அஞ்சலி - விசு - வெகுஜன கலைஞர்
அஞ்சலி
விசு
தமிழ் திரைப்பட ரசிகர்கள் விசுவின் மரணத்தை ஜஸ்ட் லைக் தட் கடந்து போய்விட முடியாது. தமிழ் திரையுலகில் அவருக்கென்று ஒரு பாணி இருந்தது, எம்.ஆர்.ராதா போல. அது வேறு எவராலும் பின்பற்ற முடியாத ஒன்று.
குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு மூலம் தமிழ் திரையுலகில் அவர் மின்னத் துவங்கினாலும் அவர் சூரியனைப் போல் பிரகாசித்தது சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலம் தான்.
சம்சாரம் அது மின்சாரம் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருது பெற்றது. பின்னர் பல மொழிகளில் அப்படம் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடியது.
அதன் பின் அவருக்கென ஒரு ஸ்டைல், ஒரு தனிப்பாதை உருவானது. அந்த பாதையில் ராஜநடை போட்டார். அதே பாணியில் உருவான அவரின் பெரும்பாலான படங்கள் பின்னர் வரிசையாக வெற்றி பெற்றன.
நடுநடுவே பிற இயக்குனர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தார். இந்த வகையில் நல்லவனுக்கு நல்லவன், அருணாச்சலம் போன்ற படங்கள் மறக்க முடியாத படங்கள்.
ஒரு ஸ்டேஜில் அவரின் வழமையான பாணி அலுப்பூட்ட ஆரம்பித்ததும், அவரே அதை உணர்ந்துகொண்டு சின்னத்திரைப் பக்கம் வந்துவிட்டார்.
இதுவரை வெளிவந்த தமிழ் சின்னத்திரை டாக் ஷோக்களிலேயே ஆகச்சிறந்த வெற்றிகரமான டாக் ஷோ அவரின் "அரட்டை அரங்கம்' தான்.
பெரிய மற்றும் சின்னத் திரைகளில் மறக்க முடியாத ஒரு ஆளுமை விசு.
~
சமீபத்தில் என் உறவினர் ஒருவரிடம் பேசும்போது சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் என் உறவினர் தனது மனைவியின் டயலிஸிஸ் க்காக சென்றபோது பக்கத்து பெட்டில் விசு வும் டயலிஸிஸ்க்கு வந்திருந்ததாகவும், அவருடன் பேசும்போது மிகவும் விரக்தி மன நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
நம்மையெல்லாம் வெகு காலம் மகிழ்வித்த ஒரு ஜீவன், துயரமான மனநிலையில், அருகில் சொந்தங்கள் யாருமற்ற சூழலில், மரணித்துப் போவது என்பது எவ்வளவு கொடூரமானது.
இறைவா உன் திருவடி நிழலில் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்து என்று பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி


Comments
Post a Comment