சினிமா - 'மக்கள்கலைஞர்' ஜெய்சங்கர்

சினிமா

'மக்கள்கலைஞர்' ஜெய்சங்கர்



நான் தமிழ் சினிமா பார்க்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் -  எம்.ஜி.ஆர். படங்களில் நடிப்பதை விட்டு விட்டு தீவிர அரசியலில் நுழைந்து முதல் அமைச்சர் ஆகிவிட்டார். இருந்தும் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வந்தார். அல்லது ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்று கொள்ளலாம்.

நடிகர் திலகம் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் என்னை வெகுவாக கவரவில்லை.  அல்லது அவர் லெவலுக்கு எனது ரசிப்புத் தன்மை வளரவில்லை.

ஆனால், என் போன்ற சிறு வயது சினிமா ரசிகர்களின் ஆரவார ஹீரோ வாக அந்த காலகட்டத்தில் இருந்தவர் ஜெய் சங்கர் தான்.

அவரின் "துணிவே துணை" தான் என்னை அவர்பால் ஈர்த்த முதல் படம். 1977 அல்லது 78 என்று நினைக்கிறேன். நான் அப்போது மயிலாடுதுறையில் படித்துக் கொண்டிருந்தேன். கூறைநாடு நகராட்சி மேல்நிலைப் பள்ளி. ஏழாம் வகுப்பு. அப்போது தான் நிறைய சினிமாக்கள் பார்க்க துவங்கியிருந்தேன்.

சுந்தரம் தியேட்டரில் வெளியிடப்பட்ட 'துணிவே துணை' படத்தை காண நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினோம். நான் பார்த்த முதல் ஜெய் சங்கர் படமே என்னை அவரின் பரம விசிறியாக்கி விட்டது.

அதன் பிறகு மன்னார்குடிக்கு  வந்தோம். மன்னார்குடியில் 'செண்பகா' என்றொரு திரை அரங்கம் உண்டு. அங்கு எப்போதுமே பழைய படங்கள் தான் திரை இடப்படும். தரை டிக்கெட் ஐம்பது காசு.

ஜெயசங்கரின் பழைய படங்கள் அங்கு திரை இடப்படும் போதெல்லாம் கண்டிப்பாக நாங்கள் அங்கு இருப்போம். என்  நண்பர்களும் பெரும்பாலும் ஜெயசங்கரின் ரசிகர்கள் தான்.

சி.ஐ.டி. சங்கர், வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், யார் நீ, போன்ற துப்பறியும், திகில் படங்களை அங்கு தான் பார்த்தோம்.

கல்லூரி படிப்பு முடித்துவிட்டு பட்டம் பெற்று திரை உலகில் நடிக்க வந்தவர்கள் அப்போதெல்லாம் மிக சிலரே. அவர்களில் மக்கள் கலைஞர் ஜெயசங்கரும் ஒருவர். முதுநிலை பட்டம் பெற்ற அவர் சட்டம் படித்துக் கொண்டிருக்கும் போது நடிப்புத் துரையின் பாற் ஈர்க்கப்பட்டு நடிக்க வந்தார்.

முதன் முதலில் 'சோ' அவர்களின் நாடகக் குழுவில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் பின்னர்  மெதுவாக பல்வேறு குழுக்களிலும் நடிக்கத் துவங்கி திரைத் துறைக்கு வந்து சேர்ந்தார்.

1965 இல் வெளிவந்த 'இரவும் பகலும்' தான் அவரின் முதல் படம். அதன் பின்னர் ஒரே ஏறுமுகம் தான். 2000 இல் அவர் மாரடைப்பால் மரணமடையும் வரை   கிட்டத்தட்ட இருநூறு படங்களில் நடித்து முடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சி வந்த தமிழ்த் திரையில் இவர் தனக்கெனத் தனி இடம் ஒன்று பெற்று அதை பல்லாண்டுகள் தக்க வைத்திருந்தது சரித்திர சாதனை தான்.

மக்கள் கலைஞரின் ஸ்பெஷாலிட்டி அவர் எந்த நடிகருடனும் இணைந்து நடிக்க தயங்காதது தான். சமகாலத்தில் அவரின் போட்டியாளர்கள் எனக் கருதப்பட்ட ரவிச்சந்திரன், முத்துராமன் போன்றோருடன் இணைந்து அவர் பல படங்கள் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் சண்டை படங்களில் நடித்திருந்தாலும் - அதனால் தான் 'தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கப்பட்டார் -  குடும்ப படங்கள், நகைச்சுவை படங்கள், கதாநாயகியை பிரதானமாக கொண்டிருந்த படங்கள் ஆகியவற்றிலும் திறமையாக நடித்திருப்பார்.

