லைப்ரரி - வெட்டுப்புலி - தமிழ்மகன்

லைப்ரரி


வெட்டுப்புலி




தமிழ்மகனின் "வெட்டுப்புலி" நாவலை முழுவதும் படித்து முடித்து விட்டேன். 

பழைய செங்கல்பட்டு மாவட்ட வடபகுதியையும், வாழ்ந்த மக்களையும், கதைக்களமாக, கதைமாந்தர்களாகக் கொண்டிருப்பது அநேகமாக இந்த நாவல் மட்டுமே தான் என்று நினைக்கிறேன். அந்த வகையில் முதலில் கதாசிரியருக்கு ஒரு சல்யூட்.
~
1930 களில் துவங்கும் கதை தமிழ்நாட்டில் அப்போது தான் எழுச்சி பெறத் துவங்கிய திராவிட இயக்க வளர்சியினுடே பின்னி பிணைந்து செல்கிறது. 

"வெட்டுப்புலி" Cheetah Fight -  தீப்பெட்டியின் மேல் அட்டையில் அரிவாளை ஓங்கி, சிறுத்தை ஒன்றுடன் சண்டையிடும் மனிதன் படம் ஒன்றை அநேகமாக நாம் அனைவருமே பார்த்திருப்போம். 

சிறுத்தையுடன் சண்டையிட்டு அதனை கொன்ற சின்னா ரெட்டி என்பவர் தனது முன்னோர்களில் ஒருவர் என்பதை அறிந்து அவரை பற்றி அறிந்து கொள்ள தனது நண்பர்கள் இருவருடன்  பூர்வீக கிராமமான தமிழக ஆந்திர எல்லையில் உள்ள ரங்காவரம் என்னும் கிராமத்திற்கு வரும் அமெரிக்காவில் வாழும் தமிழ்செல்வன் என்னும் இளைஞனின் பார்வையில் விரியும் கதை,  கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை வரலாற்றின் பின்னணியில் நமக்கு தருகிறது. 

இதுவரை நான் படித்திராத வட்டார மொழி ஆரம்பத்தில் கதையை தொடருவதறுக்கு சற்று அலுப்பை ஏற்படுத்தினாலும், தமிழும் தெலுங்கும் கலந்த அந்த பிராந்திய மொழி பழக ஆரம்பித்ததும்  கதையில் ஆர்வம் ஏற்படத் துவங்குகிறது. 

 கதை போகிற போக்கில் ஏராளமான வரலாற்று தகவல்களைத் தொட்டுக் கொண்டே செல்கிறது. 

பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார் ஏன் விடுதலைப்புலிகளின் பிராபகரன் கூட கதையில் பாத்திரமாக ஆங்காங்கே தேவைப்படும் நேரங்களில் வந்து செல்கிறார்கள். 
~
தென்னிந்திய நல உரிமை சங்கம் திராவிடர் கழமாக மாறியதில் இருந்து, திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பிரிந்து கொண்டே சென்ற அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் கதையின் களமாக கொண்டு வந்து கச்சிதமாக நிறுத்தியிருப்பதிலும், அந்த களத்தில் நடமாடும் மக்களாகிய கதை மாந்தர்களின் உணர்வுப் போராட்டங்களை யதார்த்தமாக சொல்லியிருப்பதில் தமிழ்மகன் அசத்தி இருக்கிறார்.

பிராமண துவேஷம் என்ற சிங்கிள் பாயிண்ட் அஜெண்டாவில் வளர்ந்த இயக்கம்  திராவிட இயக்கம் என்ற பொதுவான ஒரு கருத்தை  லெட்சுமண ரெட்டியார், கணேசன், நடராசன், நடேசன், பாலு, ரவி போன்றோரின் வாழ்வினூடாக வெளிக்கொண்டு வந்து இருக்கும் விதத்தில்  factual ஆக கதை சொல்ல வேண்டும் என்கிற கதாசிரியரின் பேரவா புலப்படுகிறது. 

கிருஷ்ணப்ரியா, பிரபாஷ் மற்றும் பிரபாஷின் அப்பா போன்ற பிராமண கதாபாத்திரங்கள் ஊடாக அவர்கள் பக்க நியாங்களையும், யதார்த்த நிலையை புரிந்து கொண்டு பிரச்சினைகளை அறிவின் துணை கொண்டு அணுகும் அவர்களின் திறமையையும் பார்த்து வியந்து தான் போக வேண்டியிருக்கிறது.

கதை மாந்தர்கள் பலர் ஆங்காங்கே காணாமற் போய்விடுவதும், கதையின் காலவரிசைக் குழப்பங்களும், உறவு முறைகள் அவ்வப்போது மாற்றி மாற்றி கூறப்படுவதும், கதையின் விறுவிறுப்பான வாசிப்புக்கு வேகத் தடைகளாக உள்ளன. 

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகள் வரை நிதானமாக செல்லும் கதை எண்பதுகளுக்கு பிறகு ஏனோ படுவேகமாகவும், விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் எழுதப்பட்டது போல தோன்றுவதும் கண்டிப்பாக ஒரு குறையாக தென்படுகிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
~
மொத்தத்தில் தமிழ்மகனின் "வெட்டுப்புலி" சென்ற நூற்றாண்டில் தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்து கிடந்த திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, எழுச்சி மற்றும் பரிதாபகரமான வீழ்ச்சி ஆகியவைகளை விருப்பு வெறுப்பு ஏதுமின்றி நேர்மையான கதைக்களன் மற்றும் கதாபாத்திரங்களின் வாயிலாக பதிவு செய்துள்ளது.

~
😊

Comments