதிய அலை’ இயக்குனருமான மறைந்த நண்பர் ருத்ரையா, ‘நடமாடும் சினிமா பல்கலைக் கழகம்’ என்று அறியப்பட்ட மறைந்த அனந்து, உலக இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஒப்பாக அறியப்படும் வண்ணநிலவன் மற்றும் நான் என்று இத்தனை பேரின் அனுபவ அறிவின் கூட்டு தான் ‘அவள் அப்படித்தான்’. 

மேலும் எழுத்துக்கு வடிவம் கொடுத்த கலைஞர்கள் பின்னாளில் லெஜன்ட் ஆன கமல்ஹாசன், ரஜினி மற்றும் இளையராஜா ஆகிய இவர்களின் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடும் ஸ்ரீப்ரியா வின் அகவுணர்வுத் தூண்டுதலின் இயல்புத் தன்மையும் அதற்குக் கிடைத்த பரிமாணம் அதற்கு முன் கண்டறியாதது, 

இன்னொருமுறை செய்யத்தான் முடியுமா? 

மிகை நாடகமாக்கப் பட்ட காட்சிகள் கிடையாது, அதிர்ச்சி ஒன்றே அளிக்கவேண்டும் என்ற நோக்கில் சொல்லாடல் இராது, அமெச்சூர் தரமான நடிப்பு கிடையாது, செய்யப்பட்ட கதாப்பாத்திரங்கள் கிடையாது. 

இதற்கு ஒப்பிடப் படமொன்று இன்னும் உருவாகவில்லை என்பது படைத்த எங்களுக்கு பெருமிதம் உண்டு; பெருமை இல்லை. அப்படி ஒன்று உருவானால் தான் பெருமை. ஏதோ ஒன்றை இப்படைப்புடன் ஒப்பிட்டதனால் இது ஒன்றும் குறைந்திடப் போவதில்லை; அதனால் ஒப்பிடப்படும் ஏதோ ஒன்றின் தரம் தான் தெரிந்து விடப்போகிறது. ஒப்பிட்டவரின் தரமும் சேர்த்து. 

ராஜேஷ்வர் கே
~
பி.கு: ராஜேஷ்வர் பன்னீர் புஷ்பங்கள், அவள் அப்படித்தான், கடலோரக்கவிதைகள் போன்ற படங்களின் கதாசிரியராகவும், இதயத்தாமரை, அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களின் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.

Comments