இசை - மல்லிகை என் மன்னன் மயங்கும்

இசை 
~
வாணிஜெயராம் 

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் 
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது

குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி 
கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான் 
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ

என் தேவனே உன் தேவி நான் 
இவ்வேளையில் 
உன் தேவை என்னவோ  

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........
~

நண்பர்   ஜானி செல்வனின் Facebook  timeline இல் பகிர்வு செய்யப்பட்டிருந்த இந்த பாடலின் ரீமிக்ஸை  "ம்யூசிக் பவுல்" ப்ரியா குரலில் கேட்டதிலிருந்து மனசு உருகி வழிந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. 

திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.  மனம் நெகிழ்ந்துகொண்டேயிருக்கிறது. 

இந்த பாடலின் ஒரிஜினல் மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் பாடியது. 
~

வாணி ஜெயராம் என்ற பெயரைக் கேட்டவுடன் சட்டென எல்லோருக்கும் நினைவில் வருவது "மல்லிகை என் மன்னன் மயங்கும்.." பாடல் தான். அந்த  குரலில் தான் என்ன ஒரு லாவகம்.., என்ன ஒரு குழைவு.., என்ன ஒரு உணர்வு.. 

அந்த பாடல்,  இனிமையான ஒரு தேனருவி சலசலத்து காதுகளுக்குள் விழுந்து மனதில் அலைகளை பரப்பி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு அற்புத உணர்வை கொடுக்கும்.  

மெல்லிசை மன்னர் MSV அவர்களின் பிற்கால பாடல்களுக்கு ஒரு டாப் 10 பட்டியல் போட்டால் கண்டிப்பாக இந்த பாடலை அந்த லிஸ்டில் சேர்த்தேயாக வேண்டும். 

நானெல்லாம் MSV யின்  பிற்கால பாடல்களின் ரசிகன். 
~

மும்பையில் வசித்துவந்த தமிழரான வாணி ஜெயராம் முதலில் இந்தி பாடல்கள் தான் பாடிக்கொண்டிருந்தார். ஜெயாபச்சனின் "குட்டி"(Guddi)(1971) இல் அவர் பாடிய "போலே ரே பப்பிஹரா ..." ஹிந்தி இசையுலகை இவர் பால் திரும்பி பார்க்கவைத்தது. 

அடுத்து, அவரின் "மீரா பஜன்ஸ்". அதில் ஒவ்வொரு பாடலும் அற்புதம். வாணியின் குரலை பக்த மீராவின் குரலாக அடையாளம் காட்டியது அப்பாடல்கள். இசை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

பின்னர் வரிசையாக இவர் பாடிய ஹிந்தி பாடல்கள் பல சூப்பர் ஹிட்.  அதுவரை குறிப்பிட்ட சிலர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த ஹிந்தி திரை இசை உலகில் இவரின் வருகை அதிர்வலைகளை எழுப்பியது. தனக்கென ஒரு இடத்தை இவர் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தியில் பிடிக்க ஆரம்பித்தபோது திரை மறைவில் இவர் வாய்ப்புகளை கெடுத்து இவரை புகழ்பெறவிடாமல் செய்ய  நிறைய சதி  வேலைகள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.  

ஆனால், தென்னகத்திற்கு இது நல்லது தான் செய்தது. 
~

வாணி சென்னை வந்தார். "மல்லிகை என் மன்னன் மயங்கும்..." பாடலின் மூலம் ஒரு புயலாக தமிழ் திரை இசையில் நுழைந்தார். 

சுசிலாவின் குரலுக்கு மாற்று தேடிக்கொண்டிருந்த தமிழ் இசை ரசிகர்களுக்கு,  அவர்கள் எதிர்பார்த்த மாற்றுக்குரலாக வாணியின் குரல் ஒலிக்க தொடங்கியது. 

மெல்லிசை மன்னரும், சங்கர் கணேஷும், விஜயபாஸ்கரும். வி.குமாரும் மாறி மாறி வழங்கிய வாய்ப்புகள் அவரை நிலையாக இங்கேயே தங்க வைத்தது. 

MSV இசையில் வெளிவந்த "அபூர்வ ராகங்கள்"(1975) திரைப்படத்தில் வாணி பாடிய "கேள்வியின் நாயகனே....", "ஏழு ஸ்வரங்களுக்குள் .." ஆகிய பாடல்கள் யாராலுமே பாடமுடியாத கடினமான ராக அமைப்புடைய பாடல்கள். அசாதாரணமாக அவைகளை பாடிய வாணிக்கு அந்த ஆண்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. 