பல தரப்பட்ட மக்களையும் கவரும் வண்ணம் அவரின் படங்கள் அமைந்திருந்ததினால் தான் 'மக்கள் கலைஞர்' என்ற சிறப்பான பட்டத்தை அவரால் பெற முடிந்தது. உழைக்கும் வர்க்கம், மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் இவரின் ரசிகர்களில் பெரும்பான்மை பிரிவினர் ஆயினர்.

ஒரு கால கட்டத்தில்,  பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவரின் படங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு படங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. இதனாலேயே அவர் 'வெள்ளிக்கிழமை நாயகன்' -  Friday Star - என்றழைக்கப்பட்டார்.

அப்போதெல்லாம் இலங்கை வானொலி தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்.  இலங்கை வானொலியில்  'மக்கள் கலைஞர்' என்று  எல்லா அறிவிப்பாளர்களாலும் இவர் அன்புடன் அறிவிக்கப்படுவார். இலங்கையில் அவரின் படங்கள் பெரு வெற்றியடையும்.

முழுக்க முழுக்க இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட 'டாக்சி டிரைவர்', 'ரத்தத்தின் ரத்தம்' ஆகிய படங்களின் ஹீரோ இவரே.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய 'வண்டிக்காரன் மகன்' படத்தில் நடிக்க யாரும் முன்வராத நிலையில் துணிச்சலுடன் கதாநாயகனாக நடித்துக் கொடுத்தார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தது.

'வண்டிக்காரன் மகன்' தந்த வெற்றிக்கு பிறகு மேலும் சில படங்களில் கலைஞர் கதை வசனத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.

'முடிசூடா மன்னன்' என்றொரு சரித்திர கதை அமைப்புடன் கூடிய படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படமும் பிளாப்.

கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்த இவரின் திரை உலக வாழ்வின் முக்கியமான ஒரு கால கட்டத்தில்  அப்போது வளர்ந்து கொண்டிருந்த ரஜினிக்கு நேரெதிர் வில்லனாக நடிக்க பிரபல திரை நிறுவனம் ஒன்று இவரிடம் கோரிக்கை விடுத்தது. மறுக்காமல், அதை ஏற்று வில்லனாக வேடம் தரித்து  அந்த படத்தை மாபெரும் ஒரு வெற்றிப்படம் ஆக்கினார்.

அது 'முரட்டுக்காளை'.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் பெருந்தன்மையை ரஜினி வெகுவாக சிலாகித்திருந்தார்.

ஒரு நிலை கடந்ததும், வயது ஏறிவரும் சூழலிலும், காலம் மாறி வந்து கொண்டிருந்த சூழலிலும் கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிராமல் குணசித்திர வேடங்களை ஏற்று அதிலும் சிறப்பாக பரிணமித்தார்   மக்கள் கலைஞர்.

மக்கள் கலைஞர் நடித்த சில திரைப்படங்கள் :

இரவும் பகலும்

குழந்தையும் தெய்வமும்

சி.ஐ.டி. சங்கர்

வல்லவன் ஒருவன்

வல்லவனுக்கு வல்லவன்

யார் நீ

பட்டணத்தில் பூதம்

மன்னிப்பு

பூவா தலையா

தேன் கிண்ணம்

நூற்றுக்கு நூறு

நவாப் நாற்காலி

அக்கரை பச்சை

அத்தையா மாமியா

பிராயச்சித்தம்

வைரம்

நீ ஒரு மகாராணி

ஒரே வானம் ஒரே பூமி

கீழ்வானம் சிவக்கும்

தீர்ப்பு

வாழ்வே மாயம்

விதி

பூவே பூச்சூடவா

அபூர்வ சகோதரர்கள்

ஊமை விழிகள்

அருணாசலம்

-- அவர் கௌபாய் ஆக நடித்திருந்த பல படங்களை இதில் குறிப்பிடவில்லை . தமிழில் வெளிவந்த வெஸ்டன் பாணி படங்களில் பல படங்களுக்கு ஹீரோ இவர் தான்.

விளம்பரம் இல்லாமல் பல உதவிகளை தேவைப்படும் பலருக்கும் தேவைப்படும் நேரங்களில் வாரி வழங்கி, நிஜமான 'மக்கள் கலைஞர்' ஆகவே வாழ்ந்தவர் இவர்.

அதே ஈகை குணத்துடன், அவர் காட்டிய வழியில், இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி உதவிகள் புரிந்து கொண்டிருக்கிறார் அவரின் இளவல்  பிரபல கண் மருத்துவர் - டாக்டர் விஜயசங்கர்,

தொழில், வாழ்க்கை இரண்டிலும் இவர் பெற்றது 'நூற்றுக்கு நூறு' - யாருக்கும் வாய்க்காத பெரும் பேறு.

❤️

Comments