அஞ்சலி - மகேந்திரன்

ஆளுமை

அஞ்சலி


மிழ் சினிமாவை 70களின் இறுதியில் அடுத்த லெவெலுக்கு எடுத்துச் சென்ற முக்கியமான ஆளுமை மகேந்திரன்

ரஜினி என்ற ஒரு மனிதனின் உள்ளுக்குள் இருந்த அற்புதமான நடிப்புத் திறனை வெளியே கொண்டுவந்தது மகேந்திரன் தான். பின்னர் ஏவிஎம் முரட்டுக்காளை போன்ற படங்களின் மூலம் ரஜினியை அடிதடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிவிட்டது ரொம்ப கொடுமை.

காளி போன்ற ஒரு கேரக்டர் ரஜினியின் கேரியரில் அதன் பின்னர் அமையவேயில்லை. முள்ளும் மலரும் மகேந்திரனின் சிறந்த படம் என்றால் உதிரிப்பூக்கள் அவரின் மாஸ்டர்பீஸ்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த நேரம். எங்களுக்கெல்லாம் ஆதர்ச குரு எதிவீட்டு வரதராஜ் நைனா. CRC யில் கண்டக்டர். அவர் வீட்டு திண்ணை தான் எங்களின் பொழுதுபோக்கு தளம். 

NSK யின் மிக தீவிர ரசிகரான அவர் NSK இறந்தபின்னர் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டார். NSK பற்றி தான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருப்பார். 

அவர் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பி திண்ணையில் மோட்டுவளையை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மெதுவாக அவர் அருகில் சென்றேன். 

"குமார், உதிரிப்பூக்கள் னு ஒரு படம் தஞ்சாவூரில் பார்த்தேன். மனசை என்னமோ செய்யுது. என் வாழ்க்கைல இப்படி ஒரு படம் பார்த்து கலங்கிப்போனதேயில்லை" என்று அழ ஆரம்பித்து விட்டார்.

அந்த படத்தின் கதையையும் காட்சிகளையும் பலமுறை சிலாகித்து சொல்லியிருக்கிறார். ஏனோ அந்தப் படத்தை அப்போது நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் அதன் வீரியம் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

பின்னர் சென்னைக்கு வேலைக்கு வந்தபின் தூர்தர்ஷனில் தான் முதன்முறையாக பார்த்தேன். அந்த படத்தின் க்ளைமேக்ஸ் செவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது.

"நான் செஞ்ச தப்புகளிலேயே மோசமான தப்பு என்னை மாதிரியே உங்களையும் மாத்தினது தான்" ந்னு ஊர் மக்களிடம் விஜயன் பேசும் அந்த காட்சி இன்னமும் கண்களில் நிற்கிறது.

மிகவும் குறைந்த ஆனால் அழுத்தம் நிறைந்த வசனங்கள்,  சூழ்நிலைக்கு தக்க பாடல்கள் மற்றும் பின்னணி இசை,  கண்களை உறுத்தாத இயல்பான கேமிரா கோணங்கள்,  சாதாரண நடிகர்கள்,  ஆர்ப்பாட்டமில்லாத கேரக்டர்கள், பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வந்து வாசகர்கள் படித்த கதைகளை விஷுவல் ட்ரீட்டுகளாக அளிப்பது.., இவை தான் அவரின் மிகப்பெரிய பலம்.

அவரின் ஓடாத படங்கள் கூட காவியங்கள் தான். ஜானி, பூட்டாத பூட்டுகள், நண்டு, மெட்டி ஒலி.. இவையெல்லாம் இப்போது cult movies.

நண்டு படத்தின் "மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே..." இன்று கேட்டாலும் என் கண்கள் கலங்கும். 

மகேந்திரன் சார் இறந்த அன்று இப்பாடலை பலமுறை யூடியூபில் பார்த்தேன்.

அந்த ஒரு நான்கு நிமிட பாடல் எவ்வளவு சம்பவங்களை கோர்வையாக சொல்லும் தெரியுமா? 

"அள்ளித் தந்த பூமி.." பாடலில் காணும் லக்னோ நகரம் நாம் அங்கு வசிக்கமாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். 

மலேஷியா வாசுதேவனுக்கு ஒரு வாழ்நாள் பாடல் அது.

அரவிந்த்சாமியை வைத்து எடுத்த "சாசனம்" வித்தியாசமான கதைக்களம் கொண்டது. நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஸ்வீகார முறையையும், அவர்களின் வாழ்வையும், கனமான கதையுடன் வழங்கியிருந்தார்.

சிவாஜி நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் ஆகிய படங்களின் கதாசிரியர் இவரே. 

சின்னவயதில் செய்த தவறை எண்ணி குற்ற உணர்வு கொள்ளும் ரிஷிமூலம் படத்தின்  சிவாஜியின் அந்த கேரக்டர் ... சே.., சான்ஸே இல்லை. அற்புதம்.

கங்கா, காளி போன்ற கமர்ஷியல் படங்களுக்கும் இவர் தான் கதை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்.

இவர் கஷ்டப்பட்ட காலத்தில் MGR தன் அலுவலகத்தில் இவரை தங்க வைத்து "பொன்னியின் செல்வன்" படத்துக்கு திரைக்கதை எழுத சொன்னார் என்று கூறுவார்கள்.

இவரின் அந்த ஸ்க்ரிப்ட் கிடைத்தால் மணிரத்னம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். 

கடைசியாக பேட்ட படத்தில் அவரைப் பார்த்தேன். ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்த கம்பீர ஆளுமையை நண்பர்களிடம் வியந்து கூறினேன்.

எல்லோரும் ஒரு நாள் இந்த உலகை விட்டு போகவேண்டியவர்களே. ஆனால் போகும்போது அவர்களுக்காக விழும் கண்ணீர் துளிகள் தான் அவர்கள் வாழ்ந்த  வாழ்க்கையின் அர்த்தத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்.

நீங்கள் விட்டுச்சென்ற இடம் இங்கு அப்படியே தான் இருக்கும். இட்டு நிரப்ப முடியாத இடம் அது.

இன்னொரு பிறவி எடுத்து மீண்டும் உங்கள் இடத்துக்கு வாருங்கள் மகேந்திரன் சார். 

ஆன்மா அமைதியில் இளைப்பாற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.!!
~



Comments

Post a Comment