அவரின்  திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்தவர் திரை இசைத்திலகம் கே,வி, மகாதேவன் அவர்கள். தெலுங்கில், ஏன் நாடு முழுவதுமே,  பரபரப்பாக பேசப்பட்ட சங்கராபரணம் படத்தில் வாணி பாடிய "ப்ரோ சேவரா ..." உட்பட  அப்படத்தில் அவர் பாடிய நான்கு பாடல்களுக்காகவும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.  

அதே போல கே. விஸ்வநாத் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் "சுவாதி கிரணம்" படப்பாடல்களுக்காகவும் வாணிக்கு தேசிய விருது கிடைத்தது. 

கன்னடத்தில் விஜயபாஸ்கர் தனது இசையில்  பல பாடல்களை வாணிஜெயராமை  பாடவைத்து ஹிட் ஆக்கியிருக்கிறார். SPB + வாணி + விஜயபாஸ்கர் கூட்டணி கன்னட இசையுலகை தொடர்ந்து சில வருடங்கள் ஆண்டது. 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, வங்காளம்.. ஆகிய பல மொழிகளில் சளைக்காமல் பாடியிருக்கிறார் வாணி. அவர் பாடிய ஒவ்வொரு மொழி பாடல்களுக்காகவும் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ விருதுகள் பெற்றிருக்கிறார். 

அதிகமான வாய்ப்புகள் வழங்கவில்லை என்றாலும்,  யாராலும் பாட முடியாத சவாலான பாடல்களை வாணியை பாட வைத்து,  அவைகளை சூப்பர் ஹிட் பாடலாக ஆக்கி காட்டியிருக்கிறார் இளையராஜா. 

நானே நானா.... யாரோ தானா... ஒன்று போதுமே. 

வேறு யாராவது இதைவிட அருமையாக இப்பாடலை பாடியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? 
~

வாணி பாடிய சில அற்புதமான பாடல்கள் : 

மல்லிகை என் மன்னன் மயங்கும்.... தீர்க்கசுமங்கலி 

மல்லிகை முல்லை பூப்பந்தல் ..... அன்பே ஆருயிரே 

முத்தமிழில் பாட வந்தேன் ..... மேல் நாட்டு மருமகள் 

ஏழு ஸ்வரங்களுக்குள் .... அபூர்வ ராகங்கள் 

கேள்வியின் நாயகனே ....அபூர்வ ராகங்கள் 

நாதமென்னும் கோவிலிலே... மன்மத லீலை 

அந்தமானை பாருங்கள் அழகு ..... அந்தமான் காதலி 

நித்தம் நித்தம் நெல்லு சோறு ..... முள்ளும் மலரும் 

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா ..... இளமை ஊஞ்சலாடுகிறது 

என்னுள்ளில் எங்கோ.... ரோசாப்பூ ரவிக்கைக்காரி 

நானே நானா ..... அழகே உன்னை ஆராதிக்கிறேன் 

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் ..... அழகே உன்னை ஆராதிக்கிறேன் 

பாரதி கண்ணம்மா ..... நினைத்தாலே இனிக்கும் 

மேகமே மேகமே .... பாலைவனசோலை 

வா வா என் வீணையே ..... சட்டம் 

கவிதை கேளுங்கள் ...... புன்னகைமன்னன் 

ஏ பி சி நீ வாசி ..... ஒரு கைதியின் டைரி 



அப்புறம்.... முத்தாய்ப்பாக.., 

யாரது..  சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...  ❤️❤️

பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இத்துடன் நிறுத்துகிறேன். 
~

புலி முருகன் (2016) மலையாள படத்தில் வாணி பாடிய "மானத்தே மறுகுறும்பே..."  பாடல் ஒரிஜினல் சாங்ஸ் கேட்டகரியில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
~

1970ல் தொடங்கிய இசைப்பயணம் இன்னமும் வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இவருடன் பாடிய பலருக்கும் குரல் உடைந்துவிட்டது. ஆனாலும் வாணியின் குரல் அதே இனிமையுடன் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

ஏழு ஸ்வரங்களுக்குள் வாணியின் இசை ராஜ்ஜியம் எத்தனை எத்தனையோ எல்லைகளை  தொட்டு வெற்றிக் கொடியை பறக்கவிட்டு,  மேலும் மேலும் பரந்து  விரிந்து கொண்டேயிருக்கிறது.

❤️

Comments