பயணம் - கூர்க் - புவியியல்
பயணம்
கூர்க் - புவியியல்
ஆதி மனிதன் உணவுக்காகவும், உறைவிடத்திற்காகவும் பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டு தனக்கு வசதியான ஓரிடத்தை கண்டறிந்து அங்கு நிம்மதியான ஒரு வாழ்வியல் முறையை கைக்கொண்டு சமூக அமைப்பையும், நாகரீகத்தையும் ஏற்படுத்தினான். மனித இனம் மேற்கொண்ட முதல் பயணம் இதுவேயாகும்.
பயணம் என்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற ஒன்றாகும்.
~
இனி கூர்க் .....
நிலவியல்
கூர்க் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பிராந்தியம் குடகு என்று தமிழின் சங்க இலக்கியங்களிலும், வரலாற்றிலும், தற்கால ஆட்சியமைப்பிலும் அழைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் உள்ள குடகு பிரதேசம் தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் ஒன்றாகும்.
மங்களூரை தலைமையிடமாக கொண்ட தட்சிண கன்னட மாவட்டத்தை வடமேற்கு எல்லையாகவும், ஹாசன் மாவட்டத்தை வட எல்லையாகவும், மைசூரை கிழக்கு எல்லையாகவும், கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தை மேற்கு எல்லையாகவும், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை தென் மேற்கு எல்லையாகவும், அதே கேரளத்தின் வயநாடு மாவட்டத்தை தெற்கு எல்லையாகவும் கொண்டுள்ளது.
குடகு மாவட்டம் தனது எல்லையின் கணிசமான பகுதியை கேரளாவுடன் பகிர்ந்து கொள்கிறது.
முழுக்க முழுக்க மலை பிரதேசமான குடகு மாவட்டம் குறைந்தபட்சமாக 350 அடி கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த நிலப்பரப்பிலும் அதிகபடசமாக 5600 அடிக்கு அதிகமான உயரத்திலும் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த குடகில் தான் கங்கைக்கு ஒப்பான காவிரி நதி, தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது. குடகு, மைசூர், மாண்டியா வழியாக ஓடி தென் கர்நாடகத்தை செழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
குடகின் சராசரி தட்ப வெப்ப நிலை குறைந்த பட்சம் 10 டிகிரி C அதிகபட்சம் 25 டிகிரி C. குளிர் காலங்களில் மட்டும் 5-10 டிகிரி C குறைந்த அளவுக்கு செல்லும்.
மிதமான இந்த தட்ப வெப்பத்துக்காகவே ஆங்கிலேயர்கள் குடகை Scotland of South India என்று அழைக்கின்றனர்.
குடகின் ஆண்டு சராசரி மழையின் அளவு 300 செண்டிமீட்டர். ஆனால் 2018இல் ஆகஸ்ட்மாதத்தில் கிட்டத்தட்ட 250% அதிகமாக பெய்த மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டு 20 பேருக்கும் அதிகமானோர் பலியாகினர். பல இடங்களில் நிலசரிவும், பெருமளவு பொருடசேதமும் ஏற்பட்டுள்ளது.
எல்லோரும் கேரளா வெள்ளம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம் அப்போது. கேரளாவுக்கு சற்றும் குறையாமல் கர்நாடாகாவிலும் பெரு மழை பெய்திருக்கிறது. எக்கசக்க பேர் பலியாகி வாழ்வாதாரங்கள் அழிந்து சூறையாடப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு கிடைத்த மீடியாவின் விளம்பர வெளிச்சமும், நிதியும் கர்நாடகாவுக்கு கிடைக்காத வருத்தமான நிலையை எங்கள் பயணத்தில் பார்த்தோம்.
அங்கிருக்கிறது நுண்ணரசியல்.
குடகு மாவட்டத்தில் பெருவாரியான சாலைகள் இன்னமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மோசமான நிலையிலேயே இருக்கின்றன.
செல்லும் வழியெங்கும் நிறைய அழிவு சின்னங்களை பார்த்து வேதனையடைந்தோம்.
ஆனாலும் அயராத மக்களின் உழைப்பினால் குடகு மீண்டு நிற்பதையும் பார்த்தோம்.
~


Comments
Post a Comment