ரெட்ரோ மூவிஸ் - அன்பே வா - தமிழ் (1966)
ரெட்ரோமூவி
அன்பே வா(1966)
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
நான் அறுபதுகளின் படங்கள்/பாடல்களின் பெரும் ரசிகன் கிடையாது. இருந்தபோதிலும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அன்பே வா படத்தை ஒருமுறை கட்டாயம் பார்த்துவிடவேண்டும் என்று நினைப்பேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு MGR படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன் நேற்று.
அன்பே வா AVM நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஒரே MGR படம் என்று நினைக்கிறேன். படம் பார்த்து முடித்தபின் அவர்கள் இன்னும் நிறைய படங்கள் MGR ஐ வைத்து எடுத்திருக்கலாமே என்று தோன்றியது.
அன்பே வா - வழக்கமான MGR படம் கிடையாது. அவருக்கே கூட கதையை கேட்கும்போது ஆச்சரியம் உண்டாகியிருக்கலாம்.
சிம்பிள் ரொமான்டிக் லவ் ஸ்டோரி தான் அன்பே வா.
தொடர்ச்சியான வேலைப்பளு தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட பிரபல தொழிலதிபர் JB சிம்லாவில் உள்ள தன்னுடைய பங்களாவில் சிறிது நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் வருகிறார். வந்தபின் தான் தெரிகிறது பங்களா பொறுப்பாளர் கிருஷ்ணையா தன்னுடைய மைத்துனர் ராமய்யாவிடம் பங்களாவை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு மனைவியுடன் காசி சென்றிருக்கிறார் என.
ராமையா பணத்தாசையால் பங்களாவை பெங்களூரில் இருந்து வரும் தொழிலதிபர் புண்ணியகோடி குடும்பத்துக்கு சில நாட்கள் தங்குவதற்காக வாடகைக்கு விட்டுவிடுகிறார்.
இந்த நேரத்தில், தான் முதலாளி என்னும் அடையாளத்தை JB மறைத்துக் கொண்டு, தன்னையும் அங்கு தங்க அனுமதிக்குமாறு ராமய்யாவிடம் கூறி பணமும் தருகிறார்.
JB யை சந்தித்திருக்காத ராமையா பணத்துக்காக அவரையும் அங்கு தங்க அனுமதிக்கிறான்.
அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் புண்ணியகோடியின் மகள் கீதாவுக்கும் JB க்கும் ஏற்படும் உரசல்கள், இருவரின் ஈகோ, அதனால் ஏற்படும் மோதல்கள், கீதாவை காதலிப்பதற்காக JB சொல்லும் பொய்கள்... என்று படம் படு சுவாரஸ்யமாக செல்லும் வேலையில் கீதாவின் முறை மாப்பிள்ளை அசோகன் என்ட்ரி ஆகிறார்.
கீதா-JB காதல் என்ன ஆனது, அசோகனை கீதா கைப்பிடிக்கிறாரா..? JB என்ன ஆனார் என்பவையெல்லாம் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
வழக்கமாக MGR படங்களில் அவர் ஏழைப்பங்காளனாக வருவார். சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் வில்லன்களை நையப் புடைப்பார். கடைசியில் போலீசில் அவர்களை பிடித்து கொடுப்பார்...
ஆனால் இந்த படம் அவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை. கதையில் உண்மையான வில்லன் நாயகன்-நாயகி இருவருக்குமிடையிலான ஈகோ தான்.
படம் நெடுகிலும் MGR ன் எனர்ஜி லெவல் வியக்க வைக்கிறது. இந்த படம் வெளிவந்தபோது அவருக்கு சற்றேறக்குறைய 50 வயது இருக்கலாம். ஆனால் பூச்செடிகளை தாண்டி குதித்து சிம்லா பங்களாவுக்குள் அவர் என்ட்ரி ஆகும் அந்த சீனில் அவர் கலக்குகிறார். என்ன ஒரு லாங் ஜம்ப் அது. படம் நெடுகிலும் காதல் ரசம் சொட்டும், புத்துணர்ச்சி ததும்பும் அவரின் முகம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. பாடல் காட்சிகளில் அவரின் ஆட்டமும், சட் சட்டென மாறும் முகபாவங்களும் கலக்கல். குறிப்பாக ராக் அண்ட் ரோல் பாணியிலான "நாடோடி ..." பாடலில் அவர் ஆடும் அந்த twist dance செம. என்ன ஒரு வேகமான ஆட்டம் அது.
MGR படம் என்பதாலேயே இரண்டு சண்டை காட்சிகள் வைத்திருக்கிறார்கள். முதல் சண்டை MGR ரசிகர்களுக்கேற்றவாறு படமாக்கப்பட்டிருக்கிறது. க்ளைமாக்சில் வரும் இரண்டாம் சண்டை படம் முடிய வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட சண்டை. அந்த சண்டை இறுதியில் MGR உடன் சண்டை போடும் அந்த பயில்வான், சரோஜாதேவி MGR ஐ காப்பாற்றுவதற்காக குறுக்கே புகுந்து MGR ஐ கட்டியணைக்கும்போது, "லவ்லி பைட்" என்றவாறு புன்னகைத்தபடி வித்டிரா ஆகிறார்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு அம்சம் பாடல்கள். MSV புகுந்து விளையாடியிருக்கிறார்.
புதிய வானம்...
உள்ளம் என்றொரு கோவிலிலே..
லவ் பேர்ட்ஸ்....
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
என்று அனைத்து பாடல்களும் அருமை.
"நாடோடி..." பாடல் மட்டும் காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் "விஸ்வநாதன் வேலை வேணும்..." பாடலை நிறைய நினைவுபடுத்துகிறது.
படத்தில் உறுத்தல் என்னவென்றால் சிம்லா என்று காட்டும் நிறைய காட்சிகள் உண்மையிலேயே ஊட்டியில் படமாக்கப்பட்டிருப்பது தான். அந்த காட்சிகளில் வரும் இடங்கள் ஊட்டி தான் என்பதை எளிதாக அவதானிக்க முடிகிறது. பொதுவாய் ஏவிஎம் நிறுவனம் செலவு செய்ய அஞ்ச மாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிம்லாவிலேயே முழு படத்தையும் எடுத்திருக்கலாம்.
~
குறிப்பிட்ட ஒரு நடிகரின் ரசிகன் என்பதை ஓரம் கட்டிவிட்டு, ஒரு சினிமா ரசிகராய் "அன்பே வா" படம் பார்த்தால் கண்டிப்பாக அது பார்ப்பவர் மனம் கவரும் ஒரு படம் தான்.
அன்பே வா - அருமையான ரொமான்ஸ் லவ் ஸ்டோரி.
❤️


Comments
Post a Comment